மனுஷன் ஜாலியாக இருக்காரு... யாரும் ஓட்டி பார்க்காத வாகனத்தை ஓட்டி பார்த்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்!!
டெஸ்லா (Tesla) சிஇஓ எலான் மஸ்க் அமெரிக்காவின் டெக்ஸாஸில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருக்கும் சைபர்டிரக் எலக்ட்ரிக் வாகனத்தை இயக்கி பார்த்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் எலான் மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவை பற்றி இனி பார்க்கலாம்.
உலகளவில் தற்சமயம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் வாகனம் என்று பார்த்தால், அது டெஸ்லாவின் சைபர்டிரக் என சொல்லலாம். ஸ்கெட்ச்சில் வரைந்தாற் போன்று, மிகவும் எளிமையாக, அதேநேரம் கம்பீரமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சைபர்டிரக் ஏற்கனவே பலத்தரப்பட்ட மக்களை கவர்ந்துவிட்டது. இதனால் இந்த எலக்ட்ரிக் டிரக் எப்போது அறிமுகமாகும் என பலர் காத்திருக்கின்றனர்.

பொது மக்கள் மட்டுமின்றி, டிரக் வாகனங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக விளங்கும் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்டவை கூட டெஸ்லா சைபர்டிரக்கின் அறிமுகத்தின் மீது ஒரு கண் வைத்துள்ளன. ஆனால், இந்த அளவிற்கு எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த எலக்ட்ரிக் வாகனத்தை இப்போது அறிமுகம் செய்துவிடுவோம், அப்போது அறிமுகம் செய்துவிடுவோம் என டெஸ்லா தாமதம் செய்து வருகிறது.
டெஸ்லா சைபர்டிரக்கின் படங்களை சில வருடங்களுக்கு முன்பே பலர் பார்த்திருப்பீர்கள். இத்தனை வருடங்களாகி விட்டதால், அந்த படங்களில் காட்சிதந்த சைபர்டிரக் அறிமுகமாகாது. அதில் இருந்து மேம்படுத்தப்பட்ட தோற்றத்தில் சைபர்டிரக் அறிமுகம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், அதே தோற்றத்தில் தான் சைபர்டிரக் அறிமுகமாகும் என்பதை கூறுவதுபோல், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் டுவிட்டரில் சமீபத்தில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Just drove Cybertruck around Austin! pic.twitter.com/QN19Agqa7R
— Elon Musk (@elonmusk) July 8, 2023
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "அஸ்டினில் சைபர்டிரக்கை இயக்கினேன்" என்பதாகும். அதாவது, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள அஸ்டின் நகரத்தில் சைபர்டிரக்கை எலான் மஸ்க் இயக்கி பார்த்துள்ளார். அவர் இயக்கி பார்த்த சைபர்டிரக்கின் படத்தையும் அவர் தனது அந்த டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் காட்சித்தரும் சைபர்டிரக் ஆனது நாம் ஏற்கனவே படங்களில் பார்த்தவையாகவே உள்ளது.
டெஸ்லா நிறுவனம் சைபர்டிரக்கை 2019 நவம்பர் மாதத்தில் உலகளவில் முதல்முறையாக வெளியீடு செய்தது. அதாவது, ஒரேயொரு சைபர்டிரக் மட்டுமே வடிவமைக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. அதன்பின் சைபர்டிரக்கின் தோற்றத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யலாமா என அதன் வடிவமைப்பு பணிகளில் டெஸ்லா தொடர்ந்து ஈடுப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணங்களினால் சைபர்டிரக்கின் பணிகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

ஆனால் ஒருவழியாக, டெஸ்லா சைபர்டிரக் வருகிற 2023 செப்டம்பர் மாதத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் எலான் மஸ்க் உறுதிப்படுத்தி இருந்தார். அதனை மீண்டும் உறுதிப்படுத்துவது போன்று தற்போது சைபர்டிரக்கை எலான் மஸ்க் இயக்கி பார்த்துள்ளார். இருப்பினும், இந்த 2023ஆம் வருடத்தில் மிகவும் குறைவான சைபர்டிரக் வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் உற்பத்தி பணிகள் அடுத்த 2024ஆம் ஆண்டில் இருந்தே அதிகரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே வெளியாகி இருந்த சைபர்டிரக்கின் படங்களையும், தற்போது எலான் மஸ்க் வெளியிட்டு இருக்கும் புதிய படத்தையும் வைத்து பார்க்கும்போது, இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் முக்கோண வடிவில் கருப்பு நிறத்தில் பின்புறத்தை காட்டும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. அதேபோல், முன்பக்கத்தில் மெல்லியதான எல்இடி ஸ்ட்ரிப்பும் வழங்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சைபர்டிரக்கில் பாரம்பரியமான சைடு மிரர்கள் வழங்கப்படாது, அதற்கு பதிலாக கேமிராக்கள் இந்த வாகனத்தில் பொருத்தப்படும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், எலான் வெளியிட்டுள்ள படத்தில் வாகனத்தில் சைடு மிரர்கள் உள்ளன. இதேபோன்று வாகனத்தில் வேறு ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்பது வருகிற செப்டம்பர் மாதத்தில் சைபர்டிரக்கின் உற்பத்தி துவங்கும்போது தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications