எலான் மஸ்க் மட்டும் சீனாவில் பிறந்து இருந்தால்... டெஸ்லா ஓனரை புகழ்ந்து தள்ளும் சீனர்கள்!!
உலகளவில் தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார் மாடல் ஒய் என்ற எலக்ட்ரிக் கார் ஆகும். ஆட்டோமொபைல் வாகனங்கள் வரலாற்றிலேயே உலகளவில் பலரால் வாங்கப்படும் காராக ஓர் எலக்ட்ரிக் கார் முதலிடத்தை பிடித்திருப்பது இதுவே முதல்முறை. இத்தகைய பெருமை அனைத்திற்கும் சொந்தமானது மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை உற்பத்தி செய்யும் டெஸ்லா ஆகும்.
டெஸ்லா முழுக்க முழுக்க ஓர் அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும். மெக்ஸிகோ, ஐரோப்பா என மேலும் சில நாடுகளிலும் தொழிற்சாலைகளை நிறுவி வருகிறது என்றாலும், டெஸ்லாவிற்கு தற்போதைக்கு அமெரிக்காவிலும், சீனாவிலும் மட்டுமே தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவ நமது மத்திய அரசு கடந்த பல வருடங்களாக அழைப்பு விடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக எலான் மஸ்க்கை அவரது அமெரிக்க தொழிற்சாலையில் 2015இல் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பேசினார். இருப்பினும் இப்போது வரையில் நம் நாட்டில் டெஸ்லா தொழிற்சாலை உருவாகவில்லை. இந்த நிலையில், சீனாவிற்கு டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் வருகை தந்துள்ளார். சீனாவில் டெஸ்லா தொழிற்சாலை நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆன நிலையில், எலான் மஸ்க் சீனாவிற்கு சென்றிருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
எலான் மஸ்க்கின் இந்த சீன பயணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. சமூகத்தில் மிக பெரும் தொழிலதிபராக விளங்கும் எலான் மஸ்க் சமூக வலைத்தளங்களில் அதிக இரசிகர்களை கொண்டவர். குறிப்பாக, டுவிட்டரில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். ஆனால் உலகளவில் பிரபலமான பல சமூக வலைத்தளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டவை. சீனா அரசு தங்களது நாட்டினருக்கு என்றே பிரத்யேகமான சமூக வலைத்தளங்களை கொண்டுள்ளது.

அவற்றிலும் எலான் மஸ்க் பிரபலமானவராக விளங்குகிறார். சீனாவில் தலைநகர் பீஜிங்கில் எலான் மஸ்க் கடந்த மே 30ஆம் தேதி தனது பிரைவேட் ஜெட் விமானத்தில் லேண்ட் ஆனார். அதன்பின், முக்கிய சீன அரசாங்க அதிகாரிகளுடன் எலான் மஸ்க் கலந்துரையாடினார். பின்னர், அமெரிக்காவுக்கு வெளியே நிறுவப்பட்ட முதல் தொழிற்சாலையான சீன டெஸ்லா தொழிற்சாலையை எலான் மஸ்க் நேரில் சென்று பார்வையிட்டார்.
2019ஆம் ஆண்டில் ஷாங்காய் நகரில் டெஸ்லாவின் தொழிற்சாலை திறக்கப்பட்டது. எலான் மஸ்க்கின் சீன வருகையை அறிந்த சீன நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை சீன சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், "எலான் மஸ்க் சிறந்தவர், எலான் மஸ்க் போன்றவரை சீனா கொண்டிருந்தால்" என பதிவிட, மற்றொருவர், "இவர் உலக இலட்சிய மனிதர்" என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, கடந்த மார்ச் மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் சீனாவுக்கு சென்றிருந்தார். ஆனால் அதனை காட்டிலும் எலான் மஸ்க் தற்போது சீனா வந்திருப்பது சீனாவில் மிகுந்த பேசும் பொருளாகி உள்ளது. சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள தனது தொழிற்சாலையில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 7 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை டெஸ்லா உற்பத்தி செய்துள்ளது. இருப்பினும், லோக்கல் நிறுவனங்களின் போட்டி டெஸ்லாவிற்கு அதிகமாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எலான் மஸ்க், தற்கால உலகின் மிக பெரும் ஐகான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அத்தகையவர் சீனாவிற்கு சென்றுள்ளார் என்றால் நிச்சயமாக முக்கியமான விஷயமாக இல்லாமல் இருக்காது. ஆதலால், எலான் மஸ்க் எதற்காக சீனா சென்றுள்ளார்? என்ற கேள்விக்கான பதில் விரைவில் தெரிந்துவிடும். இந்தியாவில் டெஸ்லா நுழைய உள்ளதாக மீண்டும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. அதற்கும் எலானின் சீன பயணத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









