டெஸ்லா இந்தியாவுக்கு வருது!! மெர்சிடிஸுக்கு தலைவலி இப்போவே ஸ்டார்ட் ஆயிடுச்சு... இவி திட்டங்களில் மாற்றம்?
பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் டெஸ்லா ஒருவழியாக இந்தியாவிற்குள் நுழைய உள்ளதாக தெரிவித்துள்ளது. டெஸ்லாவின் வருகையால் சில எலக்ட்ரிக் கார் நிறுவனங்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்பது உறுதி. மெர்சிடிஸை அத்தகைய நிறுவனங்களுள் ஒன்றாக சொல்லலாம். டெஸ்லாவின் நுழைவால் மெர்சிடிஸுக்கு எந்தெந்த விதங்களில் பிரச்சனை என்பதை இனி பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் பழமை வாய்ந்த ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனம். சொகுசு வசதிகள் மிகுந்த லக்சரி கார்களை உற்பத்தி செய்வதில் உலகளவில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில், லக்சரி கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ் தான் முதலிடம் வகிக்கிறது. அதாவது, மெர்சிடிஸுக்கு அடுத்தே பிஎம்டபிள்யூ, வால்வோ, ஆடி போன்ற மற்ற பிரபலமான நிறுவனங்கள் உள்ளன.

இதுமட்டுமின்றி, லக்சரி தரத்தில் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் நிறுவனங்களுள் ஒன்றாகவும் மெர்சிடிஸ் விளங்குகிறது. முதன்முதலாக 2020ஆம் ஆண்டில் இக்யூசி என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்திய மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் இக்யூபி, இக்யூஎஸ் மற்றும் இக்யூஎஸ் ஏஎம்ஜி உள்ளிட்ட எலக்ட்ரிக் கார் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றின் விற்பனை இந்தியாவில் தற்சமயம் பெரியதாக இல்லையென்றாலும், எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் மெர்சிடிஸுக்கு டெஸ்லாவின் இந்திய வருகை செய்தி தலைவலியை ஏற்படுத்தியிருக்கும் என்பது உறுதி. ஏனெனில் ஜெர்மன் நிறுவனமான மெர்சிடிஸுக்கு எந்த விதத்திலும் சளைத்தது கிடையாது அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம். இன்னும் சொல்லப்போனால் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் மெர்சிடிஸை விடவும் டெஸ்லா உலகளவில் முன்னிலை வகிக்கிறது.

குறிப்பாக, மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற நிறுவனங்களே போராடிவரும் சீன நாட்டு சந்தையில் தற்போதைக்கு கார்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்று டெஸ்லா ஆகும். டெஸ்லாவின் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் தான் உலகளவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் நம்பர்.1 காராகும். உலகளவில் பலரால் வாங்கப்படும் காராக எலக்ட்ரிக் கார் ஒன்று முதலிடம் பிடித்திருப்பது இதுவே முதல்முறை என நமது செய்தித்தளத்தில் கூட அந்த சமயத்தில் குறிப்பிட்டு இருந்தோம்.
இத்தகைய அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் எப்போது இந்தியாவிற்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்காவுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாம் எதிர்பார்த்ததை போல் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார். இந்த கலந்துரையாடலுக்கு பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த எலான் மஸ்க், "இந்தியாவில் டெஸ்லா குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும்" என கூறினார்.

மெர்சிடிஸ் நிறுவனமும் இந்திய சந்தைக்காக எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் சில பல திட்டங்களை வைத்துள்ளது. "நாங்கள் தெளிவான இவி திட்டங்களை இந்தியாவில் கொண்டுள்ளோம் மற்றும் சந்தை மாறுதலுக்கு ஏற்ப நிச்சயமாக அந்த திட்டங்களை பின்பற்றுவோம்" என தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்த மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் லேன்ஸ் பென்னெட் டெஸ்லாவின் வருகை குறித்து பேசுகையில், "இந்த செய்தி (டெஸ்லாவின் இந்திய வருகை செய்தி) எங்களுக்கும், எங்களது திட்டங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தாது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மெர்சிடிஸின் இந்த பேட்டி வெளியுலகத்திற்கு தானே அன்றி, இந்த ஜெர்மன் நிறுவனம் நிச்சயமாக டெஸ்லாவின் வருகையை எண்ணி சற்று கவலை கொண்டிருக்கும். ஏனெனில் எலக்ட்ரிக் கார்களை குறைந்த விலையில் வழங்கக்கூடிய நிறுவனம் டெஸ்லா ஆகும். நம் இந்தியர்கள் தயாரிப்புகளின் விலைகளை உன்னிப்பாக பார்த்து வாங்குபவர்கள் என்பதை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை.


Click it and Unblock the Notifications









