அண்ணன்- தம்பி போல் உள்ளவர்களை பிரிக்க சதியா? அமெரிக்காவில் அப்படி என்ன தாங்க நடக்குது?
அமெரிக்கா (America)-இன் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், அமெரிக்காவில் அடுத்தடுத்ததாக அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு (New Year) கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் மோதியதில் 15 பேர் உயிரிழந்த சோகத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள் மற்றொரு சம்பவமாக டெஸ்லா (Tesla)-இன் சைபர்டிரக் (Cybertruck) வாகனம் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்ததோடு, அமெரிக்காவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து நடந்துள்ள இந்த இரு சம்பவங்கள் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா வாருங்கள் அதனை பற்றி பார்க்கலாம்.
சாலை விபத்துகளில் நமது இந்தியா தான் முன்னிலை வகிக்கிறது என நம்மில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில் நமக்கே முன்னோடி அமெரிக்கா தான். அமெரிக்காவில் சர்வ சாதாரணமாக வாகனங்கள் விபத்தில் சிக்குவதை பார்க்க முடியும். இதில் கொடுமை என்னவென்றால், அவ்வாறு நடக்கும் நிறைய சாலை விபத்துகள் வேண்டுமென்றே நடத்தப்படுவது ஆகும்.

அதாவது, நம் நாட்டில் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தான் விபத்து நடப்பது வழக்கம். ஆனால், அமெரிக்காவில் வாழ்க்கையில் சுவாரஸ்யமாக எதுவும் நடக்க மாட்டிங்குதே என விபத்தை ஏற்படுத்தியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சமீபத்தில் நடந்த புத்தாண்டு மோதல் விவகாரமும் ஆரம்பத்தில் அவ்வாறான ஒன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 பேரது உயிரை காவு வாங்கிய இந்த விபத்துக்கும் தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏனெனில், இந்த மோதலுக்கு காரணமானவர் அதிவேகமாக ஓட்டிவந்த காரில் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத கும்பலின் கொடி பறந்துள்ளது. ஆனால், எஃப்.பி.ஐ (FBI) இதனை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர். இதுகுறித்த விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், காரில் விபத்தை ஏற்படுத்தியவர் அப்போதே போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டார். இந்த நிலையில்தான், இன்று (ஜனவரி 2) டெஸ்லா சைபர்டிரக் வாகன வெடிப்பு நடைபெற்று அமெரிக்காவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த கார் வெடிப்பு ஆனது லாஸ் வேகாஸில் உள்ள டொனால்ட் டிரம்ப்க்கு சொந்தமான ஓட்டலின் வாசலில் நடந்திருப்பது பதற்றத்தை மேலும் கூட்டியுள்ளது. இந்த விபத்தில் சைபர்டிரக் வாகனத்தினுள் இருந்த டிரைவர் உயிரிழந்துள்ளார்; மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், டெஸ்லா சைபர்டிரக்கினுள் பெட்ரோல் கேன் மற்றும் பெரிய ராக்கெட் பட்டாசுகள் இருந்ததை கண்டறிந்துள்ளனர்.
பட்டாசு தீப்பற்றிக் கொண்டு வெடிக்க ஆரம்பித்ததில், அது அருகில் இருந்த பெட்ரோல் கேன் மீது பட்டதினால் சைபர்டிரக் வாகனம் வெடித்து சிதறியுள்ளது. உண்மையில் இது எதிர்பாராத விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என்கிற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த டெஸ்லா சைபர்டிரக் வாகன வெடிப்பு ஆனது டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் (Elon Musk)-க்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
ஏனெனில், அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கிற்கும் இடையே ஓர் நெருங்கிய நட்புறவு உள்ளது. டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு கூட எலான் மஸ்க்கின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். அப்படியிருக்கையில், டிரம்பின் ஓட்டல் வாசலில் டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனம் வெடித்து சிதறி இருப்பது இவர்கள் இருவருக்கும் இடையே சிறிய உரசலை ஏற்படுத்தக்கூடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எப்போதும் எக்ஸ் தளத்தில் ஆக்டீவ்வாக இருக்கக்கூடிய எலான் மஸ்க் இந்த சைபர்டிரக் வாகன வெடிப்புக்கு உடனடியாக பதிலளித்துள்ளார். எலான் மஸ்க்கின் பதிவின்படி பார்க்கும்போது, இந்த சம்பவம் வேண்டுமென்றே டிரம்ப்- எலான் மஸ்க்கிற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் முயற்சி போல் தெரிகிறது. இந்த சம்பவத்தை புதிய அமெரிக்க அதிபர் எவ்வாறு எடுத்துக் கொள்ள போகிறார் என்பது இங்கு கேள்வியே.


Click it and Unblock the Notifications








