போட்டோவை பார்த்து துபாய்னு நெனைச்சுக்காதீங்க, நம்ம இந்தியா தான்!! டெஸ்லா காரை கண்முன் கொண்டுவந்த குஜராத் நபர்!
டெஸ்லா (Tesla), அமெரிக்காவை சேர்ந்த முன்னணி எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். எலக்ட்ரிக் கார் நிறுவனம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் நம்மால் டெஸ்லாவை அடக்கிவிட முடியாது. ஏனெனில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பெட்ரோல், டீசல் கார் நிறுவனங்களை டெஸ்லா விற்பனையில் முந்தியுள்ளது.
உலகளவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் பல மாடல்கள் டெஸ்லா நிறுவனத்தை சேர்ந்தவை ஆக உள்ளன. ஆனால், உலகின் மிகப்பெரும் கார் சந்தைகளுள் ஒன்றான இந்தியா மார்க்கெட்டிற்குள் நுழைவதற்கு தான் டெஸ்லா அதிகமாக யோசித்து வருகிறது. இருப்பினும், இந்த நிலை சமீப காலத்தில் ஓரளவிற்கு சீராகி உள்ளதுபோல் தெரிகிறது.

ஏனெனில், கடந்த சில வாரங்களாக டெஸ்லா மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் கார் ஒன்று இந்திய சாலைகளில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரையில் இருமுறை நடத்தப்பட்ட இந்த சோதனை ஓட்டங்களின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை (Spy Images) பற்றி நமது டிரைவ்ஸ்பார்க் (Drivespark) செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம்.
இந்த நிலையில், டெஸ்லாவின் லேட்டஸ்ட் அறிமுகமான சைபர்டிரக் (Cybertruck) வாகனம் ஒன்று இந்தியாவில் காட்சி தந்துள்ளது. ஆனால், இதற்கும் டெஸ்லாவின் இந்திய வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏனெனில், இந்தியாவில் டெஸ்லா நுழையுமா இல்லையா என்பதே தற்போதைக்கு கேள்விக்குறியாக உள்ளது. அப்படியே நுழைந்தாலும், சைபர்டிரக்கை உடனடியாக அறிமுகம் செய்வதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், டெஸ்லாவின் புதிய தயாரிப்பான சைபர்டிரக் அமெரிக்காவிலேயே சில வருடங்களுக்கு முன்னர்தான் அறிமுகம் செய்யப்பட்டது. அப்படியென்றால் தற்போது இந்தியாவில் சைபர்டிரக் காட்சி தந்திருப்பதன் அவசியம் என்ன? என்கிற கேள்வி எழலாம். இந்தியாவில் இந்த சைபர்டிரக் காட்சித்தந்து இருக்கிறது என சொல்வதை காட்டிலும், பயன்பாட்டில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், இந்த சைபர்டிரக்கை குஜராத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவந்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவரான இந்த நபரது சைபர்டிரக் கார் தொடர்பான படங்களும், வீடியோக்களும் ஏற்கனவே இணையத்தில் வெளியாக ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ஒரு வீடியோவில், இரவு நேரத்தில் சூரத் நகர சாலைகளில் இந்த சைபர்டிரக் வாகனத்தை ஓட்டும் காட்சிகளை பார்க்க முடிகிறது.
துபாயில் இருந்து இந்த சைபர்டிரக் வாகனத்தை சூரத்தை சேர்ந்தவர் வாங்கி வந்துள்ளார். இதனாலேயே, இந்த சைபர்டிரக்கில் துபாய் வாகன பதிவெண்ணை கொண்ட நம்பர் பிளேட் உள்ளதை காண முடிகிறது. இந்த நம்பர் பிளேட் உடன் இந்தியாவில் 6 மாதங்களில் இருந்து அதிகப்பட்சமாக 1 வருடம் வரையில் மட்டுமே சைபர்டிரக் காரை பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே சைபர்டிரக் வாகனம் நம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நேரில் பார்க்காவிடினும், பலருக்கு இந்த டெஸ்லா வாகனத்தின் தோற்றம் தெரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், சைபர்டிரக்கின் எளிமையான தோற்றம் ஆகும். முக்கோண வடிவில், வீடு போன்றதான வடிவத்தில் டெஸ்லா சைபர்டிரக் உள்ளது.
மற்ற டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை போன்று, எலக்ட்ரிக் வாகனமான சைபர்டிரக்கை கார் என்று ஏன் கூற முடிவதில்லை என்றால், அதன் நீளம் ஆகும். சுமார் 5.87 மீட்டர்கள் நீளத்தில் பிரம்மாண்டமான தோற்றத்தை கொண்டதாக சைபர்டிரக் விளங்குகிறது. ஆதலால், டெஸ்லா சைபர்டிரக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் பல கோடி ரூபாய்களில் விலை நிர்ணயிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய விலையுயர்ந்த டெஸ்லா வாகனத்தை வாங்கியது மட்டுமில்லாமல், பெரிய தொகையை இறக்குமதி வரியாக செலுத்தி சூரத்தை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் பயன்படுத்தி வருகிறார் எனும்போது ஆச்சிரியமாக உள்ளது. இந்தியாவில் டெஸ்லா சைபர்டிரக் போன்று சிலர் தங்களது கார்களை மாற்றிக் கொண்டுள்ளதை பார்த்திருக்கிறோம். ஆனால், நம் நாட்டில் முதல்முறையாக உண்மையான சைபர்டிரக் வாகனம் ஒன்று காட்சி தந்திருப்பதுடன், இனி தொடர்ந்து சாலைகளில் ஓட போகிறது.


Click it and Unblock the Notifications








