டெஸ்லா கர்நாடகாவுக்கு தான்... மத்தியில் குமாரசாமி அமைச்சராகி விட்டார் - இனி சொல்லவா வேண்டும்!!
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்கு கடந்த சில வருடங்களாக திட்டமிட்டு வருகிறது. இதற்காக டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேசியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இருப்பினும், டெஸ்லாவின் இந்திய வருகை குறித்து இப்போதுவரையில் ஒரு தெளிவான பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், டெஸ்லாவின் இந்திய வருகை குறித்து புதியதாக மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள குமாரசாமி பதிலளித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த குமாரசாமி ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர். கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக 2 முறை பதவி வகித்துள்ள குமாரசாமிக்கு புதிய மக்களவையில் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் டெஸ்லா கார் நிறுவனம் நுழைய உள்ளதாக வருடக்கணக்கில் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், எதுவும் நடந்தப்பாடில்லை.

இந்தியாவிற்கு வரும் டெஸ்லா அதன் கார்கள் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு அல்லது கர்நாடகாவில் துவங்கலாம் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்க போவதில்லை என்கிற முடிவில் எலான் மஸ்க் & கோ உறுதியாக உள்ளது. இருப்பினும், இந்தியாவிற்கு தொழிற்சாலை வந்தால், கர்நாடகாவிற்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்கிற பேச்சு உள்ளது.
இதுகுறித்து புதிய மத்திய அமைச்சர் குமாரசாமியிடம் கேட்கப்பட்டதில், தனது சொந்த மாநிலத்திற்கு மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிற்காக தனது கவனம் இருக்கும் எனவும், தான் ஒரு சுயநல மனிதர் கிடையாது, நாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் கடமை உடன் செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார். புதிய மத்திய அமைச்சரவையில் இரும்பு மற்றும் கனரக துறை அமைச்சராக குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிச்சயமாக டெஸ்லாவை இந்தியாவிற்கு கொண்டுவருவோம் என்று மத்திய அமைச்சர் குமாரசாமி உறுதியளிக்கவில்லை. ஆனால், டெஸ்லா நிறுவனமும் சரி, அதன் சிஇஓ எலான் மஸ்க்கும் சரி இந்தியாவுடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளனர். மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எலான் மஸ்க் சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்து இருந்தார்.
மேலும், இந்தியாவில் தங்களது நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதாகும் எலான் மஸ்க் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார். இதற்கு பிரதமர் மோடி, "உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி எலான் மஸ்க். திறமையான இந்திய இளைஞர்கள், எங்களது மக்கள் தொகை, யூகிக்கக்கூடிய கொள்கைகள் மற்றும் நிலையான ஜனநாயக அரசியல் ஆகியவை எங்களது அனைத்து கூட்டணி நிறுவனங்களுக்கும் வணிக சூழலை தொடர்ந்து வழங்கும்" என பதிலளித்து இருந்தார்.
கடந்த 2024 மார்ச் மாதத்தில், புதிய எலக்ட்ரிக் வாகன திட்டத்தை இந்திய அரசாங்கம் வெளியிட்டது. இந்த திட்டத்தின்படி, வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்பட்சமாக 85% வரையில் வரிகளை குறைக்க முடியும். இந்த திட்டம் முக்கியமாக டெஸ்லா போன்ற புகழ்பெற்ற உலகளாவிய உற்பத்தியாளர்களிடம் இருந்து இந்தியாவிற்கான முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக கொண்டுவரப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், டெஸ்லா இந்தியாவிற்கு வருமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. கடந்த ஆண்டில் பிரதமர் மோடியை அமெரிக்காவில் சந்தித்த பின், டெஸ்லா இந்தியாவிற்கு வரும் என எலான் மஸ்க் உறுதியளித்த போதிலும், இதுவரையில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து விட்டதால், டெஸ்லாவின் இந்திய வருகைக்கான நடவடிக்கைகள் இனி மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








