இந்தியருக்கு முக்கிய பதவியை கொடுத்து அழகு பார்க்கும் டெஸ்லா!! எலான் மஸ்க்குக்கு கீழ் நேரடியா செயல்படனும்!
டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் புதிய முதன்மை நிதி அதிகாரியாக இந்தியாவை சேர்ந்தவர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்லா போன்ற உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை வகிக்க போகும் அந்த இந்தியர் யார்? என்பதையும், அவருக்கும் டெஸ்லா நிறுவனத்திற்கும் இடையேயான பிணைப்பையும் இனி பார்க்கலாம்.
டெஸ்லா, அமெரிக்காவை சேர்ந்த உலகின் பிரபலமான எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம். அமெரிக்கா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் டெஸ்லா நம் இந்தியாவிலும் அதன் கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த கடந்த பல வருடங்களாக யோசித்து வருகிறது. சமீபத்தில் கூட நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதுதொடர்பாக டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை அமெரிக்காவில் சந்தித்து பேசினார்.

இந்தியாவில் நுழைய டெஸ்லா தயக்கம் காட்டினாலும், டெஸ்லா நிறுவனத்திற்குள் இந்தியாவை சேர்ந்த பலர் பணியாளர்களாகவும், முக்கிய அதிகாரிகளாகவும் நுழைந்துள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவர் தான் வைபவ் தனேஜா (Vaibhav Taneja). 45 வயதான தனேஜா 'மாஸ்டர் ஆஃப் காயின்' என டெஸ்லா நிறுவனத்தில் அழைக்கப்படுகிறார். டெஸ்லா நிறுவனத்தில் ஏற்கனவே முதன்மை கணக்கியல் அதிகாரியாக பணியாற்றிவரும் வைபர் தனேஜாவுக்கு புதிய கூடுதல் பொறுப்பாக, நிறுவனத்தின் மொத்த நிதி துறையையும் கவனிக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு (CFO) வழங்கப்பட்டுள்ளது.
முன்பு இந்த பதவியில் இருந்த சக்கரி கிர்கார்ன் என்பவர் சமீபத்தில் வேலையை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த பொறுப்பில் வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டு உள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் 1999ஆம் ஆண்டில் இளங்கலை வணிகவியல் படிப்பை முடித்த வைபவ், டெஸ்லாவின் முதன்மை கணக்கியல் அதிகாரியாக கடந்த 2019 மார்ச் மாதத்தில் இருந்து செயல்பட்டு வருகிறார்.

அத்துடன், 2018 மே மாதத்தில் இருந்து டெஸ்லாவின் கார்ப்பிரேட் கண்ட்ரோல் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். 2016இல் அமெரிக்கன் சோலார் பேனல் மேம்பாட்டு நிறுவனமான சோலார்சிட்டியை டெஸ்லா நிறுவனம் கைப்பற்றியது. சோலார்சிட்டி நிறுவனத்திலும் சில காலம் பொருளாதார நிபுணராக வைபவ் தனேஜா பணியாற்றியுள்ளார்.
இவ்வாறு, டெஸ்லா மற்றும் சோலார்சிட்டி என இரு நிறுவனங்களிலும் நிதி துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ள வைபவ் 2016இல் இருந்து தற்போது வரையில் அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது. ஏனெனில் அதன் முன்பு வரையில் கிட்டத்தட்ட 17 வருடங்களாக பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (PwC) என்ற நிறுவனத்தில் பணியாற்றினார். அதாவது, 1999இல் கல்லூரி படிப்பை முடித்த கையோடு வைபவ் தனேஜா பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

தற்போது, குறுகிய காலத்திலேயே வெற்றிக்கரமாக டெஸ்லாவின் மொத்த நிதி துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார். 2021இல் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது, இந்தியாவிற்கான டெஸ்லா நிறுவனத்தின் இயக்குனராக வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டார்.
டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக முன்பு பதவியில் இருந்த சக்கரி கிர்கார்ன் தனது பதவியை ராஜினாமா செய்தாலும், அவரது பதவிக் காலம் இந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் தான் முடிவுக்குவர உள்ளது. அதுவரையில், நிறுவனத்தின் தடையற்ற பண பரிவர்த்தனைகளுக்கு தொடர்ந்து தனது சேவையை கிர்கார்ன் வழங்குவார். கிர்கார்னின் ராஜினாமாவை டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டெஸ்லா நிறுவனம் கடந்த 2023 ஏப்ரல் - ஜூன் மாதங்களில் ஈட்டிய வருவாய் குறித்த விபரங்களை சமீபத்தில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து, சக்கரி கிர்கார்ன் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இத்தனைக்கும், 3 மாத காலத்தில் எப்போதும் இல்லாத வருவாயாக 24.93 பில்லியன் டாலர்களை டெஸ்லா ஈட்டியுள்ளது. இருப்பினும், சக்கரி கிர்கார்ன் டெஸ்லாவை விட்டு விலகியுள்ளார்.


Click it and Unblock the Notifications









