ரிப்பேரான எலெக்ட்ரிக் காரின் பேட்டரி பேக்.. வச்ச செலவு இவ்வளவா! மழ காலத்துல வெளிய போகவே யோசிக்கணும் போலையே!
மழை நீரில் பயணித்ததன் விளைவாக டெஸ்லா கார் உரிமையாளருக்கு, அக்காரின் விலையில் நான்கில் ஒரு பங்கு சர்வீஸ் கட்டணமாக பில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் டெஸ்லா (Tesla)-வும் ஒன்று. பழம் தின்னு கொட்டைப் போட்ட நிறுவனங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையில் கொடிக் கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றன. அதாவது மிக அமோகமான விற்பனை வரவேற்பை உலக மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

Source: edinburghlive சொல்லப் போனால் உலக அளவில் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் காரே மிக அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. மேலும், பலர் இந்த காரை ஆஹா, ஓஹோ என்றும் புகழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலிலேயே டெஸ்லா பிராண்டின் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வந்தவர், அந்த காரால் மிகப் பெரிய இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவருடைய ரிப்பேரான டெஸ்லா காரை சரி செய்ய சர்வீஸ் மைய நிர்வாகம் ரூ. 18 லட்சத்திற்கு பில் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தகைய மிகப் பெரிய இன்னலுக்கே அந்த டெஸ்லா காரின் உரிமையாளர் தற்போது ஆளாகி இருக்கின்றார். காரின் விலையே ரூ. 60.81 லட்சமாக மட்டுமே இருக்கின்ற நிலையில், அதன் விலையில் நான்கில் ஒரு பங்கிற்கு அதிகமான தொகையை சரி செய்ய சர்வீஸ் மையம் கட்டணமாக கோரி இருக்கின்றது.

இந்த அதிர்ச்சியான சம்பவம் எங்கு நடைபெற்றது என்று தானே கேக்குறீங்க, இங்கிலாந்தின் ஓர் அங்கமான ஸ்காட்லாந்து நாட்டிலேயே அரங்கேறி இருக்கின்றது. எடின்பர்க் பகுதியைச் சேர்ந்தவர் ஜானி பசிகலுபோ. இவரும், இவருடைய தோழரும் சேர்ந்து அவர்களுடைய டெஸ்லா எலெக்ட்ரிக் காரில் இரவு உணவிற்காக அருகில் இருந்து உணவகத்திற்கு சென்றிருக்கின்றனர்.
அவர்கள் பயணித்த அந்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறான வானிலை எடின்பர்க்கில் நிலவி இருக்கின்றது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தீவிர மழை காரணமாக நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அவர்கள் எலெக்ட்ரிக் காரில் பயணித்திருக்கின்றனர்.
அந்த வேளையில், அக்கார் திடீரென ஒரு அடிகூட நகர முடியாத நிலைக்கு சென்றிருக்கின்றது. இதனால் அவதிக்குள்ளாகிய ஜானி பசிகலுபோ டெஸ்லாவின் ரோடு அசிஸ்டன்ஸை உதவிக்கு அழைத்திருக்கின்றார். ஆனால், அவருக்கு உடனடி உதவி கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. குறிப்பாக, பல மணி நேரம் அலைகழிப்பிற்கு பின்னரே அவர்களுக்கு உதவி கிடைத்திருக்கின்றது.
அதேவேளையில், இதைவிட மிகப் பெரிய இன்னல் அவர்களுக்கு இதற்கு பின்னரே வந்திருக்கின்றது. காரை சர்வீஸுக்காக விட்ட அவருக்கு, சர்வீஸ் மையத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கின்றது. ஒரு சில பவுண்டுகள் மட்டுமே இந்த காருக்கு செலவாகும் என அவர் எதிர்பார்த்த நிலையில், சர்வீஸ் மையமோ 17,500 பவுண்டுகளுக்கு பில் போட்டு கொடுத்திருக்கின்றனர்.
அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 18 லட்ச ரூபாக்கு பில் போட்டு கொடுத்திருக்கின்றனர். இந்த பில்லை பார்த்தும் தான் உறைந்தே போய்விட்டதாக ஜானி பசிகலுவோ தெரிவித்திருக்கின்றார். அந்த கார் சில வருடங்களே ஆகுவதாகவும், எட்டு ஆண்டு வாரண்டி திட்டத்தின்கீழ் காரை வாங்கியதாகவும் அவர் கூறுகின்றார்.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக பேட்டரி அந்த வாரண்டி திட்டத்தின்கீழ் வரவில்லை. இந்த நிலையிலேயே காரின் விலையில் நான்கு ஒரு பங்கிற்கும் அதிகமான தொகையை அவர்கள் கட்டணமாகக் கேட்டு இருக்கின்றனர். இத்தகைய மாபெரும் தொகையை டெஸ்லா சர்வீஸ் மையம் கேட்டிருப்பது வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுதவிர, மற்றுமொரு திடுக்கிடும் தகவலையும் ஜானி வெளியிட்டு உள்ளார்.
இந்த கார் பாதி அளவு தண்ணீரில் மூழ்கிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரோ தன்னுடைய கார் பெரிய அளவில் மழை தண்ணீரில் நனையவில்லை என்றும், வழக்கமான ஈரமான சாலையில் மட்டுமே பயணித்ததாகவும் கூறி உள்ளார். மேலும், இந்த நிலையிலேயே காரின் பேட்டரி பேக்கில் மழை நீர் புகுந்து அது பாதிப்புள்ளாகி இருப்பதாக சர்வீஸ் மைய நிர்வாகம் அவரிடம் கூறி இருக்கின்றது. ஆகையால், இதுவும் அவருக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வெகு விரைவில் டெஸ்லா நிறுவனம் அதன் கால் தடத்தைப் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிறுவனம் இறக்குமதி குறைப்பதற்கான தொடர் விண்ணப்பத்தை மத்திய அரசிடம் முன் வைத்து வருகின்றது. வெகுவிரைவில் இதற்கான பச்சைக் கொடி நிறுவனத்திற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், எப்போது வேண்டுமானாலும் டெஸ்லா அதன் இந்திய வருகையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









