தமிழகத்திற்கு வரவேண்டிய ஆலையை தட்டி சென்ற குஜராத்! ஜனவரியில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு!
டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இது குறித்து அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் குஜராத் மாநிலத்தில் நடக்க உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி குஜராத் மாநிலத்திலேயே அந்நிறுவனம் தனது ஆலையை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
சர்வதேச அளவில் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் மிக முக்கியமான நிறுவனமாக இருப்பது டெஸ்லா நிறுவனம் தான் இந்நிறுவனம் தானியங்கி கார்களை தயாரித்து உலகிலேயே முதன்முறையாக விற்பனைக்கு கொண்டு வந்தது இந்நிறுவனத்தின் கார்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு மவுசும் இருக்கிறது. பலர் இந்நிறுவனத்தின் கார்களை சர்வதேச அளவில் விரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா தற்போது உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது. அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக தற்போது இந்தியா தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தனது வாகன விற்பனையை செய்து வரும் நிலையில் தற்போது இந்தியாவிற்குள் களமிறங்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் களமிறங்க திட்டமிட்டபோது அப்பொழுது மத்தியஅரசு டெஸ்லா நிறுவனத்திற்காக வரி சலுகை வழங்க முடியாது என மறுத்து விட்டது. அந்நிறுவனம் அப்பொழுது இந்தியாவில் தனது வாகனங்களை தயாரிக்க களம் இறங்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியா மிக வேகமாக வளர்ந்து ஆட்டோமொபைல் சந்தைக்கு மிக முக்கியமான நாடாக மாறியதால் நிறுவனம் தனது முடிவை மாற்றி இந்தியாவில் களம் இறங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது குறித்த செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது டெஸ்லா நிறுவனத்திற்கு மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சு தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது ஆலைகளை அமைத்து வாகனங்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருகிறது. இன்றைக்கு இந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.
வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் குஜராத் மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் ஈர்ப்பு மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அம்மாநிலத்தில் டெஸ்லா ஆலை அமைய உள்ள தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நேரடியாக வந்து கலந்து கொண்டு அறிவிப்பார் என கூறப்படுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் எல்லாம் தற்போது நடந்து வருவதாக தெரிகிறது.

குஜராத்தில் உள்ள ஆனந்த் பகுதியில் டெஸ்லா நிறுவனம் ஆலையை அமைத்து வாகனங்களை விற்பனை உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதே பகுதியில் தான் டாடா நிறுவனமும் தனது ஆலையை அமைத்துள்ளது. இதுபோக மாருதி நிறுவனமும் எம்ஜி மோட்டார் நிறுவனமும் குஜராத்தில் தான் ஆலையை அமைத்து வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தில் நடக்கும் போது முதலீட்டாளர்கள் மாநாட்டில் டெஸ்லா நிறுவனம் பங்கேற்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
இந்தியாவிற்கு டெஸ்லா நிறுவனம் வரப்போவதாக தகவல் வெளியான நிலையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தங்கள் பகுதியில் அந்த ஆலையை கொண்டு வர பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்திற்கு தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தற்போது தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் இதுவரை டெஸ்லா நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
டெஸ்லா நிறுவனம் முதல் கட்டமாக இந்தியாவில் பேட்டரி தயாரிப்பு ஆலையை தான் கட்டமைக்க திட்டமிட்டு வருகிறது. இதனால் குஜராத்தில் ஆலையமைந்தாலும் அது பேட்டரி தயாரிப்பு ஆலையாக இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பேட்டரிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால் ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் குஜராத்தை தேர்வு செய்திருப்பதாக நமக்கு தற்போது தகவல் கிடைத்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் சென்னையில் தனது ஆலையை அமைக்கும் என இதற்கு முன்னர் செய்திகள் எல்லாம் வெளியாகின சென்னையில் தனது ஆலய அமைத்தால்தான் தெற்காசிய நாடுகளுக்கு தனது வாகனங்களை ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும் என்பதால் இந்த முடிவை டெஸ்லா நிறுவனம் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது குஜராத்தில் தனது ஆலையை அமைக்க நிறுவனம் முடிவு செய்து இருப்பது தமிழக மக்களுக்கு ஒரு ஏமாற்றம் தான்.


Click it and Unblock the Notifications









