நம் மத்திய அரசை நினைத்தாலே பெருமையாக இருக்கு!! டெஸ்லாவுக்கே தண்ணி காட்டுவது என்றால் சும்மாவா...
டெஸ்லா (Tesla), உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் வணிகத்தை துவங்குவதற்காக அந்த நிறுவனத்திற்கு பிரத்யேகமாக எந்தவொரு சிறப்பு திட்டமும் வழங்கப்படாது எனவும், மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வழங்கப்படுபவையே கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, உலகின் பல்வேறு நாடுகளில் வணிகத்தை விரிவு செய்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த முடியாது என கூறப்படும் சீன நாட்டு சந்தையில் கூட டெஸ்லா கார்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றன. இதன் காரணமாகவே, அமெரிக்காவுக்கு வெளியே சீனாவில் மட்டுமே டெஸ்லாவிற்கு தொழிற்சாலை உள்ளது.

ஆக, உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா, சீனா இரண்டிலும் டெஸ்லாவின் கார்கள் விற்பனையில் உள்ளன. இருப்பினும், உலகின் அதிக மக்கள் தொகை நாடான இந்தியாவின் மீது எப்போதும் டெஸ்லாவிற்கு ஒரு கண் உள்ளது. இந்திய சந்தையில் நுழைவதற்கான முயற்சிகளில் கடந்த பல வருடங்களாக டெஸ்லா ஈடுப்பட்டு வருகிறது. நமது மத்திய அரசும் டெஸ்லா போன்ற ஒரு கார்ப்பிரேட் நிறுவனம் இந்தியாவிற்குள் வருவதை வரவேற்கிறது.
ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும், இந்திய அரசுக்கும், டெஸ்லாவுக்கும் கருத்து உடன்பட்டு வரவில்லை. அதாவது, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஓர் பெரிய தொகையை முதலீடு செய்து தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தில் இல்லை. இதனால் சீனாவில் இருந்து கார்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து, விற்பனை செய்ய டெஸ்லா விரும்பியது. நமது அரசை பற்றி தான் நம் எல்லாருக்கும் தெரியுமே. சீன தயாரிப்பு என்றவுடன் முற்றிலும் தடைவிதித்தது.

அதுமட்டுமின்றி, பொதுவாக இவ்வாறு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்குள் கொண்டுவரப்படும் கார்களுக்கு அதிகப்படியான வரியை மத்திய அரசு விதிப்பது வழக்கம். இதனையும் டெஸ்லா ஏற்றுக்கொள்ளவில்லை. "இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக உள்ளது" என எலான் மஸ்க்கே சில வருடங்களுக்கு முன்பு டுவிட்டரில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இதனால், இந்திய சந்தையில் டெஸ்லா நுழையவே நுழையாது என்று கூட பேச்சுக்கள் எழுந்தன.
ஆனால், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து எலான் மஸ்க்கை நேரில் சந்தித்து பேசினார். இதன்படி, இந்தியாவில் டெஸ்லா வணிகத்தை துவங்கும் என அதன்பின் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அப்போதும் கூட இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையை நிறுவுமா என்பது தற்போதுவரையில் தெரியாத விஷயமாக உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் டெஸ்லாவிற்கென பிரத்யேக எந்தவொரு சிறப்பு திட்டமும் வழங்கப்படாது என மத்திய அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், அமெரிக்க எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவிற்காக சிறப்பு திட்டம் எதுவும் அமல்படுத்தப்படாது எனவும், ஆனால் அட்வான்ஸ்டு கெமிஸ்ட்ரி செல்களுக்காக மற்ற எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெறும் புரோடக்ஷன் லிங்க்டு இன்செண்டீவ்ஸ் (PLI) திட்டங்களை டெஸ்லாவும் பெறலாம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லாவிற்கு பேட்டரிகளை தயாரித்து வழங்கும் மிக பெரிய விநியோக நிறுவனமான பானாசோனிக்கும் இதுகுறித்து மத்திய அரசை சமீபத்தில் சந்தித்தது. தென்கொரிய நிறுவனமான பானாசோனிக் இந்தியாவில் பேட்டரிகளை உற்பத்தி செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளது. இதற்கும் நம் மத்திய அரசு அதிகாரிகள், பி.எல்.ஐ அட்வான்ஸ்டு கெமிஸ்ட்ரி பேட்டரி திட்டத்தின் கீழ் மானியத்திற்காக விண்ணப்பிக்குமாறு அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எல்லா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான மானியங்களே அரசு சார்பில் வழங்கப்படும் என்பதில் நம் மத்திய அரசு தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்தவொரு சமரசமும் இன்றி தனது நிலைப்பாட்டில் தொடர வேண்டும். ஏனெனில் ஒரு கார்ப்பிரேட் நிறுவனத்திற்காக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்வது எந்த விதத்தில் சரியானதாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?


Click it and Unblock the Notifications









