முதல் டெஸ்லா கார் ஷோரூம் அமையும் இடம் சிட்டியில் பயங்கர பிசியான ஏரியா! சுற்றி பார்க்கவே ஒருநாள் ஆகும் போலயே!!
டெஸ்லா (Tesla), அமெரிக்காவை சேர்ந்த முன்னணி எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம். அமெரிக்காவை தாண்டி வெளிநாடுகள் பலவற்றில் டெஸ்லாவுக்கு மார்க்கெட் உள்ளது. இவ்வளவு ஏன், சீனாவில் கூட டெஸ்லாவுக்கு கஸ்டமர்கள் உள்ளனர். பொதுவாகவே அமெரிக்க கார் நிறுவனங்கள் சீனாவில் நுழைவது இல்லை; அதேபோல், சீன கார் நிறுவனங்களும் அமெரிக்காவில் நுழைவது இல்லை. இதற்கு காரணம் என்ன என்பது உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இருப்பினும், டெஸ்லா நிறுவனம் சீன நாட்டு மார்க்கெட்டிற்குள் நுழைந்தது மட்டுமில்லாமல், சீனாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக உள்ளது.
இன்னும் சொல்லப்போனால், அமெரிக்காவை தாண்டி வெளிநாட்டில் டெஸ்லா நிறுவனம் சீனாவில் மட்டுமே கார் உற்பத்தி தொழிற்சாலையை கொண்டுள்ளது. ஆனால், சீனாவிற்கு அருகே உள்ள நம் இந்திய நாட்டில் நுழைய டெஸ்லா கடந்த பல வருடங்களாகவே தயக்கம் காட்டி வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், சீனா அளவிற்கு இந்தியாவை முக்கியமான சந்தையாக டெஸ்லா கருதாதது ஆகும்.

மத்திய அரசுக்கு டெஸ்லா இந்தியாவிற்கு வருவது சந்தோஷம் தான். ஆனால், இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைக்க டெஸ்லாவை மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால், டெஸ்லா நிறுவனமோ சீனாவில் உற்பத்தி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவிற்கு கொண்டுவர விரும்புகிறது. ஏனெனில், இந்தியாவில் தொழிற்சாலைக்காக பெரிய தொகையை செலவிட டெஸ்லா தயாராக இல்லை.
இவ்வாறு, மத்திய அரசு மற்றும் டெஸ்லா நிறுவனங்களுக்கு இடையே கடந்த பல வருடங்களாக இழுப்பறி நீடித்துவந்த நிலையில், ஒருவழியாக இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைய டெஸ்லா தயாராக துவங்கிவிட்டது. நாம் எல்லாரும் எதிர்பார்த்தப்படி, மும்பையில் டெஸ்லாவின் முதல் கார் ஷோரூம் அமைய உள்ளது.

மும்பையின் பரபரப்பான பந்த்ரா பகுதியில் உள்ள பம்பாய் குர்லா வணிக கட்டிடத்தில் டெஸ்லாவின் முதல் இந்திய டீலர்ஷிப் ஷோரூம் அமைய உள்ளது. மும்பையில்தான் முதல் டெஸ்லா ஷோரூம் அமைய உள்ளது என்பது ஏற்கனவே நமக்கு தெரியும் என்றாலும், மும்பையில் சரியாக எந்த பகுதியில் அமைய உள்ளது என்பது தற்போதுதான் தெரியவந்துள்ளது.
மேலும், டெஸ்லா நிறுவனத்தின் முதல் ஷோரூமின் படங்களும் முதல்முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த படங்களில் முழுவதும் கண்ணாடியால் ஆன வெளிப்புற சுவரை கொண்ட கட்டிடத்தை காணலாம். இதுதான் இந்தியாவில் டெஸ்லாவின் முதல் ஷோரூமாக அமைய உள்ளது என்பதை கட்டிடத்தின் வாசல்கதவுக்கு அருகே உள்ள கண்ணாடியில் டெஸ்லா நிறுவனத்தின் லோகோ இடம்பெற்று இருப்பதை வைத்து உறுதி செய்ய முடிகிறது.
கட்டிடம் மட்டுமின்றி, கட்டிடம் அமைந்துள்ள வளாகமும் உயர் தரத்திலான சுற்றுச்சூழலை கொண்டதாக உள்ளதை படங்களில் காணலாம். இந்த கட்டிடத்தின் முதல் தரைத்தளத்தை ஷோரூமாக டெஸ்லா பயன்படுத்த உள்ளது. அதாவது, ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் கட்டிடத்தில் தனது ஷோரூமை டெஸ்லா அமைத்து வருகிறது.
இந்த ஷோரூம் மட்டுமின்றி, மும்பையில் சுமார் 24 ஆயிரத்து 565 சதுர அடி பரப்பளவில் கட்டிடத்தையும் தனது ஆய்வு பணிகளுக்காக குத்தகை (Lease) முறையில் டெஸ்லா வாங்கியுள்ளது. இந்த பகுதி ஆனது டெலிவிரி கொடுக்கப்பட உள்ள டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை நிறுத்தி வைக்கும் இடமாகவும், கார்களுக்கான சர்வீஸை வழங்கக்கூடிய இடமாகவும் செயல்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மும்பையில் அமையவுள்ள டெஸ்லாவின் இந்த முதல் இந்திய ஷோரூம் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளன. ஆதலால், இந்த டெஸ்லா ஷோரூம் விரைவில் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம். மும்பையை தொடர்ந்து, டெல்லி மற்றும் குருகிராம் நகரங்களில் தனது அடுத்தடுத்த டீலர்ஷிப் ஷோரூம்களை திறக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் மிக பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப் (DLF) உடன் டெஸ்லா பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications










