டிசம்பரில் தஞ்சை விமான நிலையம் துவக்கம்! சென்னை, பெங்களுருவிற்கு தினசரி சேவை!
தஞ்சாவூரில் இருந்து அடுத்த மாதம் சென்னை பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவையை துவங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. உதான் திட்டத்தின் கீழ் இந்த தஞ்சாவூர் விமான நிலையம் தற்போது கட்டமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இங்கிருந்து உள்நாட்டு விமான சேவைகள் துவங்க உள்ள நிலையில் பயணிகள் மத்தியில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமான சேவை குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய அரசு உதான் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களை எல்லாம் விமான சேவை மூலமாக இணைக்க வேண்டும் என பல்வேறு முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி டெல்டா மாவட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் என்பது மிக முக்கியமான மாவட்டமாக இருக்கிறது. இங்குள்ள மக்கள் பலர் விமான சேவையை பயன்படுத்துவதற்காக திருச்சி மற்றும் சென்னையில் நோக்கி பயணித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் என்பது தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்ட மக்களுக்கு முக்கியமான இடமாக இருக்கிறது. இதனால் இந்த மாவட்ட மக்களுக்கு பயன் தரும் வகையில் தஞ்சாவூரில் உள்நாட்டு விமான சேவையை வழங்கும் விமான நிலையம் ஒன்றை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. மக்கள் மத்தியில் இது நீண்ட கால கோரிக்கையாக இருந்த நிலையில் தற்போது இது செயல்பாட்டிற்கு வர தயாராகி வருகிறது.
தஞ்சை -புதுக்கோட்டை சாலையில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்த புதிய உள்நாட்டு விமான நிலையம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. 990களில் இந்த இடத்தில் வாயுதூர்த் விமான சேவை இருந்து வந்தது. பின்னர் போதுமான அளவு பயணிகள் அதில் பயணிக்காததால் அதை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு இந்த இடத்தை விமானப்படை கைப்பற்றியது. பின்னர் இது 2012ஆம் ஆண்டு முதல் விமானப்படையின் ஒரு முக்கியமான தளமாக இருந்து வருகிறது.

இதுவரை இந்த விமானப்படை தளங்களில் போர் விமானங்கள் மட்டுமே கையாளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விமானப்படைத்தளத்தை மீண்டும் விமான நிலையமாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்கான பணிகள் துவங்கி விட்டன. இந்த பணிகள் எல்லாம் முடிந்து அடுத்த மாதம் தஞ்சையில் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் சிறிய ரக விமானங்கள் மட்டுமே தஞ்சை விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியை அடுத்த குர்கானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏர்டாக்ஸி நிறுவனம்தான் இந்த விமான சேவையை வழங்குகிறது. வரும் டிசம்பர் மாதம் முதல் தஞ்சையிலிருந்து சென்னைக்கும் பெங்களூருக்கும் விமான சேவைகள் துவங்கப்பட உள்ளன. ஏர்டாக்ஸி நிறுவனம் இந்தியாவில் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த விமான சேவையை வழங்குகிறது. இதன்படி தஞ்சையை தொடர்ந்து நெய்வேலி, வேலூர், ராமநாதபுரம் ஆகிய பகுதியிலிருந்தும் விமான சேவை துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அடுத்த மாதம் செயல்பாட்டிற்கு வரவுள்ள தஞ்சை விமான நிலையத்திலிருந்து சுமார் 20 இருக்கை வசதி கொண்ட சிறிய ரக விமானத்தைக் கொண்டு ஏர் டாக்ஸி நிறுவனம் தினசரி சேவையாக சென்னை மற்றும் பெங்களூருக்கு விமான சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல பெங்களூருவில் இருந்து சென்னையில் இருந்தும் தினம் ஒரு விமானம் தஞ்சைக்கு வரும்.
தற்போது உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் வட மாவட்ட பகுதிகளில் தான் அதிகமான விமான நிலையங்கள் கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக வேலூர் தஞ்சை நெய்வேலி போன்ற பகுதிகளில் விமான நிலையங்கள் வருகிறது. தென் மாவட்டத்தை பொருத்தவரை புதிதாக ராமநாதபுரம் மாவட்டம் மட்டும் தான் விமான நிலையம் கொண்டுவரப்படுகிறது. தென் மாவட்டத்தில் தற்போது மதுரை தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மட்டுமே விமான நிலையங்கள் இயங்கி வருகிறது.
தென் மாவட்டங்களிலும் விமான சேவையை கொண்டு வருவதற்காக புதிதாக விமான நிலையங்கள் அமைக்கப்பட்டால் தென்மாவட்டங்களின் வளர்ச்சியும் கணிசமான அளவு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கு தென் மாவட்ட மக்கள் மத்தியில் விமான போக்குவரத்து இல்லை என்ற பிரச்சனையை மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தஞ்சையில் புதிதாக விமான நிலையம் அமைப்பது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது தான். இது டெல்டா மாவட்ட மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த விமான நிலையம் மூலம் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதார மிக பெரிய வளர்ச்சியை சந்திக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் நிச்சயம் இது ஒரு பரபரப்பான விமான நிலையமாக மாறும்.


Click it and Unblock the Notifications









