ஜிபிஎஸ் பார்த்து கார் ஓட்டியதால் பேராபத்தில் சிக்கி கொண்ட பெண்.. டெக்னாலஜி, குடிபோதையால் வந்த வினை..
குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், ஜிபிஎஸ் பார்த்து கார் ஓட்டி சென்றதால், பேராபத்தில் சிக்கி கொண்டார். இந்த நிலை நாளை யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம் என்பதால், எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், ஜிபிஎஸ் பார்த்து கார் ஓட்டி சென்றதால், பேராபத்தில் சிக்கி கொண்டார். இந்த நிலை நாளை யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம் என்பதால், எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் ஒன்று பென்சில்வானியா (Pennsylvania). இங்குள்ள டக்யூன்ஸ் என்ற நகரில், கடந்த 21ம் தேதி நள்ளிரவில் அரங்கேறியது அந்த விபரீதம். அப்போது மணி சுமார் 10 இருக்கும்.

அங்குள்ள ரயில்வே தண்டவாளம் ஒன்றில் வெள்ளை நிற செடான் வகை கார் ஒன்று சிக்கி கொண்டிருந்தது. சாலையை ஒட்டியே அமைந்துள்ள அந்த ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கொண்டிருந்த காரை வெளியே எடுக்க முடியவில்லை.
Image Source: City of Duquesne Police Department

ஆரம்பத்தில் அங்கிருந்தவர்கள் எல்லாம், அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் விட்டு விட்டனர். ஆனால் ஒரு சில நிமிடங்கள் கழிந்த பின்பும் கூட கார் அங்கேயே நின்று கொண்டிருந்தது. அப்போதுதான் ரயில்வே தண்டவாளத்தில் கார் சிக்கி கொண்டு விட்டது என்ற விபரீதத்தை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காருக்கு அருகே சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் பெண் ஒருவர் சிக்கி கொண்டிருந்தார்.

அவர் குடிபோதையில் இருந்தார். இதன் காரணமாக சுய நினைவை கூட இழந்து விட்டார். பின்னர் சிறிது நேரம் போராடி, போலீசார் காரை மீட்டனர். அத்துடன் காருக்குள் சிக்கி கொண்டிருந்த பெண்ணையும் மீட்டனர்.

அதன்பின் அவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் வெளியிட்ட தகவல்கள் பகீர் ரகம். தண்டவாளத்தில் சிக்கி கொண்ட பெண் செல்போன் ஒன்றை வைத்துள்ளார். அதில் உள்ள ஜிபிஎஸ் வழிகாட்டுதலின்படிதான் அவர் காரை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.

அப்போது ரயில்வே தண்டவாளத்தின் வழியாக செல்ல வேண்டும் என்று ஜிபிஎஸ் காட்டியுள்ளது. ஆனால் சற்றும் யோசிக்காமல், தண்டவாளத்தின் வழியாக அவர் காரை செலுத்தி விட்டார். அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்ததும் இதற்கு ஓர் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில்தான் காரானது, ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கொண்டு விட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில்கள் எதுவும் வரவில்லை. இல்லாவிட்டால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க கூடும். அதிர்ஷ்டவசமாக அந்த பெண் தப்பி விட்டார்.

''ரயில்வே தண்டவாளத்தின் வழியாக செல்லும்படி ஜிபிஎஸ் வழி காட்டியதால்தான் நான் அவ்வாறு சென்று சிக்கி கொண்டேன்'' என விசாரணையின்போது அந்த பெண், போலீசாரிடம் கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரயில்வே தண்டவாளத்தில் கார் சிக்கி கொண்ட புகைப்படத்துடன், இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை தற்போது போலீசார் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். போலீசாரின் இந்த பதிவு உலகம் முழுக்க வைரலாகி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டெக்னாலஜி வெகுவாக வளர்ந்து விட்ட இந்த காலத்தில் பலர் ஜிபிஎஸ் பயன்படுத்தி வருகின்றனர். ஜிபிஎஸ் பார்த்துதான், செல்ல வேண்டிய முகவரியை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் டெக்னாலஜி எல்லா நேரங்களிலும் கை கொடுக்காது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம் மட்டுமே.

அமெரிக்காவில் நடைபெற்ற இந்த சம்பவத்தை போல் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவிலும் ஒரு விபரீதம் அரங்கேறியது. ஆம், ஆக்ரா-லக்னோ அதிவிரைவு சாலையில், கூகுள் மேப்-ஐ பின்தொடர்ந்து கொண்டு சென்ற கார், 65 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

அப்போது காரில் 4 பேர் இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். ஆட்டோ டிரைவரான முகமது நவுசாத் என்பவர்தான் அந்த காரின் உரிமையாளர். தனது மனைவிக்கு பரிசாக வழங்குவதற்காக புதிய எஸ்யூவி வகை காரை வாங்கி கொண்டு அப்போதுதான் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

காரில் உடன் இருந்தது முகமது நவுசாத்தின் நண்பர்கள். அந்த நேரத்தில்தான் புதிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. டெக்னாலஜி மீது கண் மூடித்தனமாக நம்பிக்கை வைக்காமல், சற்றே சுதாரிப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இவ்விரு சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன.


Click it and Unblock the Notifications








