புது காரை கவரை கிழிக்காமலே யூஸ் பண்றீங்களா? அதுல எவ்ளோ ரிஸ்க் இருக்கு தெரியுமா? உடனே கிழிச்சி தூரபோடுங்க!
புதுசா காரை வாங்கிய ஒவ்வொரும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்று, அவர்கள் வாங்கிய வாகனம் நீண்ட காலத்திற்கு புத்தம் புதிதுபோல் இருக்க வேண்டும் என்பதுதான். இதற்காக என்னென்ன வேலைகளையோ வாகன உரிமையாளர்கள் பார்த்து வருகின்றனர். அந்தவகையில், சிலர் இருக்கைகளில் வழங்கப்படும் பாலித்தீன் கவர்களைகூட அகற்றாமல் பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம். அதை கிழித்துவிட்டால், இருக்கை சீக்கிரமே அழுக்காகிவிடும் என்பது அவர்களின் எண்ணம் ஆகும். மேலும், காரின் தோற்றமும் சீக்கிரமே பழையதாக ஆகிவிடும் என்பதும் அவர்களின் கவலையாக இருக்கின்றது.
இதனாலேயே புதிதாக வாங்கப்படும் கார்களின் இருக்கை உள்ளிட்டவற்றில் வழங்கப்படும் பாலித்தீன் கவர்களை அதன் உரிமையாளர்கள் கிழித்துப் போடாமல் மாதக் கணக்கில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகுந்த தீங்கை விளைவிக்கும் என்கிற அதிர்ச்சியான தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது.

பொதுவாக பிளாஸ்டிக் என்றாலே கேன்சருக்கு வழிவகுக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இத்தகைய ஆபத்தான பாதிப்புகளே காரில் நீண்ட காலமாக பாலித்தீன் கவர்களை அகற்றாமல் பயன்படுத்துவதனால் ஏற்படும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. மிக முக்கியமாக பாலித்தீன் போர்த்தப்பட்ட இருக்கையைக் கொண்ட கார் நீண்ட நேரம் வெயில் படும் இடத்தில் நிற்கும் போதே இந்த மாதிரியான ஆபத்தான சூழல் ஏற்படுகின்றது.
அதீத உஷ்ணம் காரணமாக பாலித்தினீல் இருந்து குறிப்பிட்ட நச்சு வாயு வெளியாகும். அது அடைக்கப்பட்ட காரில் முழுமையாக நிரம்பி இருக்கும். இந்த சூழலிலேயே காருக்குள் நுழைந்து அதில் இருக்கும் காற்றை சுவாசித்தால் அந்த நச்சு காற்று உடலுக்குள் சென்று கணிக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக நீண்ட காலத்திற்கு இப்படியே நடக்கும் எனில் உடல் நலத்தில் மிகப் பெரிய பாதிப்புகளை அது ஏற்படுத்தும்.
எனவேதான் புதிய காரில் வழங்கப்படும் பாலித்தீன் கவர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அதுமட்டுமல்ல பாலித்தீன் கவர் போர்த்தப்பட்ட இருக்கையில் அமரும்போது போதிய கிரிப்பான அமர்வையும் பயணிகளால் பெற முடியாது. ஒவ்வொரு சிறிய பிரேக்கிற்கும் முன் பக்கம் நகர்ந்து வருகின்ற சூழல் உருவாகும்.
இது மிகப் பெரிய ஆபத்தான சூழலைகூட நொடிப்பொழுதில் ஏற்படுத்திவிடும். குறிப்பாக, வேகமான பிரேக்கிங்கின்போது, பயணியை வேகமாக முன்னோக்கி நகர்த்தி காயமடையச் செய்யக்கூடும். ஆகையால், கார்களின் இருக்கையில் பாலித்தீன் கவர் போர்த்தப்பட்டு இருக்கும் அதனை உடனடியாக அகற்றிவிடுவது. சௌகரியமான பயணம் மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு இது வழிவகுக்கும்.
உங்களின் நண்பர்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ யாராவது இப்படி நீண்ட காலமாக பாலித்தீன் கவரை அகற்றாமல் பயன்படுத்தி வந்தால் இப்படி ஒரு பிரச்னை இதில் இருப்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதும் நல்லது. இதனாலேயே முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் சில தங்களின் கார்களில் இதுபோன்று பாலித்தீன் கவர்களைப் பயன்படுத்துவதை தவிர்த்திருக்கின்றனர்.
வாடிக்கையாளர்களின் நலன் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் சுற்றுச்சூழலின் நலனும் இதில் அடங்கி இருக்கின்றது. மேலும், பாலித்தீன்களுக்கு பதிலாக மறுசுழற்சி செய்யப்பட்ட துணிகளையே பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தற்போது பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். அது கார் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அழுக்கு மற்றும் பிற சேதங்களில் வாகனத்தைப் பாதுகாக்கும்.
அதேவேளையில், கார்களில் பாலித்தீன் கவர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அதை அகற்றிவிட்டே பெரும்பாலான டீலர்களும் டெலிவரி வழங்குவர். இதனால் பலதரப்பட்ட ஆபத்து ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்த விஷயத்தில் சில டீலர்கள் கராராக இருப்பர். ஆனால், சில இடங்களில் மட்டும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப டீலர்கள் கவருடன் காரை டெலிவரி கொடுத்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கார் வாங்க வேண்டும் என்பது நம்மில் பலரின் நீண்ட கால கனவாக இருக்கின்றது. அத்தகைய வாகனத்தை புதிதாக பார்த்துக் கொள்ள வேண்டும்தான். ஆனால், அதற்கு பல வழிகள் இருக்கின்றன. கார் பராமரிப்பிற்கு என பலதரப்பட்ட பொருட்கள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதன் வாயிலாக தசாப்தங்களுக்கும் வாகனங்களை புதிதுபோல் பார்த்துக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








