நிறைய கப்பல்களை கேள்விப்பட்டு இருப்பீங்க... இப்படியொரு பிரம்மாண்டத்தை கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டீங்க
உலகிலேயே இதுவரை கட்டப்பட்ட அதிக டன் எடை கொண்ட கப்பல்களில் மிகப்பெரியது க்னாக் நேவிஸ் என அழைக்கப்படும் 'சீவைஸ் ஜெயண்ட்' (Seawise Giant) என்கிற எண்ணெய்க் கப்பலாகும். பயணிகளை அழைத்து செல்லும் கப்பல்களில், உலகின் மிகப்பெரியது 'ஐகான் ஆஃப் தி சீஸ்' (Icon of the Seas) ஆகும்.
2024 ஜனவரி முதல் சேவையில் இருக்கும் உலகின் மிகப் பெரிய சொகுசு கப்பலான இதை ராயல் கரீபியன் (Royal Caribbean) நிறுவனம் செல்வந்தர்களின் குடும்ப விடுமுறை சுற்றுலா தளமாக, தீவுகள் உள்பட உலகின் கண்கவர் கடற்கரை நகரங்களை இணைக்கும் விதத்திலான சேவையில் பயன்படுத்தி வருகிறது. இதற்காக, இந்த கப்பல் எட்டு தனித்துவமான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒவ்வொரு பகுதிகளும், பயணிகள் கப்பலில் எளிதாக செல்லவும், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற அனுபவங்களை கண்டறியவும் உதவுகின்றன. இந்த கப்பலின் மொத்த எடை சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 653 டன் ஆகும். இதன் நீளம் 364.75 மீட்டர் (1,196.7 அடி). மொத்தம் 20 தளங்கள் உள்ளன; அவற்றில் 18 தளங்கள் பயணிகளின் பயன்பாட்டிற்குரியவை.
5,610 பயணிகளில் இருந்து அதிகபட்சமாக 7,600 பயணிகளையும், 2,350 ஊழியர்களையும் ஏற்றிச் செல்ல முடியும். இந்த சொகுசு கப்பலின் முதல் பயணம் ஜனவரி 27, 2024 அன்று மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் மியாமி, புளோரிடாவைத் தன் தளமாகக் கொண்டு இந்த கப்பல் செயல்படுகிறது. ராயல் கரீபியன் நிறுவனத்தின் முதல் கப்பலாக, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) முக்கிய எரிபொருளாக இது பயன்படுத்துகிறது.
கடல்சார் பொறியியலின் ஒரு அற்புதமான 'ஐகான் ஆஃப் தி சீஸ்' ஒரு சிக்கலான டீசல்-எலக்ட்ரிக் உந்துவிசை அமைப்பைக் கொண்டுள்ளது. இது முக்கியமாக, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் பல மேம்பட்ட சுற்றுச்சூழல் தொழில்நுட்பங்களால் இயக்கப்படுகிறது. கப்பலின் இயக்கம் மற்றும் அனைத்து செயல்பாடுகளும் (ஹோட்டல் பணிகள் உள்பட) மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட அமைப்பால் இயக்கப்படுகிறது.
இந்த கப்பலில் பல்வேறு எரிபொருள்களில் இயங்கக்கூடிய ஆறு வூர்ட்ஸிலா (Wärtsilä) என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை LNG-ஐ தான் முக்கிய எரிபொருளாக கொண்டிருந்தாலும், பெட்ரோலில் இருந்து பெறப்படும் வடிநீர்மம் செய்யப்பட்ட எரிபொருள்களிலும் இயங்கும் திறன் கொண்டவை. இந்த கப்பலின் ஆறு என்ஜின்களில், 14 சிலிண்டர்கள் கொண்ட மூன்று வூர்ட்ஸிலா என்ஜின்கள் தலா 16,030 கிலோவாட்ஸ் (சுமார் 21,790 எச்பி) ஆற்றலை உருவாக்குகின்றன.

12 சிலிண்டர்களை கொண்ட மற்ற மூன்று வூர்ட்ஸிலா என்ஜின்கள் தலா 13,740 கிலோவாட்ஸ் (சுமார் 18,680 எச்பி) ஆற்றலை உருவாக்குகின்றன. ஒட்டுமொத்தமாக இந்த கப்பலின் செயல் ஆற்றல் சுமார் 67,500 கிலோவாட்ஸ் (90,000 எச்பி-க்கும் மேல்) ஆகும். இந்த என்ஜின்கள் மின்சாரத்தை உருவாக்கி, கப்பலின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்ட மூன்று 20-மெகாவாட் (27,000 எச்பி) ABB அசிபாட் த்ரஸ்டர்கள் (Azipod Thrusters)-ஐ இயக்குகின்றன.
அசிபாட் த்ரஸ்டர்கள் கப்பலுக்கு வெளியே நீரில் செயல்படும் மின் மோட்டார்கள் மூலம் இயக்கப்படுகின்றன. ABB என்பது ஐகான் ஆஃப் தி சீஸ் கப்பலுக்காக இந்த அசிபாட் த்ரஸ்டர்களை உருவாக்கி கொடுத்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஏபிபி குழுமத்தை குறிக்கிறது. இந்த அசிபாட் த்ரஸ்டர்கள் 360-டிகிரி சுழன்று, பாரம்பரிய ரூடர் அமைப்பின் தேவையை நீக்கி, சிறந்த சூழ்ச்சித் திறனை வழங்குகின்றன.
இந்த கப்பலில் ஐந்து 4.8 மெகாவாட் (6,400 எச்பி) வூர்ட்ஸிலா போ (Bow) த்ரஸ்டர்களும் உள்ளன. இவை கப்பலை துறைமுகத்தில் இயக்கவும், சரியான இடத்தில் நிறுத்தவும் உதவுகின்றன. இந்த சொகுசு கப்பலால் அதிகபட்சமாக 22 நாட்ஸ் (சுமார் 25 mph அல்லது 41 km/h) வேகத்தை அடைய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐகான் ஆஃப் தி சீஸ் ஆனது மனிதன் உருவாக்கிய மிக பிரம்மாண்டமான மற்றும் அற்புதமான பொறியியல் படைப்புகளுள் முக்கியமானது. கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் இந்த கப்பலில் பயணிக்கிறார்களா என உங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கலாம், ஆனால் உண்மையில் இந்த சொகுசு கப்பலை நேரில் பார்த்தீர்கள் என்றால் இவ்வளவு பெரிய கப்பலில் 10 ஆயிரம் பேர் மட்டும்தான் அழைத்து செல்லப்படுகிறார்களா என ஆச்சிரியப்பட தோன்றும்.


Click it and Unblock the Notifications








