சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்-வே இவ்ளோ சூப்பரானதா!! ஒவ்வொரு பாயிண்டும் தெரிஞ்சிக்க வேண்டியவை!
இந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை-பெங்களூரூவை இணைக்கும் விதமாக புதிய எக்ஸ்பிரஸ்-வே ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இரு நகரங்களுக்கும் இடையில் இருக்கும் பயண நேரத்தைக் குறைக்கும் முயற்சியாக இந்த புதிய எக்ஸ்பிரஸ்-வே பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த விரைவுச்சாலை மூன்று மாநிலங்களை இணைக்க இருக்கின்றது.
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடாக ஆகிய மூன்று தென்னிந்திய மாநிலங்களையே அது இணைக்க இருக்கின்றது. இந்த புதிய சாலை பயன்பாட்டிற்கும் வரும்போது இப்போது இருப்பதைக் காட்டிலும் மூன்று மணி நேரம் வரை பயண நேரம் குறைக்கப்படும். இந்த விரைவுச்சாலை பயண நேரத்தைக் குறைக்க மட்டுமல்ல பெரும் அளவில் எரிபொருளைச் சிக்கனப்படுத்தவும் உதவும்.

இப்போதைய நிலவரப்படி இரு நகரங்களுக்கும் இடையில் 6 முதல் 7 மணி நேரங்களாக பயண நேரம் இருக்கின்றது. இந்த அதிக மணி நேரத்தையே பெரும் அளவில் குறைக்க இருக்கின்றது புதிய சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை. இதுமட்டுமில்லைங்க, மூன்று மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்த புதிய விரைவுச்சாலை மிகப் பெரிய அளவில் உதவ இருக்கின்றது.
இதனால்தான் இந்த விரைவுச் சாலை மீதான எதிர்பார்ப்பு சென்னை மற்றும் பெங்களூரு நகர வாசிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை 285.3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இது ஓர் நான்கு வழிச் சாலை திட்டமாகும்.
இந்த நான்கு வழி விரைவுச் சாலை பயன்பாட்டிற்கு வருவதால் பயண நேரம் குறைவது, எரிபொருள் சிக்கனம் செய்யப்படுவது மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை மட்டுமே கிடைக்கப்போவதில்லை. இந்த சாலையால் இரு முக்கிய நகரங்களின் காற்று மாசுப்பாட்டு அளவும் குறைய இருப்பதாக கூறப்படுகின்றது.
சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த புதிய நான்கு வழிச்சாலை உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. விரைவுச்சாலை என்ற உடன் இந்த சாலையில் எத்தனை கிமீ வேகத்தில் பயணிக்கலாம் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பி இருக்கும். இந்த விரைவுச்சாலையில் சுமார் 120 கிமீ வேகத்தில் பயணிக்கலாம்.
இதுவே அனுமதிக்கப்பட் உச்சகட்ட வேக வரம்பு ஆகும். தென்னிந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான சென்னை துறைமுகத்தை அடைய இந்த சாலை பெரும் உதவியாக இருக்கும். 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விரைவுச் சாலை உருவாக்க பணிகள் முடிவடைந்துவிடும் என கூறப்படுகின்றது.
இந்த விரைவச்சாலையின் மற்றும் ஒரு சிறப்பு என்ன என்றால் இரண்டு வெவ்வேறு விதமான அண்டர்பாஸ்-களைக் கொண்டிருக்கப் போவதுதான். கால்நடைகள் சாலையில் அல்லாமல் சாலைக்கு மேலாக கடந்துச் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட இருக்கின்றது. இதேபோல், வாகனங்களுக்கான அண்டர்பாஸும் இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் இருக்கும்.
பெங்களூருவின் ஹொஸ்கேட் தொடங்கி சென்னையின் ஸ்ரீபெரும்புதூர் வரையில் இந்த சாலை நீடிக்கும். இந்த வழித்தடத்திலேயே முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. மஹிந்திரா, நிஸான், பஜாஜ் மற்றும் பாரத் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆலைகளும் இந்த வழித்தடத்திலேயே அமைந்திருக்கின்றன.
இந்த உற்பத்தியாளர்களுக்கு மிகப் பெரிய அளவில் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை பெரும் உதவியாக இருக்கப் போகின்றது. ஒரு நாளைக்கு 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வாகனங்கள் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2018ம் ஆண்டிலேயே இந்த எக்ஸ்பிரஸ்வே அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
அப்போது எட்டு வழி சாலையாக அமைக்கவே தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டது. ஆனால், இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையிலேயே அது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. ஏற்கனவே இரண்டு நெடுஞ்சாலைகள் சென்னை-பெங்களூருவை இணைக்கும் விதமாக பயன்பாட்டில் உள்ளன.
ஒன்று, 335 கிமீ பயண தூரம் கொண்ட ராணிப்பேட்டை, கோலார், சித்தூர், காஞ்சிபுரம் வழித்தடம் ஆகும். மற்றொன்று, 372 கிமீ பயண தூரம் கொண்ட கிருஷ்ணகிரி-ராணிப்பேட்டை வழித்தடம் ஆகும். இவற்றுடனேயே புதிய விரைவுச்சாலை இணைய இருக்கின்றது. புதிய விரைவுச்சாலை மையப் பகுதி இடைவெளி 21 மீட்டர் அகலம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.
பூச்செடிகள் அல்லது கற்களால் அந்த இடைவெளி அலங்கரிக்கப்பட்டு இருக்கும். மேலும், எதிர்காலத்தில் எட்டு வழிச்சாலையாகவும் இந்த விரைவுச்சாலையை அரசு விரிவாக்கம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விரைவுச்சாலை பயன்பாட்டிற்கும் வரும்பட்சத்தில் ரியல்எஸ்டேட் மதிப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கார் மற்றும் கனரக வாகனங்கள் மட்டுமின்றி உயர் சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கும் இந்த சாலையில் பயணிக்க அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டூ-வீலர்களுக்கு அனுமதி வழங்க்கப்படும் எனில் மிக சிறந்த ரைடு அனுபவத்தை இருசக்கர வாகன ஓட்டிகளால் இந்த வழித்தடத்தில் பெற்றுக் கொள்ள முடியும். ஆந்திராவில் பயணிக்கும்போது பசுமையான சூழலில் பயணிக்கின்ற வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், மிக சிறந்த ரைடிங் அனுபவம் அங்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்ப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








