மீனுக்காக மட்டும் அல்ல! டால்பின்கள் ஏன் கப்பல்களை பின் தொடர்ந்து வருகின்றன தெரியுமா? இப்படி ஒரு குணம் இருக்கா?
கப்பல் மற்றும் படகுகளை டால்பின்கள் பின் தொடர்ந்து வருவதற்கு பின்னால் மறைந்துள்ள சுவாரஸ்யமான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடல் என்றால் நம் நினைவிற்கு வரும் விஷயங்களில் டால்பின்களும் (Dolphins) ஒன்று. டால்பின்களின் சேட்டைகளை நேரில் காணும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் டால்பின்கள் செய்யும் குறும்புகளை, வீடியோக்களில் எளிதாக காணலாம். டால்பின்கள் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன.

அவற்றில் டால்பின்கள் துள்ளி குதித்து விளையாடுவதை நீங்கள் கண்டு மகிழ்ந்திருக்கலாம். டால்பின்களின் வீடியோக்களை நீங்கள் அதிகமாக பார்க்க கூடியவர் என்றால், ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். டால்பின்கள் எப்போதும் கப்பல் மற்றும் படகுகளை பின் தொடர்ந்து வரும். ஆம், உண்மைதான். இயற்கையாகவே டால்பின்களுக்கு இப்படி ஒரு வினோதமான குணம் உள்ளது.

கப்பல் மற்றும் படகுகளை பின் தொடர்ந்து வரும் விஷயத்தை பொறுத்தவரையில், கடலில் வாழும் மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, டால்பின்கள் முற்றிலும் மாறுபட்டவை. உண்மையில் டால்பின்கள் வேடிக்கைக்காக மட்டும் இப்படி செய்வது கிடையாது. இதற்கு பின்னால் பல்வேறு சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டால்பின்கள் புத்திசாலித்தனமானவை, சுறுசுறுப்பானவை என்பதெல்லாம் நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் பலருக்கும் தெரியாத மற்றொரு குணமும் டால்பின்களிடம் இருக்கிறது. அது 'க்யூரியாசிட்டி' (Curiosity). ஆம், அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் டால்பின்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது.

டால்பின்களின் இந்த குணம்தான், அவை கப்பல் மற்றும் படகுகளை பின் தொடர்வதற்கு முதல் மற்றும் மிக முக்கியமான காரணம். கப்பல் மற்றும் படகுகள் செல்லும்போது சத்தம் ஏற்படும். தங்கள் வாழ்விடத்திற்கு வந்துள்ள வித்தியாசமான ஒன்றை (கப்பல் மற்றும் படகுகள்) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை டால்பின்களிடம் இந்த சத்தம் தூண்டுகிறது.

இதன் பின்னர் டால்பின்கள் உடனடியாக கப்பல் மற்றும் படகுகளின் அருகில் சென்று, அவற்றை ஆராய்ச்சி செய்யும். அத்துடன் கப்பல் மற்றும் படகுகளில் பயணம் செய்பவர்களையும் உற்று நோக்கும். ஒரு வேளை கப்பல் மற்றும் படகுகளில் பயணம் செய்பவர்கள், சத்தமாக பாடல்களை கேட்டு கொண்டேவும் பயணம் செய்யலாம்.

இந்த பாடல்களின் சத்தமும், டால்பின்களை ஆர்வமடைய செய்யும். எனவே கப்பல் மற்றும் படகுகளில் என்ன நடக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் டால்பின்களிடம் அதிகரிக்கும். எனவே அவை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். பொதுவாக இதுபோன்ற சூழல்களில் மற்ற கடல்வாழ் உயிரினங்கள் நீந்தி வேறு இடத்திற்கு சென்று விடும்.

அல்லது பாதுகாப்பு இருக்காதோ எனக்கருதி மறைந்து கொள்ளும். ஆனால் டால்பின்கள் இதற்கு நேர்மாறாக நடந்து கொள்ளும். அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற டால்பின்களின் வித்தியாசமான குணம்தான் இதற்கு காரணம். பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அருகில் சென்று விசாரணை நடத்துவதற்கு டால்பின்கள் விரும்பும்!

அத்துடன் கப்பல் மற்றும் படகுகள் தண்ணீரில் செல்லும்போது உருவாகும் அலைகள், டால்பின்கள் பெரிதாக அலட்டி கொள்ளாமல் வேகமாக செல்வதற்கு உதவுகின்றன. அதாவது அதிக சக்தியை செலவழிக்காமலேயே டால்பின்களால் கூடுதல் தூரம் பயணிக்க முடியும். இதன் மூலமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு டால்பின்கள் எளிதாக செல்லும்.

கப்பல் மற்றும் படகுகள் மூலமாக உருவாகும் அலைகளை டால்பின்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றன. சொல்லப்போனால் டால்பின்கள் ஃப்ரீ ரைடை பெறுகின்றன. கப்பல் மற்றும் படகுகளை ஒட்டி பயணிப்பதற்கு டால்பின்கள் விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம். டால்பின்களின் இந்த பழக்கத்திற்கு பின்னால் உள்ள மற்றொரு காரணம் உணவு.

மனிதர்கள் நிரம்பியுள்ள கப்பல் மற்றும் படகுகளை உணவிற்கான சிறந்த வாய்ப்பாக டால்பின்கள் கருதும். பசியில் உள்ள தங்களுக்கு அவர்கள் மூலமாக உணவு கிடைக்கலாம் என்பதே இதற்கான காரணம். கப்பல் மற்றும் படகுகளில் பயணம் செய்பவர்கள் டால்பின்கள் சாப்பிடும் மீன்களை கடலில் வீசலாம். இது டால்பின்களின் பசியை ஆற்றும்.

டால்பின்கள் வந்தவுடன் அவற்றின் விளையாட்டுக்களால் ஈர்க்கப்பட்டு மீன்களை கடலில் வீசுபவர்களும் உள்ளனர். டால்பின்களை காண வேண்டும் என்ற ஆசையில் மீன்களை கடலில் வீசுபவர்களும் உள்ளனர். டால்பின்களிடம் உள்ள மற்றொரு விஷயத்தையும் இங்கே கூறி கொள்கிறோம். டால்பின்கள் பொதுவாக கவனத்தை பெற விரும்புபவை.

அதாவது மற்றவர்களின் கவனம் தங்கள் மீது விழ வேண்டும் என்ற குணம் டால்பின்களிடம் இருக்கிறது. எனவே கப்பல் மற்றும் படகுகளில் பயணம் செய்பவர்கள் கைகளை தட்டுவது போன்ற விஷயங்களை செய்தால், டால்பின்கள் துள்ளி குதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் டால்பின்களின் ஜம்ப்பிங்கை நீங்கள் கண்டு மகிழலாம்.


Click it and Unblock the Notifications








