விமானத்தில் மகாராணி போல் தனியாக பயணித்த இளம்பெண்... டிக்கெட் விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்
இளம்பெண் ஒருவர் மிகவும் குறைவான செலவில், ஒரு மகாராணியை போல், விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்துள்ளார். இதற்கான டிக்கெட் விலை எவ்வளவு? என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியமடைவது உறுதி.
இளம்பெண் ஒருவர் மிகவும் குறைவான செலவில், ஒரு மகாராணியை போல், விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்துள்ளார். இதற்கான டிக்கெட் விலை எவ்வளவு? என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியமடைவது உறுதி. அனேகமாக அந்த இளம்பெண் மீது பொறாமை கூட ஏற்படலாம்!

வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது விமானத்தில் பயணம் செய்து பார்த்து விட வேண்டும் என்ற கனவு, நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும். ஆனால் ஆகாயத்தில் மேக கூட்டங்களுக்கு இடையே பறக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற வாழ்நாள் கனவு பலருக்கும் எட்டாக்கனியாகவே உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், தனி விமானத்தில் பயணிப்பது என்பதெல்லாம் கனவில் கூட நடக்காத விஷயம். என்றாலும் தேச தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் மட்டும் இதற்கு விதி விலக்கு. தனி விமானத்தில் பயணிப்பது அவர்களுக்கு சர்வ சாதாரணம்.

ஆனால் தனி விமானத்தில் பயணிக்கும் பொன்னான வாய்ப்பு, சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால், அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது அதிர்ஷ்டம்தான் நிகழ வேண்டும். அப்படி ஒரு அதிர்ஷ்டம், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஷா எரிப்ஸ் என்ற இளம்பெண்ணுக்கு அடித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்றான டாவோவில் இருந்து, அந்நாட்டின் தலைநகர் மணிலாவிற்கு பயணம் செய்ய, பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பிஆர் 2820 (PR 2820) என்ற விமானத்தில், லூயிஷா எரிப்ஸ் டிக்கெட் 'புக்' செய்திருந்தார்.

இதன்பின் டாவோ விமான நிலையத்தில் வழக்கமான பரிசோதனைகளை எல்லாம் முடித்து கொண்டு, விமானத்தில் ஏறிய லூயிஷா எரிப்சுக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. இது ஒரு வழக்கமான பயணம் போலதான் இருக்கும் என்று மட்டுமே லூயிஷா எரிப்ஸ் நினைத்து கொண்டிருந்தார்.

ஆனால் நடந்தது வேறு. அன்றைய தினம் அந்த விமானத்தில், லூயிஷா எரிப்ஸ் மட்டும் ஒரு இளவரசி போல தனியாக பயணம் செய்தார். விமானத்தின் பணியாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர். ஆனால் லூயிஷா எரிப்ஸை தவிர வேறு பயணிகள் யாரும் விமானத்தில் இல்லை.

பயணிகள் யாரும் இல்லை என்பதால், ஆரம்பத்தில் தனியாக பயணம் செய்ய லூயிஷா எரிப்ஸ் தயங்கவே செய்தார். ஆனால் விமான பணியாளர்கள் கேட்டு கொண்டதால், தனி ஆளாகவே பயணம் செய்து விடுவது என்ற முடிவை அவர் எடுத்தார்.

கடந்த டிசம்பர் 24ம் தேதியன்று இந்த ஆச்சரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்த தகவலை, லூயிஷா எரிப்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் விமானத்தில் தனி ஆளாக எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக விமானத்தின் பணியாளர்களும், லூயிஷா எரிப்ஸ் உடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அந்த படத்தையும் லூயிஷா எரிப்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை வைத்து பார்க்கையில், இந்த பயணத்தை லூயிஷா எரிப்ஸ் மிகவும் ரசித்து மேற்கொண்டிருப்பார் என தெரிகிறது.

ஏனெனில் இந்த பொன்னான வாய்ப்பு அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்து விடாது. தனியாக பயணம் செய்ததற்காக லூயிஷா எரிப்ஸ் கூடுதல் கட்டணம் எதையும் செலுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் மற்ற பயணிகள் யாரும் வரவில்லை என்பதால், விமானத்தில் தனியாக பயணம் செய்யும் அதிர்ஷ்டம் லூயிஷா எரிப்சுக்கு கிட்டியுள்ளது. பயணத்தை நிறைவு செய்தபோது, விமானத்தின் பணியாளர்களுக்கு லூயிஷா எரிப்ஸ் நன்றி தெரிவித்தார்.

அதே சமயம் ஒரே ஒரு பயணியுடன் விமானத்தை இயக்கிய பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி கொண்டுள்ளனர்.

ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக கரோன் கிரீவ் என்ற பெண்ணுக்கு இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் இருந்து கிரேட் என்ற இடத்திற்கு பயணம் செய்ய ஜெட்2 விமானத்தில் அவர் டிக்கெட் புக் செய்திருந்தார்.

ஆனால் அவருடன் பயணம் செய்ய இருந்த மற்ற அனைத்து பயணிகளும் டிக்கெட்டை ரத்து செய்து விட்டனர். இதனால் விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்யும் வாய்ப்பு கரோன் கிரீவுக்கு கிடைத்தது. இதற்காக அவர் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

இந்திய மதிப்பில் வெறும் 5 ஆயிரம் ரூபாய்தான். ஆம், இந்திய மதிப்பில் 5 ஆயிரம் ரூபாய்க்குதான் கரோன் கிரீவ் டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் மற்ற பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்து விட்டதால், தனியாக பயணம் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதனிடையே தற்போது விமானத்தில் தனியாக பயணம் செய்த இளம்பெண் லூயிஷா எரிப்சும் கிட்டத்தட்ட இதே தொகைக்குதான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 ஆயிரம்) டிக்கெட் வாங்கியிருப்பார் என கூறப்படுகிறது. மிகவும் குறைவான செலவில், ஒரு மகாராணியை போல் அவர் பயணம் செய்துள்ளார்.

Image Courtesy: Boeing
விமானத்தில் தனியாக பயணம் செய்தவர்கள் குறித்த ஆச்சரியமான செய்திகள் அவ்வப்போது வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. இனி விமானங்கள் மற்றும் பைலட்கள் குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத ஆச்சரியமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 1903ம் ஆண்டில் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் 120 அடி தூரம் பயணம் செய்தது. ஆனால் தற்போது வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டு வரும் போயிங் 777 உள்ளிட்ட விமானங்கள், ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், சுமார் 16 ஆயிரம் கிமீ வரை பயணிக்கும் திறன் பெற்றவை.

கார் மற்றும் டூ வீலர் வாங்கும் பலரின் முக்கியமான எதிர்பார்ப்பு மைலேஜ்தான். அவ்வாறு, விமானத்திற்கு கணக்கிடுகையில், போயிங் 747 விமானம் ஒரு கேலனுக்கு 0.2 மைல் மட்டுமே மைலேஜ் தரும். அதேநேரம், இந்த விமானத்தில் அதிகபட்சமாக 550 பேர் வரை பயணிக்க முடியும் என்பதையும் பார்க்க வேண்டும்.

சர்வதேச அளவில் விமான போக்குவரத்துத் துறையின் பொதுவான மொழி ஆங்கிலம்தான். பைலட்கள் மற்றும் விமானங்களை கட்டுப்படுத்தும் பணியாளர்களுக்கு, ஆங்கில புலமை என்பது அடிப்படையான தகுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் பறக்கும் நேரத்தை கணக்கிட்டு மட்டுமே பைலட்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. விமானம் தாமதமாக வரும்போது காத்திருப்பது, விமானம் தாமதமாக புறப்படுவது, விமானம் புறப்படுவதற்கு முன்னர் இருக்கும் பணிகள் எல்லாம் கணக்கில் கொள்ளப்படாது.

விமானத்தில் பாதரசம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் விமானத்தின் பல பாகங்கள் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும். எனவே பாதரசத்தால் அவை பாதிப்படையும் அபாயம் உள்ளது. எனவேதான் விமானத்தில் பாதரசம் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

விமான கட்டுப்பாட்டு கோபுரத்தின் கண்ணாடி ஜன்னல்கள் மேல் இருந்து கீழ் நோக்கி 15 டிகிரி சாய்மானத்தில் அமைக்கப்பட்டிருக்கும். சூரிய வெளிச்சம், விளக்கு வெளிச்சத்திலிருந்து வரும் பிரதிபலிப்புகளை குறைப்பதற்காகவே ஜன்னல்கள் இவ்வாறு அமைக்கப்படுகிறது.

இதுவரை நடந்த விமான விபத்துக்களில் 80% விபத்துக்கள், விமானம் வானில் மேல் எழுந்த 3 நிமிடங்களுக்கு உள்ளாகவும், தரை இறங்குவதற்கு 8 நிமிடங்களுக்கு முன்பாகவும் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, விமானம் டேக் ஆஃப் ஆகும்போதும், தரை இறங்கும்போதும்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடந்துள்ளன.

விமானத்தின் வெளியேறும் வழிக்கு 5 வரிசைக்கு அப்பால் அமர்ந்திருப்பவர்கள், அவசர சமயங்களில் வெளியேறுவதில் சிக்கல் இருக்கிறதாம். அதாவது குறித்த நேரத்தில் அவர்களால் வெளியேறுவது கடினம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் விமானத்தில் உள்ள அனைவரையும், 90 வினாடிகளுக்குள் வெளியேற்றும் வசதியுடன் கதவுகள் அமைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விதி.


Click it and Unblock the Notifications