மோசமான சாலைகளை சொந்த செலவில் சீரமைக்கும் மனிதர்.. கண் கலங்க வைக்கும் நெகிழ்ச்சி பின்னணி..
குண்டும், குழியுமான சாலையில் பயணிக்கும்போது நடைபெற்ற விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அந்த வாலிபரின் தந்தை, தனது சொந்த செலவில், சாலைகளை எல்லாம் சீரமைத்து வருகிறார்.
மோசமான நிலையில் உள்ள சாலைகளை எல்லாம், தனது சொந்த செலவில் சீரமைக்கும் பணிகளை ஒருவர் மேற்கொண்டுள்ளார். கண் கலங்க வைக்கும் இதன் நெகிழ்ச்சியான பின்னணி குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கு ஏற்ப புதிய சாலைகள் அமைக்கப்படுவது இல்லை. ஏற்கனவே உள்ள பழைய சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படுவது இல்லை. அந்த சாலைகள் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கின்றன.

சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால், விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டில் மட்டும், 3,597 உயிர்களை, குண்டும், குழியுமான சாலைகள் காவு வாங்கியுள்ளன.

மும்பையில் வசித்து வரும் தாதாராவ் பில்ஹோர் என்பவர், குண்டும், குழியுமான சாலையின் காரணமாக ஏற்பட்ட விபத்தில், தனது அன்புக்குரிய மகனை பறிகொடுத்தார். தாதாராவ் பில்ஹோரின் 16 வயது மகன் பிரகாஷ், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி-விக்ரோலி லிங்க் ரோட்டில், கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி, பிரகாஷ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அந்த சாலையில் இருந்த ஒரு குழியில் சிக்கி பைக் நிலை தடுமாறியது. இதனால் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலையில் உள்ள குழிகளை அடைக்காமல் விட்ட அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம். இப்படி ஒரு விபத்து நிகழ்ந்த பின்பும் கூட அரசின் அலட்சியம் தொடர்ந்தது. எனவே தன் மகனுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்பட கூடாது என தாதாராவ் பில்ஹோர் முடிவெடுத்தார்.

தன் மகனின் மரணத்தை தொடர்ந்து, அத்தகைய விபத்துக்களை தவிர்க்கும் வகையில், மும்பை நகரில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளை எல்லாம் தனது சொந்த செலவில் சீரமைக்க தொடங்கினார் தாதாராவ் பில்ஹோர். மண், கற்களை கொண்டு இதுவரை 556 குழிகளை அவர் மூடியுள்ளார்.

இதுகுறித்து தாதாராவ் பில்ஹோர் கூறுகையில், ''சாலையில் இருந்த குழியின் காரணமாகதான் எனது மகன் பிரகாஷ் உயிரிழந்தார். அவரை போல் வேறு யாரும் உயிரிழக்க கூடாது என நினைக்கிறேன். இந்தியா முழுவதும் குண்டும், குழிகளுமற்ற சாலைகள் உருவாகும் வரை எனது பணி தொடரும்'' என்றார்.

தாதாராவ் பில்ஹோர் மேலும் கூறுகையில், ''நமது நாட்டின் மக்கள் தொகை மிகப்பெரியது. ஒரு லட்சம் பேர், என்னைப்போல் குழிகளை அடைக்க தொடங்கினால், இந்தியா முழுவதும் குண்டும், குழிகளுமற்ற சாலைகள் வெகு விரைவில் உருவாகி விடும்'' என்றார்.

குண்டும், குழியுமான சாலைகளின் காரணமாக, தன் மகனை போல் வேறு யாரும் உயிரிழக்க கூடாது என எண்ணி, தனது சொந்த செலவில், சாலைகளை சீரமைத்து வரும் தந்தையின் செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாதாராவ் பில்ஹோர் தன்னால் இயன்ற வரை, குழிகளை அடைத்து வருகிறார். இதுபோன்ற சம்பவங்களை பார்த்த பிறகாவது அரசும், அதிகாரிகளும் மாற வேண்டும் என்பதே சாதாரண பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.

சாலைகள் அமைக்க விடப்படும் டெண்டர்களில் ஊழல், முறைகேடு என பல்வேறு காரணங்களால் பெரும்பாலும் தரமற்ற சாலைகளே அமைக்கப்படுகின்றன. அவை சிறிது காலம் கூட தாக்குபிடிப்பதில்லை. அதுவும் மழைக்காலம் வந்து விட்டால், சாலைகள் மிக விரைவாக குண்டும், குழிகளுமாக மாறி விடுகின்றன.

அதையும் கூட அதிகாரிகள் மிக விரைவாக முன்வந்து சீரமைப்பது இல்லை. தற்போது பருவ மழைக்காலம் என்பதால், நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மும்பையிலும் கூட, கடந்த சில நாட்களுக்கு முன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் வழக்கம்போல சாலைகள் குண்டும், குழிகளுமாக மாறி விட்டன.

இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களினால், தற்போதைய மழைக்காலத்தில் மட்டும், மும்பையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மஹாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசை கண்டித்து, அங்கு எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின.

இதனிடையே அதிகாரிகளுக்கு கேள்வி ஒன்றையும் தாதாராவ் பில்ஹோர் எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ''விபத்து நடைபெற்றால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் விபத்து நடைபெறும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்பதே எனது கேள்வி'' என்றார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications