நன்றி மறந்த மனிதர்களிடம் இருந்து பசுக்களை பாதுகாக்கும் நேபாளி... இந்தியாவுக்கு உருக்கமான கோரிக்கை
நன்றி மறந்த மனிதர்களிடம் இருந்து பசுக்களை பாதுகாத்து வரும் நேபாளி ஒருவர், இந்தியாவுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
நன்றி மறந்த மனிதர்களிடம் இருந்து பசுக்களை பாதுகாத்து வரும் நேபாளி ஒருவர், இந்தியாவுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

நேபாள நாட்டின் தேசிய விலங்கு பசு. இந்தியாவை போன்று நேபாள மக்களும் பசுக்களை ஒரு புனிதமான விலங்காகவே பார்த்து வருகின்றனர். ஆனால் அங்கு ஒரு சில விவசாயிகளால் பசுக்கள் அவல நிலைக்கு ஆளாக்கப்படுகின்றன.

வயதான பசுக்களை ஒரு சில விவசாயிகள் அப்படியே சாலையில் விட்டு விடுகின்றனர். பெரும்பாலும் பசுக்களிடம் இருந்து கிடைக்கும் பாலுக்கான தேவை முடிந்த பிறகுதான் அவை கைவிடப்படுகின்றன. அவற்றுக்கு வீணாக தீவனம் அளிக்க விவசாயிகள் விரும்புவது இல்லை.

இவ்வாறு விவசாயிகளால் கைவிடப்படும் பசுக்கள் சாலையில் அப்படியே சுற்றி திரிந்து வருகின்றன. அத்துடன் கிடைக்கும் பிளாஸ்டிக் பை உள்ளிட்டவற்றையும் உண்டு வருகின்றன. இதனால் பசுக்கள் விரைவாக உயிரிழக்கும் அபாயம் நிலவி வருகிறது.

பசுக்களுக்கு ஏற்படும் இந்த அவல நிலையை கண்டு நெயுபனே மனம் வெதும்பி போனார். நெயுபனே நேபாளத்தை சேர்ந்தவர். அவருக்கு பைக்குகள் என்றால் கொள்ளை பிரியம். அதே அளவிற்கான பாசம் பசுக்கள் மீதும் அவருக்கு உண்டு.

எனவே பசுக்கள் இப்படி சாலையில் கைவிடப்படுவது அவருக்கு கவலையை ஏற்படுத்தியது. இதனால் சாலையில் சுற்றி திரியும் பசுக்களை மீட்டு அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை செய்ய தொடங்கினார் நெயுபனே. இன்றளவும் அவர் அதை செய்து வருகிறார்.

பசுக்களுக்காக சிறிய அளவிலான சரணாலயம் ஒன்றை நெயுபனே அமைத்துள்ளார். சாலையில் சுற்றி திரியும் பசுக்களை மீட்டு அங்குதான் கொண்டு செல்கிறார் நெயுபனே. வயதான மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட பசுக்களுக்கு அங்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்குவதன் மூலமாக பசுக்களின் உடல்நலம் மேம்படுத்தப்படுகிறது. தற்போது வரை மொத்தம் 166 பசுக்களை மீட்டு பராமரித்து வருகிறார் நெயுபனே. இதனால் நேபாளத்தையும் கடந்து உலகம் முழுவதும் நெயுபனே பிரபலமாகியுள்ளார்.

வயதான மற்றும் உடல் நலம் குன்றிய பசுக்களுடன் சேர்த்து, தேவைப்படாது என கருதி உரிமையாளர்களால் கைவிடப்படும் கன்றுகுட்டிகளையும் நெயுபனே மீட்டு வருகிறார். இதில், குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயம் அடங்கியுள்ளது.

பசுக்களை மீட்டு சரணாலயத்திற்கு கொண்டு செல்ல, தனது யமஹா நிறுவன மோட்டார் சைக்கிளை மட்டுமே நெயுபனே பயன்படுத்தி வருகிறார். லாரி போன்ற பெரிய வாகனங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்ற பிரசாரத்தை நேபாளத்தில் தீவிரமாக செய்து வருகிறார் நெயுபனே. எனவே பசுக்களுக்கு தேவையான தீவனம் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை கொடுத்து நெயுபனேவிற்கு உள்ளூர் மக்கள் உதவி செய்து வருகின்றனர்.

ஆனால் லாரி போன்ற பெரிய வாகனங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னிடம் இருக்கும் யமஹா மோட்டார் சைக்கிள் மூலமாகவே பசுக்களை மீட்கும் பணிகளை நெயுபனே தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

பசுக்களை மீட்டு பாதுகாத்து வரும் தனது பணிகளுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கும் நெயுபனே பல முறை கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

நெயுபனே தொடர்பாக BBC Reel உருவாக்கி வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
பசுக்கள் குறித்து நெயுபனே கூறுகையில், ''உலகம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இங்கு வாழும் உரிமை அனைவருக்கும் உள்ளது. இது பசு உள்ளிட்ட விலங்குகளுக்கும் பொருந்தும். ஒருவர் ஒரு பசுவின் பாலை 12-18 வருடங்கள் வரை குடிக்கிறார்.

ஆனால் காலம் கடந்ததும் அந்த நன்றியை அவர்கள் மறந்து விடுகின்றனர். பசுக்களை அப்படியே சாலையில் கைவிட்டு விடுகின்றனர். எனவேதான் நான் பசுக்களை மீட்டு பராமரித்து வருகிறேன். ஆனால் இதற்கு அதிக செலவு ஆகிறது.

எனவே இந்தியா எனக்கு உதவ வேண்டும். நான் இந்தியாவை பெரிதும் நம்பியுள்ளேன். பசுக்களுக்கு சோளம் உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருகிறேன். சில சமயங்களில் பசுக்களுக்கு உணவு அளிக்கும் வேலைக்காக நான் உணவு அருந்தவே மறந்து விடுவேன். இந்த பணியில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு'' என்றார்.


Click it and Unblock the Notifications