மழைக்காலத்துல விமானத்தில் போகும்போது என்னலாம் பண்ணணும் தெரியுமா? இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!
பருவமழை காலத்தில் (Monsoon Season) விமான பயணங்களை மேற்கொள்வது சவாலான விஷயம். ஆனால் ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், பருவமழை காலத்திலும் விமான பயணங்களை பாதுகாப்பாகவும், பிரச்னைகள் இல்லாமலும் மேற்கொள்ள முடியும். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டைரக் ஃப்ளைட்தான் பெஸ்ட்: மழைக்காலத்தில், முடிந்தவரை நேரடி விமானங்களை முன்பதிவு செய்வது நல்லது. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தாமதமாவதற்கான அல்லது ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை இது குறைக்கிறது. அத்துடன் பகல் நேரத்தில் விமானங்களை முன்பதிவு செய்யுங்கள். மதியம் அல்லது இரவு நேரங்களை காட்டிலும், பகல் வேளையில் வானிலை சாதகமாக இருக்கும்.

குடை முக்கியம் பிகிலு: விமான நிலையங்களுக்கு செல்லும்போதும், வெளியே வரும்போதும் திடீர் மழையில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள ரெயின்கோட் அல்லது குடையை எடுத்து செல்லுங்கள். அத்துடன் நீர்ப்புகா பைகளில், உங்கள் பொருட்களை பேக்கிங் செய்யுங்கள். மழை நீரால் ஏற்படும் சேதத்தில் இருந்து, இது உங்கள் பொருட்களை பாதுகாக்கும்.
கேரி-ஆன் லக்கேஜில் கவனமா இருங்க: மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை உங்கள் கேரி-ஆன் லக்கேஜில், எளிதில் எடுக்க கூடிய வகையில் வைத்து கொள்ளுங்கள். அவற்றை செக்-இன் லக்கேஜில் வைக்க கூடாது. மோசமான வானிலை காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது திடீரென ரத்து செய்யப்பட்டாலோ, செக்-இன் லக்கேஜ் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். எனவேதான் அத்தியாவசியமான பொருட்கள் உங்கள் கேரி-ஆன் லக்கேஜில் இருக்க வேண்டும்.

கேரி-ஆன் லக்கேஜ் என்பது உங்கள் கையிலேயே இருக்கும். விமானத்திற்கு உள்ளே நீங்கள் அதனை எடுத்து செல்லலாம். ஆனால் செக்-இன் லக்கேஜ் என்பது, விமானத்தின் சரக்குகளை வைக்க கூடிய பகுதியில் இருக்கும். விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே, விமான நிறுவனங்களிடம் அவற்றை நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும். கேரி-ஆன் மற்றும் செக்-இன் லக்கேஜ்களுக்கு இடையேயான வித்தியாசம் தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.
நிறைய தண்ணி குடிங்க: விமானத்தில் பறப்பது உங்கள் உடலில் நீரிழப்பு பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே விமானத்தில் பயணம் செய்யும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் விமானத்தில் பயணம் செய்யும்போது இன்னும் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது. அதே நேரத்தில் அதிகப்படியான அளவில் ஆல்கஹால் உட்கொள்வதை தவிர்க்கவும். இது உங்கள் உடலில் நீரிழப்பு பிரச்னையை அதிகமாக்கலாம்.

எதுக்கும் ஷாக் ஆக வேண்டாம்: மழைக்காலங்களில் மோசமான வானிலை காரணமாக விமான பயணத்தின் இடையே ஒரு சில பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கெல்லாம் அதிர்ச்சியடைய கூடாது. மனதளவில் தயாராக இருக்க வேண்டும். இதுபோன்ற சமயங்களில் புத்தங்களை வாசிப்பது அல்லது இசை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மனதை அமைதிப்படுத்தி கொள்ள முடியும்.
விமானங்களின் பைலட்கள் மற்றும் விமான பணிப்பெண்கள், மோசமான மற்றும் அவசர சூழ்நிலைகளை கையாள கூடிய திறன் படைத்தவர்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்து கொள்ளுங்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும்? என்பது அவர்களுக்கு தெரியும். பயிற்சி பெற்றிருப்பார்கள். எனவே தைரியமாக இருக்கவும்.
ஜன்னல் சீட் போட்றுங்க: மழைக்காலங்களில் விமானத்தில் பயணம் செய்யும்போது, ஜன்னல் இருக்கையை தேர்வு செய்வது நல்லது. இதன் மூலம் மழைக்காலத்தின் ரம்மியமான வானிலை மற்றும் இயற்கை அழகை உங்களால் முழுமையாக ரசிக்க முடியும். அத்துடன் ஜன்னல் இருக்கையில் அமர்வதன் மூலம், கழிவறையை பயன்படுத்துவதற்காக சக பயணிகள் அடிக்கடி எழுந்து சென்று கொண்டே இருக்கும் பிரச்னையில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதகமான வானிலை காரணமாக விமான அட்டவணையில் தாமதமோ அல்லது மாற்றங்களோ செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே மழைக்காலத்தில் விமான பயணங்களை மேற்கொள்ளும்போது, பொறுமையாகவும், நெகிழ்வாகவும் இருப்பது மிகவும் அவசியம். தேவைப்பட்டால் உங்கள் திட்டங்களில் மாற்றங்களை செய்து கொள்ள தயாராக இருங்கள். அத்துடன் நேர்மறையான அணுகுமுறையை பேணுங்கள்.


Click it and Unblock the Notifications









