எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும்போது நம்மில் நிறைய இந்த தப்பை செஞ்சிடுறோம்!!
நமது மத்திய அரசு 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டில் விற்பனையாகும் கார்களுள் 30 சதவீதமும், கமர்ஷியல் வாகனங்களுள் 70 சதவீதமும், 2 & 3-சக்கர வாகனங்களுள் 80 சதவீதமும் எலக்ட்ரிக்கில் இயங்கும் வாகனங்களை கொண்டு வருவது என்கிற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நோக்கம் 2030க்குள் நிறைவேறிவிடும் என்பதுபோல் தான் தற்போதைய சூழல் உள்ளது.
ஏனெனில், கடந்த சில வருடங்களில் நம் நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நன்கு அதிகரித்துள்ளது. இந்த சூழல் மேலும் விரிவடைய வேண்டுமாயின் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நாடு முழுவதும் பரவி காணப்பட வேண்டும். இருப்பினும் தயாரிப்பு நிறுவனங்கள் சார்ஜிங் நிலைய பற்றாக்குறையை உணர்ந்து வீட்டிலேயே சார்ஜ் ஏற்றி கொள்வதற்கு ஏதுவாக சில வசதிகளை வழங்குகின்றன.

ஃபாஸ்ட் சார்ஜரோ அல்லது வீட்டு உபயோக சார்ஜரோ, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும்போது செய்யக்கூடாத விஷயங்கள்:
ஓவர்-சார்ஜ் வேண்டாம்
எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளும் கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன் பேட்டரிகளை போன்றதே. ஸ்மார்ட்போனை எவ்வாறு நீண்ட நேரம் சார்ஜ் செய்வது சிறந்தது கிடையாதோ, அதேபோன்று எலக்ட்ரிக் வாகனங்களிலும் ஓவர்-சார்ஜ் வேண்டாம்.
பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படும் லித்தியம்-இரும்பு பேட்டரிகளை 30-80% சார்ஜ் நிரப்பினாலே போதுமானது. பேட்டரிகளை எப்போதும் 100% சார்ஜ் ஏற்றி கொண்டே இருப்பதும் அவற்றின் திறனை பாதிப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆதலால் எப்போதும் 80-90% சார்ஜ் வரையில் பேட்டரியை சார்ஜ் செய்தாலே போதுமானது மற்றும் அதுவே நல்லது. இது மொபைல் போன் பேட்டரிகளுக்கும் பொருந்தும்.

மொத்தமாக கரைக்கவும் வேண்டாம்
பேட்டரியை எவ்வாறு முழுவதும் 100% சார்ஜ் செய்ய வேண்டாமோ அதேபோன்று, மொத்தமாக 0 சார்ஜ்க்கு கீழ் சென்ற பின்பும் வாகனத்தை உபயோகப்படுத்த முயற்சி செய்வது வேண்டாம். 20% வந்தவுடனே சார்ஜ் ஏற்றிக்கொள்ள வேண்டும். அதாவது 20%-80% சார்ஜ்க்கு எப்போதும் வைத்து கொள்ளது சிறந்தது. அதற்காக 79% வந்தால் கூட 1% சார்ஜ் ஏற்றி கொண்டு இருக்க வேண்டாம். ஏன் என்பதற்கான காரணத்தை அடுத்து காணலாம்...
அடிக்கடி சார்ஜ் வேண்டாம்
இந்த தவறு பெரும்பாலான இவி உரிமையாளர்கள் செய்யக்கூடியது. அடிக்கடி சார்ஜ் செய்வது பேட்டரிகளின் ஆயுட் காலத்தை குறைக்கும். லித்தியம்-இரும்பு பேட்டரிகளில் சார்ஜ் ஆனது பயன்படுத்தாவிடினும் சிறிது சிறிதாக குறைய துவங்கிவிடும். அதற்கெல்லாம் உடனே ரியாக்ட் செய்து தொடர்ந்து சார்ஜ் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் தேய்மானம் அடையும் சார்ஜின் சதவீதம் மேலும் அதிகரிக்கும்.

இதன் விளைவாக பேட்டரியின் திறன் குறைவது மட்டுமின்றி, தொடர்ந்து இவ்வாறு செய்தால் ஆயுட்காலமும் குறைந்துவிடும். ஆதலால் 20%-க்கு சார்ஜ் வந்துவிட்டது என சார்ஜ் செய்கிறீர்கள் எனில், அதனை 80% வரையில் சற்று அதிக நேரத்திற்கு பேட்டரியை சார்ஜ் செய்து கொள்வது நல்லது. பின்னர் முடிந்தவரையில், அதனை 20% வரை பயன்படுத்திவிட்டு பேட்டரியை சார்ஜ் செய்யவும்.
பயணத்திற்கு பின் உடனடி சார்ஜ் வேண்டாம்
தற்போதைய சூழலில் எலக்ட்ரிக் வாகனங்களில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வரும் லித்தியம்-இரும்பு பேட்டரிகளின் மற்றொரு குறை என்னவென்றால், இவை இயக்கத்தின்போது வெப்பத்தை உமிழக்கூடியவை. அந்த நேரத்தில் நீங்கள் பேட்டரியை சார்ஜ் செய்வது கூடாது. பயணத்திற்கு பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் ஆவது இடைவெளி விட்டு பின்னர் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








