இந்தியாவின் சாதனை பெண்மணிக்கு நள்ளிரவில் நடந்த விபரீதம்... ஆட்டோ டிரைவரின் செயலால் கடும் அதிர்ச்சி
ஆட்டோ டிரைவர் ஒருவரின் மோசமான நடத்தையால், சாதனை பெண்மணிக்கு நள்ளிரவில் ஏற்பட்ட விபரீத சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்தவர் சுனிதா சௌத்ரி. இவர் தலைநகர் டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பகுதியில் தற்போது வசித்து வருகிறார். டெல்லியின் முதல் பெண் ஆட்டோ டிரைவர் என்ற பெருமைக்கு சுனிதா சௌத்ரிதான் சொந்தக்காரர்.

இந்த சூழலில் சுனிதா சௌத்ரி சமீபத்தில் தனது சொந்த ஊரான மீரட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் கடந்த 4ம் தேதி இரவு (செவ்வாய் கிழமை) மீண்டும் டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சரியாக இரவு 10 மணியளவில் அவர் பஸ்ஸில் வந்து இறங்கினார்.

பின்னர் ஆனந்த் விஹார் பகுதிக்கு செல்வதற்காக ஆட்டோ ரிக்ஸாவிற்கு காத்து கொண்டிருந்தார். மோகன் நகர் - வசுந்தரா சாலையில் உள்ள பொது கழிப்பிடத்திற்கு அருகே அவர் நின்று கொண்டிருந்தபோது, அங்கு ஆட்டோ ரிக்ஸா ஒன்று வந்தது.

அந்த ஆட்டோ ரிக்ஸாவின் டிரைவர், எங்கே செல்ல வேண்டும்? என சுனிதா சௌத்ரியிடம் கேட்டார். ஆனந்த் விஹார் செல்ல வேண்டும் என பதில் அளித்த சுனிதா சௌத்ரி பின்னர் ஆட்டோ ரிக்ஸாவில் ஏறி கொண்டார். அதில், டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர்.

முன்னதாக சுனிதா சௌத்ரியின் லக்கேஜை வாங்கிய ஆட்டோ ரிக்ஸாவின் டிரைவர், அதனை பயணிகள் இருக்கைக்கு பின்னால் வைத்து விட்டார். இந்த சூழலில் நடுவழியில் ஆட்டோ ரிக்ஸாவை அதன் டிரைவர் திடீரென நிறுத்தினார். இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அனைத்து பயணிகளும் ஆட்டோ ரிக்ஸாவில் இருந்து இறங்கி இன்ஜினை சரி பார்க்க சென்றனர். சிறிது நேரத்தில் சுனிதா சௌத்ரியின் லக்கேஜை மீண்டும் அவரிடமே கொடுத்து விட்டு, மற்ற பயணிகளுடன் ஆட்டோ டிரைவர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதன்பின் சுனிதா சௌத்ரி தனது பையை பரிசோதித்து பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மாயமாகியிருந்தது. இதனால் ஆட்டோ ரிக்ஸாவின் டிரைவர்தான் தனது பணத்தை திருடியிருக்க வேண்டும் என சுனிதா சௌத்ரி சந்தேகம் அடைந்தார்.

அப்போது அவ்வழியில் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் டிரைவரிடம் நடந்ததை எல்லாம் தெரிவித்த சுனிதா சௌத்ரி, அந்த ஆட்டோ ரிக்ஸாவை பின் தொடர்ந்து செல்லுமாறு கூறினார். ஆனால் 15 நிமிடங்கள் சேஸ் செய்து சென்றும் ஆட்டோ ரிக்ஸாவை பிடிக்க முடியவில்லை.

இதன்பின் நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்ற சுனிதா சௌத்ரி, இது குறித்து புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியின் முதல் பெண் ஆட்டோ டிரைவரிடம் மற்றொரு ஆட்டோ டிரைவரே பணத்தை திருடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய சூழலில் கொள்ளையர்கள் எந்த ரூபத்தில் வருவார்கள்? என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. வீட்டை விட்டு சாலைக்கு வந்து விட்டால், நமது உடைமைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு நம்முடையதுதான்.

இல்லாவிட்டால் நமது உடைமைகளை கொள்ளையர்களிடம் பறிகொடுக்கும் சூழல் உருவாகும். இன்றைய சூழலில் கார்களை குறி வைத்து, அதில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்கும் மர்ம கும்பலின் அட்டகாசம் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே கார்களில் வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பொருட்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

கார்களில் இருந்து எப்போது கீழே இறங்கினாலும், டோர்களை அடைத்து விட்டு, சாவியை கையில் எடுத்து கொள்ளுங்கள். இது ஒரு ''ஆட்டோமெட்டிக் ப்ராஸஸ்'' ஆக இருக்க வேண்டும். இதனை செய்வதற்கு ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

ஆனால் இளம் வயதில் உள்ளவர்கள் இதனை செய்ய அடிக்க மறந்து விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் கார் மற்றும் காரில் உள்ள பொருட்களை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க, நீங்கள் காரை விட்டு இறங்கும்போது, டோர்களை அடைப்பதே மிகவும் முக்கியமான விஷயம்.

வெறும் 30 வினாடிகளுக்குள் மீண்டும் நீங்கள் திரும்பி விடுவீர்கள் என்றாலும் கூட, டோர்களை அடைத்து விட்டு வெளியேறுங்கள். அத்துடன் பாதுகாப்பான இடங்களில் காரை பார்க்கிங் செய்வதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

இரவு நேரம் என்றால், கும்மிருட்டான இடங்களை தவிர்த்து விட்டு, சற்று வெளிச்சமான இடங்களை தேர்வு செய்யுங்கள். அத்துடன் உங்கள் காரை மற்றவர்கள் பார்க்க கூடிய வகையிலான இடங்களை பார்க்கிங் செய்ய தேர்ந்து எடுங்கள்.

தங்களின் ஒவ்வொரு செயல்பாட்டையும் மற்றவர்கள் பார்த்து கொண்டிருப்பதை கொள்ளையர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே மற்றவர்கள் பார்வையில் படும்படியான இடத்தில் உங்கள் காரை பார்க்கிங் செய்தால், இந்த பிரச்னையில் இருந்து தப்பலாம்.

பர்ஸ், செல்போன் மற்றும் நகைகள் போன்ற உங்களின் விலை உயர்ந்த பொருட்களை காருக்குள் வைத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவற்றை கொள்ளையர்களின் கண்களுக்கு சிக்காத இடங்களில் வைத்து விடுங்கள். இதற்கு க்ளவ் பாக்ஸ் அல்லது பூட் மிகச்சரியான இடம்.

நீங்கள் காரை விட்டு இறங்கி செல்வதையும், மீண்டும் காருக்கு திரும்புவதையும் ஒருவேளை திருடர்கள் கவனித்து கொண்டிருக்க கூடும். நீங்கள் சமீபத்தில் வாங்கிய பொருட்களை பறித்து செல்வதற்காக திருடர்கள் உங்களை பின் தொடரவும் செய்யலாம். எனவே எந்நேரமும் விழிப்புடன் இருங்கள்.

இதுதவிர காரில் பயணம் செய்பவர்களிடம் இருந்து மிகவும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்க இன்னும் சில தந்திரமான நடவடிக்கைகளையும் கொள்ளையர்கள் மேற்கொள்கின்றனர். இதுகுறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

கண்ணாடி அல்லது ஏதேனும் ஒரு கூர்மையான பொருளை நடுவழியில் போட்டு, உங்கள் கார் டயர்களை பஞ்சராக்கும் சம்பவங்கள் இதற்கு ஓர் உதாரணம். உடனே என்ன ஆனது? என்பதை பார்க்க நீங்கள் பதறியடித்து கொண்டு கீழே இறங்கி செல்வீர்கள்.

அப்போது ஒருவர் உங்கள் உதவிக்கு வரலாம். இந்த நாடகத்தை நீங்கள் புரிந்து கொள்வதற்குள், அந்த கும்பலை சேர்ந்த மற்றொருவர் உங்கள் காருக்கு உள்ளே இருந்து விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்று விடலாம்.

இதுதவிர வேண்டுமென்றே உங்கள் காரின் மீது வேறொரு வாகனத்தை மோதி விட்டு, அதற்கு நீங்கள்தான் காரணம் என உங்கள் கவனத்தை திசை திருப்பும் நாடகங்களும் அரங்கேறலாம். இதன் முடிவில், உங்கள் காரின் உள்ளே இருந்த விலை உயர்ந்த பொருள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும். எனவே சாலைக்கு வந்து விட்டால், எந்நேரமும் கூடுதல் கவனத்துடன் இருங்கள்.


Click it and Unblock the Notifications








