நெல்லை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் வருமா? வெளியான புதிய தகவலால் பரபரப்பு!
திருநெல்வேலியில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் தற்போது அதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இருந்தாலும் இந்த ரயிலை கொண்டு வருவதில் இருக்கும் முக்கியமான சிக்கல் குறித்தும் நமக்கு தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் என்பது மிக முக்கியமான ரயிலாக இருக்கிறது. முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் வரிசையாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வேகமாக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க முடிகிறது. கிட்டத்தட்ட விமானத்தின் சேவை போல இந்த ரயில் சேவை இருக்கிறது.

வந்தே பாரத் ரயில் என்பது மொத்தம் 16 பெட்டிகள் மற்றும் 8 பெட்டிகள் என இரண்டு வகையிலாக இருக்கிறது. இந்த ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கின்றன. சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் 110 கிலோமீட்டர் வேகத்திலும் சதாப்தி போன்ற ரயில்கள் 150 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும் பயணிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. வந்தே வாரத்தில் அதையும் தாண்டி 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரையிலும் ,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவை வரையிலும், விஜயவாடாவில் இருந்து சென்னை வரையிலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூரூ வழியாக மைசூர் வரைக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திற்கு மற்றொரு வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்த பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு எவ்வளவு மக்கள் செல்கிறார்களோ அதே அளவுக்கு பெங்களூரூ நகருக்கும் அதிகமான மக்கள் செல்கிறார்கள். பெங்களூரூ நகர் தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ள நிலையில் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் பலர் பெங்களூருக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். தற்போது தென் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு போதுமான ரயில் வசதி இல்லை.
நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலை தான் அதிகம் நம்பி வருகின்றனர். அந்த வகையிலும் சுமார் 14 மணி நேரத்திற்கு மேலாக பயண நேரத்தை எடுத்துக் கொள்கிறது. நாகர்கோவிலில் இருந்து இரவு 7:15 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் மறுநாள் காலை 9:10 மணிக்கு தான் பெங்களூர் எஸ்எம்விடி ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பயணிகள் பலர் இந்த ரயிலை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர்.

இதனால் அதிக விலை கொடுத்து தனியார் பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் எப்படி திருநெல்வேலி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயங்குகிறதோ அதேபோல திருநெல்வேலியில் இருந்து பெங்களூரு விற்கும் வந்தே பாரத் ரயிலை கொண்டு வர வேண்டும் என மக்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் பலர் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ரயில்வே நிர்வாகமும் முதலில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு ரயிலை இயக்கலாம் என ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது நெல்லையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்கலாமா என யோசனை செய்து வருகின்றனர். நெல்லையிலிருந்து பெங்களூர் என்பது சுமார் 589 கிலோமீட்டர் தூரமாக இருக்கிறது.

இந்த ரூட்டில் வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கு இருக்கும் ஒரே சிக்கல் திண்டுக்கல் இருந்து சேலம் வரை உள்ள ரயில் பாதை ஒற்றை ரயில் பாதையாக இருக்கிறது. இந்த ஒற்றைப் பாதையில் வந்தே பாரத் போன்ற ரயிலை இயக்க ரயில்வே அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.
திண்டுக்கல் முதல் சேலம் வரை உள்ள ஒற்றை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்றுவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இதற்கு அதிக காலம் பிடிக்கும். அதனால் இந்த பகுதியில் வந்தே பாரத் ரயிலை இயக்கலாமா வேண்டாமா என அதிகாரிகள் தற்போது தீவிர ஆலோசனையில் உள்ளனர்.
திண்டுக்கல் முதல் சேலம் வரை சுமார் 159 கிலோமீட்டர் தூரத்திற்கு தற்போது ஒற்றை ரயில் பாதை இருப்பது தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது என கூறப்படுகிறது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் போக தேஜஸ் ரயிலும் இயங்குகிறது ஆனால் பெங்களூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போதுமான ரயில் வசதி இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒற்றை ரயில் பாதை மட்டும் இருக்கும் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்குவது என்பது சந்தேகமான விஷயம் தான். அதனால் தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் என்பது அறிமுகப்படுத்துவது சந்தேகமான விஷயம் தான். ஆனால் கோயம்புத்தூரில் இருந்து வந்தே வாரத்தில் பெங்களூருக்கு இயக்க திட்டமிடலாம்.


Click it and Unblock the Notifications









