ஒரு கிமீக்கு ரூ4 மிச்சம் பண்ணலாம்! தமிழக அரசு பஸ்களில் வரப்போகும் புதிய மாற்றம்!
தமிழக சட்டமன்றத்தில் தமிழக பட்ஜெட் 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி மிக முக்கியமாக தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பஸ்களை எல்லாம் டீசல் பஸ்களில் இருந்து சிஎன்ஜி பஸ்களாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தற்போது அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இயங்கும் அரசு பஸ்கள் எல்லாம் டீசல் எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டவையாக இருக்கிறது. தற்போது சுற்றுசூழல் மாசு காரணமாக டீசல், பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக பல்வேறு விதமான ஆப்ஷகள் வருகிறது. அதில் சிஎன்ஜியும் ஒன்று. இயற்கையாக கிடைக்கும் எரிவாயுவை கொண்டு இன்ஜின்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் சிஎன்ஜி பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. சிஎன்ஜி எரிபொருளை பயன்படுத்துவதால் மாசு அளவு கணிசமாக குறைகிறது. அதே நேரம் மைலேஜூம் அதிகமாக கிடைக்கிறது. இதனால் சாதாரண வாகனத்தை சிஎன்ஜி வாகனமாக மாற்றினால் நிச்சயம் அதிக லாபம் கிடைக்கும் என கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் அரசு பஸ்களை எல்லாம் சிஎன்ஜி பஸ்களாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் தமிழக பட்ஜெட்டில் டீசல் பஸ்களை எல்லாம் சிஎன்ஜி பஸ்களாக மாற்ற ரூ70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு தற்போது இயங்கி வரும் டீசல் பஸ்களிலேயே சிஎன்ஜி கிட்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படியாக சிஎன்ஜி பஸ்களாக மாற்றுவது தமிழக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் சோதனை முயற்சியாக இப்படியாக சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டுள்ளது.

ஒரு டீசல் பஸ்ஸை சிஎன்ஜி பஸ்ஸாக மாற்ற ரூ5.5 லட்சம் முதல் ரூ6 லட்சம் வரை செலவாகும். அப்படியாக கணக்கிட்டு பார்க்கும் போது சுமார் 1000த்திற்கும் அதிமான பஸ்களை சிஎன்ஜி பஸ்களாக மாற்ற முடியும் என கணக்கிடப்படுகிறது. எந்தெந்த பஸ்கள் எல்லாம் சிஎன்ஜி கிட் பொருத்தப்படும் என்ற தகவலை இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை. இனி அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இப்படியாக சிஎன்ஜி கிட் பொருத்துவது மூலம் பஸ்களின் மைலேஜ் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. தற்போது உள்ள டீசல் பஸ்கள் எல்லாம் லிட்டருக்கு 5.2 முதல் 5.96 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டால் அதே பஸ் லிட்டருக்கு 6 முதல் 6.98 கி.மீ வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் டீசல் விலையை விட சிஎன்ஜி விலையும் குறைவு ஒரு கிலோ சிஎன்ஜி ரூ75 முதல் ரூ79 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

சராசரியாக ஒரு பஸ் மாதத்திற்கு 2000 முதல் 7000 கி.மீ வரை பயணம் செய்கிறது. அதற்காக அதிகமாக டீசல் செலவாகிறது. இந்த செலவுகளை கட்டுப்படுத்தவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதே நேரத்தில் சிஎன்ஜிகிட் பாதுகாப்பாக இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுவரை நடந்த சோதனையில் டீசலை விட சிஎன்ஜி பஸ்கள் அதிக பணத்தை மிச்சம் செய்துள்ளதால் ரூ70 கோடி செலவு செய்து டீசல் பஸ்களை எல்லாம் பெட்ரோல் பஸ்களாக மாற்றுவது லாபமாக இருக்கும் ஒரு கி.மீக்கு ரூ4 வரை மிச்சம் செய்ய முடியும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்த திட்டம் நிச்சயம் வரவேற்க்க தக்கது தான்.


Click it and Unblock the Notifications









