"ஆர்டிஓ அலுவலகங்களுக்கு இனி நேரில் வர வேண்டாம்"... தரமான சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
தமிழகத்தில் குறிப்பிட்ட சில ஆர்டிஓ சேவைகளை ஆன்லைனிலேயே பெறும் வசதியை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதுகுறித்த கூடுதல் விரிவான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மிகவும் பிசியாக இயங்கும் அரசு அலுவலகங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் (ஆர்டிஓவும்) ஒன்று. எப்போதும் இங்கு மக்கள் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. இதனைக் குறைக்கும் பொருட்டு மிக சிறப்பான நடவடிக்கையை தமிழக அரசு தற்போது மேற்கொண்டிருக்கின்றது.

ஆர்டிஓ-வின் குறிப்பிட்ட சில சேவைகளை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறும் சிறப்பு திட்டத்தை தமிழக அரசு தற்போது அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது, பொதுமக்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே ஆன்லைன் வாயிலாக சேவைகளைப் பெறும் வசதியை தொடங்கி வைத்திருக்கின்றது.

இதனை தமிழக முதலைச்சர் முக ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 12) தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "மக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வராமலேயே பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெற்றல், ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் மற்றும் டிரைவிங் லைசென்ஸில் இருக்கும் முகவரியை மாற்றுதல் உள்ளிட்ட சேவைகளை ஆன்லைன் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்" என தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு சேவையை தலைமை செயலகத்தின் உள் போக்குவரத்துத்துறை சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆன்லைன் சேவையை பெற ஆதார் அட்டை கட்டாயம் ஆகும். ஆதார் எண்ணை உள்ளிட்டு லாக்-இன் செய்த பின்னரே ஆர்டிஓ-வின் இந்த சேவையைப் பெறும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

ஆகையால், ஆதார்டு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஆர்டிஓ செல்லாமலேயே ஆன்லைன் வாயிலாக தொடங்கப்பட்டிருக்கும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக வாசிகள் நேரில் சென்று அலையும் அவல நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுடனான தேவையில்லாத நேரடி தொடர்பை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி, எளிமையாக ஆர்டிஓ சேவையை பெறுதல், வெளிப்படைத் தன்மை மற்றும் விரைவாக பயனடைதல் உள்ளிட்டவற்றை இந்த ஆன்லைன் சேவையால் தமிழக வாசிகளால் பெற்றுக் கொள்ள முடியும்.

பாரிவாஹன் (www.parivahan.gov.in) என்ற தளத்திலேயே இதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்தில் அரசின் பல்வேறு சேவைகள் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டன.

ஏன், தனியார் நிறுவனங்கள் பல தங்களின் ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் ஆன்லைன் ஆர்டிஓ சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவை தற்போது தமிழகத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மக்களுடனான நேரடி தொடர்பை தவிர்த்து, வைரஸ் பரவலைத் தவிர்க்கும் விதமாக ஆன்லைன் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும்படியும், மக்கள் எளிதில் பயனடையும் ஆன்லைன் சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








