அட்டை வாயிலாக பேருந்துக்கான கட்டணம் செலுத்தும் திட்டம்... விரைவில் சென்னை, கோவை, மதுரையில் அறிமுகமாக போகுது!
தமிழகத்தின் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் அட்டை வாயிலாக பேருந்துக்கான கட்டணத்தைச் செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய மொபிலிட்டி கார்டுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஏடிஎம் கார்டைப் போன்ற ஓர் அட்டையை தமிழக அரசு அதன் பொது போக்குவரத்துத் துறைக்காக விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார்டானது நம்முடைய பயணங்களுக்கான கட்டணத்தை செலுத்த தானாக செலுத்த உதவும். உதாரணமாக, சென்னை மெட்ரோ ரயில்களில் பயன்படுத்தும் அட்டையைப் போல் தமிழக அரசு பேருந்துகளுக்கான பிரத்யேக பயண அட்டையை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

மத்திய அரசாங்கம் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (National Common Mobility Card) எனும் திட்டத்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. ஒரே தேசம், ஒரே கார்டு (One Nation, One Card) எனும் பெயரில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது ஒரே ஒரு அட்டையின் வாயிலாக மெட்ரோ, பேருந்து உள்ளிட்டவற்றிற்கான கட்டணத்தைச் செலுத்த முடியும்.

பொதுமக்கள் ஒவ்வொரு போக்குவரத்திற்கும் ஒரு அட்டை என பலவற்றை பயன்படுத்தி சிரமப்படுவதைத் தவிர்க்கும் விதமாக மத்திய அரசாங்கம் ஒரே தேசம், ஒரே பயண அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தையே தமிழக அரசு சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் செயல்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது மூன்று நகரங்களில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் தானியங்கி கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்துவதற்கான டெண்டர்கள் அந்தந்த போக்குவரத்துக் கழகத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக தேவைப்படுபவர்கள் மொபிலிட்டி கார்டை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த அட்டையைக் கொண்டு கேஷ்லெஸ் (ரொக்கமில்லாமல்) முறையில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணித்துக் கொள்ள முடியும். அதாவது, கார்டு வாயிலாக தங்களின் பயணத்திற்கான கட்டணத்தைச் செலுத்திக் கொள்ள முடியும். முன்னதாக குறிப்பிட்டதைப் போல் தற்போது மெட்ரோ ரயில்களில் இருக்கும் அட்டை திட்டத்தைப் போல் இது செயல்படும்.

அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் உள்ள அரசு நகரப் பேருந்துகளில் சுமார் 85 கோடி செலவில் தானியங்கி கட்டண முறையை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே தேசிய காமன் மொபிலிட்டி கார்டை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் தமிழக அரசு தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் முதல் கட்டமாக 20 ஆயிரம் மின்னணு டிக்கெட் இயந்திரங்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இத்துடன், பயணிகள் கார்டை ரீ-சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு மற்றும் அட்டை விநியோகத்திற்கான பணிகளையும் அது தீவிரப்படுத்தியிருக்கின்றது. சில்லரை இல்லை, கையில் பணம் இல்லை என்பதுபோன்ற நேரங்களை சமாளிக்க இந்த கார்டு உதவியாக இருக்கும்.

நடத்துனர்களிடம் இருக்கும் மெஷினில் கார்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாக மொபிலிட்டி அட்டை பயன்பாட்டாளர்களால் தங்களுக்கான பயண சீட்டை பெற்றுக் கொள்ள முடியும். இதேபோல், மெட்ரோ ரயில்களிலும் அவர்களால் பயணித்துக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி, க்யூஆர் ரக டிக்கெட்டுகளை நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சிகளும் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கான செயலி வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேலையில், இந்த திட்டத்தில் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மட்டுமின்றி உள்ளூர் ரயில்களை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், ஒற்றை கார்டு வாயிலாக சென்னை, கோவை மற்றும் மதுரை வாசிகள் அனைத்து விதமான பொது போக்குவரத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








