மூக்கின் மேல் விரல் வைக்கும் மற்ற மாநிலங்கள்... தமிழ்நாடும், கேரளாவும் எப்பவும் வேற லெவல்தான்! மாஸ் காட்றாங்க!
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் புதிய திட்டம் ஒன்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் செல்போன் செயலி (ஆப் - App) அடிப்படையில் இயங்கும், கால் டாக்ஸி நிறுவனங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த துறையை பொறுத்தவரையில் ஓலா மற்றும் உபேர் ஆகிய 2 நிறுவனங்கள்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் இந்த நிறுவனங்கள் பயணிகளிடம் அதிக கட்டணத்தை வசூல் செய்வதாக புகார்கள் உள்ளன.

அத்துடன் ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் சுரண்டப்படுவதாகவும் மிக நீண்ட காலமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு கால் டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் பூபதி கூறுகையில், ''ஆப் அடிப்படையில் செயல்படும் டாக்ஸி நிறுவனங்கள் டிரைவர்களை சுரண்டுவதை தடுப்பதற்கு தற்போதைய நிலையில் சட்டங்கள் எதுவும் இல்லை.

ஒரு நாளை அவர்கள் எங்களிடம் 12 முதல் 14 மணி நேரம் வரை வேலை வாங்குகின்றனர். ஆனால் எங்களால் 1,000 ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் ஈட்ட முடிகிறது'' என்றார். ஆனால் இதுபோன்ற பிரச்னைகள் அனைத்திற்கும் தமிழக அரசு விரைவில் முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாக்ஸி டிரைவர்களுக்கு மட்டுமல்லாது, பொதுமக்களுக்கும் நல்ல செய்திதான்.

செல்போன் ஆப் ஒன்றை அறிமுகம் செய்வது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஆலோசகர் ஒருவரை தமிழக அரசு விரைவில் நியமனம் செய்யவுள்ளது. இந்த ஆப் மூலமாக பொதுமக்கள் கால் டாக்ஸிகளை முன்பதிவு செய்து கொண்டு பயணிக்கலாம். ஆட்டோக்களிலும் கூட இந்த ஆப் மூலம் பொதுமக்கள் பயணிக்க முடியும்.

அதாவது ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றனவோ, அதேபாணியில் தமிழக அரசின் செல்போன் ஆப்பும் செயல்படும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் (Information Technology Minister) மனோ தங்கராஜ் (Mano Thangaraj) தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பிற்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் டிரைவர்கள் பலரும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். ஆனால் இந்த திட்டம் தற்போதைய நிலையில் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. எனினும் கூடிய விரைவில் இந்த திட்டத்தை தமிழக அரசு முறைப்படி செயல்பாட்டிற்கு கொண்டு வரும் என நாம் எதிர்பார்க்கலாம். தமிழக அரசின் இந்த முயற்சிகளுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரையில் நமது அண்டை மாநிலமான கேரளா ஒரு படி மேலே போய் விட்டது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், கேரள அரசின் முயற்சிகளை பார்த்த பிறகுதான் தமிழக அரசும் தற்போது இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆம், கேரள மாநிலத்தில் செல்போன் ஆப் அடிப்படையில் செயல்படும் கால் டாக்ஸி சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு 'கேரள சவாரி' (Kerala Savari) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரும் ஆகஸ்ட் 17ம் தேதி கேரள அரசு தொடங்கி வைக்கவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களின் பயண செலவுகள் குறையும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கால் டாக்ஸி டிரைவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

மேலும் அரசுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் வருமானம் கிடைக்கும். கேரள அரசின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசும் இந்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 2 மாநிலங்களும் இந்தியாவிற்கே முன்னோடியான பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன.

இந்த வரிசையில் செல்போன் ஆப் அடிப்படையில் செயல்படும் கால் டாக்ஸி திட்டமும் இந்தியாவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேரளாவை போன்று, தமிழக அரசு தாமதம் செய்யாமல் கால் டாக்ஸி செல்போன் ஆப் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், பொதுமக்கள் மற்றும் டிரைவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையே செல்போன் ஆப் அடிப்படையில் செயல்படும் கால் டாக்ஸி சேவை மட்டுமல்லாது, தமிழகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு தற்போது தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. எனவே வரும் காலங்களில் தமிழக சாலைகளில் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்களை நாம் காண முடியும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications