இனி 'டி' போர்டில் ரோல்ஸ் ராய்ஸ் காரைகூட தமிழக சாலையில் பார்க்கலாம்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு!
தமிழக அரசு சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வாடகை வாகன சேவையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கின்றது. ஆகையால், வாடகை வாகன சேவையில் இனி விலை உயர்ந்த கார்களும் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் 'டி' போர்டு, அதாவது, மஞ்சள் நிற பதிவெண் பிளேட்டுடன் விலை உயர்ந்த வாகனங்கள் இயங்குவதைப் பார்த்திருப்போம். இதேபோல், தமிழகத்தில் விலை உயர்ந்த சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை ஈடுபடுத்த அனுமதி வழங்க வேண்டும் என்பது வாடகை வாகன சேவை நிறுவனங்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருக்கின்றது.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இந்த கோரிக்கைக்கே தமிழக அரசு தற்போது செவி சாய்த்து இருக்கின்றது. அதாவது, அனைத்து வகை வாகனங்களையும் பொது போக்குவரத்து சேவையான வாடகை வாகன சேவையில் பயன்படுத்திக் கொள்ள அது அனுமதி வழங்கி இருக்கின்றது. ஆகையால், மற்ற மாநிலங்களைப் போல இனி தமிழகத்திலும் மஞ்சள் நிற பதிவெண் பிளேட் கொண்ட உயர் வகை வாகனங்கள் வலம் வருவதை நம்மால் காண முடியும்.
இதுவரை குறிப்பிட்ட சில வாகன மாடல்களின் குறிப்பிட்ட சில தேர்வுகள் மட்டுமே வாடகை வாகன சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்கிற விதி நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. உதாரணமாக, மாருதி சுஸுகி நிறுவனம், அதன் டிசையர் கார் மாடலில் டூர் எனும் தேர்வை பிரத்யேகமாக கால் டாக்சி மற்றும் வாடகை வாகன சேவைக்கு என்றே உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இத்தகைய வாகனங்களை மட்டுமே தமிழகத்தில் டி போர்டில் பதிவு செய்து கொள்ள முடியும். வேறு வழக்கமான கார் மாடல்களை டி போர்டில் பதிவு செய்ய முடியாது. உதாரணமாக கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ போன்ற கார் மாடல்களைக் கூறலாம்.
ஆனால், இப்போது வெளி வந்திருக்கும் அறிவிப்பால், ரோல்ஸ் ராய்ஸ், ஜாகுவார், பிஎம்டபிள்யூ, பென்ஸ் மற்றும் ஆடி உள்ளிட்ட நிறுவனங்களின் சொகுசு கார்களைகூட 'டி' போர்டில் பதிவு செய்து வாடகை சேவை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். இதுவே வாடகை வாகன ஓட்டுநர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்த கோரிக்கையை ஏற்கும் விதமாகவும், தமிழக சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கிலும்தான் தற்போது அரசு அதிரடியாக அனைத்து வாகனங்களையும் வாடகை வாகனங்களாக பதிவு செய்துக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கின்றது. ஆகையால், விலை உயரிய கார்கள் மட்டுமின்றி மஹிந்திரா தார், ஸ்கார்பியோ, டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற கார்களும் வாடகை வாகன சேவையில் பயன்பாட்டிற்கு வரும் சூழல் உருவாகி இருக்கின்றது.
இன்னும் துள்ளியமாக கூற வேண்டும் என்றால் முன்பு தனி நபர் பயன்பாட்டிற்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்த வாகனங்களைக் கூட இனி வரும் நாட்களில் மஞ்சள் நிற பதிவெண் கொண்ட வாகனங்களாக பதிவு செய்துக் கொள்ள முடியும். கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களில் ஏற்கனவே இந்த விதி நடைமுறையில் இருக்கின்றது.
ஆகையால், அந்த மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பும் காரை அவர்களால் வாடகைக்கு எடுத்துச் செல்ல முடியும். உதாரணமாக, ஓர் நபர் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஓர் பட்ஜெட் விலை எம்பிவி-யை தேடுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள், அவரால் டொயோட்டா இன்னோவா மட்டுமல்ல ரெனால்ட் ட்ரைபர் போன்ற காரையும் எடுத்துச் செல்ல முடியும்.
இன்னோவாவை விட பலமடங்கு குறைவான விலைக் கொண்டதே ட்ரைபர் ஆகும். ஆகையால், இன்னோவாவைக் காட்டிலும் குறைவான ஒரு நாள் வாடகையில் அந்த காரை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், தமிழகத்தில் எர்டிகா, இன்னோவா மற்றும் மஹிந்திரா ஜைலோ போன்ற கணிசமான கார் மாடல்களை மட்டுமே வாடகை எடுக்க முடியும்.
இந்த நிலையையே தன்னுடைய அதரிட அறிவிப்பால் தமிழக அரசு மாற்றி இருக்கின்றது. இனி வரும் நாட்களில் தமிழகத்திலும் ட்ரைபர் போன்ற விலை குறைவான வாகனங்களை வாடகை சேவையின் வாயிலாக அனுபவித்துக் கொள்ள முடியும். இதற்கான அறிவிப்பையே தமிழக போக்குவரத்து துறை தற்போது வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட நாட்கள் நிறைவேறி இருப்பதால் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த வாடகை வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். இதன் வாயிலாக வாடகை வாகன ஓட்டுநர்களின் வருவாய் அதிகரிப்பதோடு, தமிழக சுற்றுலா பிரிவும் கணிசமாக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, வாடகை வாகன சேவையில் இனி பலதரப்பட்ட கார் மாடல்கள் வாடகைக்குக் கிடைக்க இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








