ஆம்னி பஸ் ஓனர்கள் எல்லாரும் கதற போறாங்க.. ஊருக்கு போற பிளான் இல்லாதவங்களும் டிக்கெட் எடுக்க ரெடி ஆகிட்டாங்க!
தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி ஏற்கனவே பலர் அரசுப் போக்குவரத்தை நாட தொடங்கி இருக்கின்றனர். இதற்கேற்ப பயணிகளை தங்கள் பக்கம் கவரும் நோக்கில் அரசு போக்குவரத்து கழகமும் அதி-நவீன பேருந்துகளை தங்களின் சேவையில் இணைத்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வாடிக்கையாளர்களின் கவனத்தை மேலும் கவரும் விதமாக தற்போது குலுக்கல் பரிசு திட்டத்தையும் அறிவித்திருக்கின்றனர். ஏற்கனவே பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, அக்டோபர் மாதத்திற்கான வெற்றியாளர்களின் பட்டியலையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று நபர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ரொக்கமும், பத்து பேருக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது. இவர்கள் அனைவர்களும் செல்போன் செயலி மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின் வாயிலாக டிக்கெட்டைப் புக் செய்து பயணம் மேற்கொண்டவர்கள் ஆவார்கள்.

இந்த நிலையிலேயே பரிசுத் தொகையைத் தொடர்ந்து தற்போது சிறப்பு பரிசுகளை வழங்க இருப்பதாக டிஎன்எஸ்டிசி அறிவித்து இருக்கின்றது. இது அரசு பேருந்துகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. நாள்தோறும் அரசின் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் வாயிலாக சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர்.
இந்த எண்ணிக்கை ஆம்னி பஸ்களுக்கே சவால்விடக் கூடிய எண்ணிக்கையாகும். இந்த நிலையிலேயே இப்போது பயணித்துக் கொண்டிருப்போரின் எண்ணிக்கையை இன்னும் இரட்டிப்பாக்கும் நோக்கில் அரசு போக்குவரத்துக் கழகம் புதிய பரிசு திட்டங்களை அறிவித்திருக்கின்றது. புதிய திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு முதல் பரிசாக பைக்கும், இரண்டாவது பரிசாக டிவி மற்றும் 3ஆவது பரிசாக குளிர்சாதனப் பெட்டி போன்ற விலை உயர்ந்த பொருட்களும் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.
முதன் முதலில் 2024 ஜனவரி மாதத்திலேயே இந்த குலுக்கல் திட்டத்தை டிஎன்எஸ்டிசி அறிவித்திருந்தது. மேலும், 2024 ஜனவரி தொடங்கி 2024 மே வரை ஒவ்வொரு மாதமும் மூன்று வெற்றியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 10 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
இதையே 2024 ஜூன் மாதத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் அப்கிரேட் செய்தது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், பத்து பேருக்கு ரூபாய் 2 ஆயிரம் என மொத்தம் 13 பேருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் வரை கடைபிடிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த நிலையிலேயே தற்போது மேலும் இந்த திட்டத்தை டிஎன்எஸ்டிசி மெருகேற்றி அனைவரையும் கவர்ந்திருக்கின்றது. குறிப்பாக, வெற்றியாளர்களுக்கு பைக் பரிசாக வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பது அசத்தலோ அசத்தலாக உள்ளது. இந்த குலுக்கல் திட்டத்தில் நீங்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்றால் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து
கழகங்களின் பேருந்துகளில் முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வேண்டும். மேலும், 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரையிலான தேதியில் டிஎன்எஸ்டிசி மற்றும் செயலி வாயிலாக டிக்கெட் முன் பதிவு செய்பவர்களே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.
மேலும், வெற்றியாளர்களின் பட்டியல் பொங்கல் பண்டிகைக்கு பின்னரே வெளியிடப்பட இருக்கின்றது. எத்தனை பேருக்கு பைக், எத்தனை பேருக்கு டிவி மற்றும் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும் என்கிற விபரம் தெரியவில்லை. இதேபோல், என்ன மாடல் பைக், டிவி மற்றும் ஃப்ரிட்ஜ் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பது பற்றியும் தெரியவில்லை.
அதேவேளையில், தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த அறிவிப்பால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்ல இருப்போர் அரசு பேருந்தை அதிகம் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலை தனியார் ஆம்னி பேருந்து சேவைக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தக் கூடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆம்னி பேருந்துகளுக்கு சவால் விடும் வகையிலேயே அரசு போக்குவரத்தில் உள்ள பேருந்துகளின் தரம் உள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் பயணிகளின் தேவைகளைக் கருதி சகல வசதிகளைத் தாங்கிய பேருந்துகளையே அரசு அதன் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தி வருகின்றது. இந்த நிலையிலேயே பயணிகளையும் கவரும் பணியில் டிஎன்எஸ்டிசி களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








