டோல் கட்டணம் செலுத்த தேவையில்லையா? அமைச்சர் இவரே சொல்லிட்டாரா... இதை தெரிஞ்சிக்கிட்டு வாகனத்தை எடுங்க!!
எந்தவொரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் சாலை உள்கட்டமைப்பு வசதிகள் மிக அத்தியாவசியமான ஒன்றாகும். இதன் காரணமாகவே விரைவுச்சாலைகளை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதில் இந்திய அரசாங்கம் தீவிரமாக உள்ளது. இதன் வெளிப்பாடாக, இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலை டெல்லி மற்றும் மும்பைக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் 2வது நீளமான விரைவுச்சாலை பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மற்றும் குஜராத்தின் ஜாம்நகர் இடையே போடப்பட்டு வருகிறது. இவ்வாறு விரைவுச்சாலைகளை புதியது, புதியதாக அமைப்பதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இதற்கான நிதி மக்களின் வரி பணத்தில் இருந்து கொண்டுவரப்படுவது உங்களுக்கே தெரியும்.
சாலை அமைக்கப்பட்ட பின்பும், தொடர் பராமரிப்புக்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கச்சாவடி கட்டணம் என்கிற பெயரில் பணம் பெறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கியமான குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே வசூலிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டண முறையில் பலருக்கு பல்வேறு விதமான கருத்துகள் உள்ளன. அதாவது, சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுவதை நீக்க வேண்டும் எனவும் சிலர் குரல் கொடுப்பதை பார்க்க முடிகிறது.

ஆனால், சுங்கச்சாவடி கட்டணம் அரசாங்கத்திற்கு மிக முக்கியமான நிதியாக மத்திய அரசு கருதுகிறது. இதன் காரணமாகவே, இந்த கட்டணத்தை புதுமையான முறைகளில் வாகன ஓட்டிகளுக்கு அசவுகரியம் இல்லாமல் எவ்வாறு வசூலிக்கலாம் என்பதை மத்திய அரசு யோசித்து வருகிறது. இதன்படி, ஜிபிஎஸ் மூலமாக டோல் கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இதன் மூலமாக, டோல் பிளாசாக்களில் வாகன ஓட்டிகள் வரிசையில் காத்திருக்க வேண்டியது தவிர்க்கப்படும்.
இவ்வாறு சுங்கச்சாவடி கட்டணம் குறித்து பல்வேறு விதமான பேச்சுக்கள் எழுந்துவரும் சூழலில், சாலை தரமானதாக இல்லையென்றால், நெடுஞ்சாலை ஏஜென்சி நிறுவனங்கள் டோல் கட்டணத்தை வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்க கூடாது என மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கூறியதுபோல், செயற்கைக்கோளின் உதவியுடன் டோல் கட்டணத்தை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து பெற்று கொள்ளும் முறையை மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது. இதற்கான உலகளாவிய கூட்டத்தில் கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அமைச்சர், "நீங்கள் நல்ல தரமான சேவையை வழங்கவில்லை என்றால், நீங்கள் கட்டணம் வசூலிக்க கூடாது. வாகன ஓட்டிகளிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்கவும் (ஜிபிஎஸ் முறையில்), எங்கள் நலனை பாதுகாக்கவும் நாங்கள் முனைப்புடன் இருக்கிறோம். சிறந்த தரமான சாலையை வழங்கும் இடத்தில் மட்டுமே வாகன ஓட்டிகளின் கட்டணத்தை நீங்கள் வசூலிக்க வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் சுங்க வரியை வசூலித்தால், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்படும்" என்றார்.
விரைவுச்சாலையை பயன்படுத்தும் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட சக்கரங்களை கொண்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து வரியை வசூலிக்கும் பணியை அரசாங்கத்தின் மேற்பார்வையில் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தனியார் நிறுவனங்கள் இந்த பணியை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தனியார் நிறுவனங்களை தான் தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.
சுங்க சாவடிகளில் வாகன ஓட்டிகள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக ஏற்கனவே ஃபாஸ்ட்டேக் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து, விரைவில் GNSS-சார்ந்த எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் சிஸ்டத்தையும் பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, நாட்டின் 5 ஆயிரம் கிமீ தொலைவு நெடுஞ்சாலைகளில் ஜிபிஎஸ்-சார்ந்த டோல் கலெக்ஷன் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும்பாலும் இவ்வாறான புது முயற்சிகள் முதலில் தனியார் வாகனங்களில் கொண்டுவரப்பட்ட பின்னரே லாரி, பேருந்து உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்களில் கொண்டுவரப்படும். ஆனால், ஜிபிஎஸ் டோல் கலெக்ஷன்ஸ் முறையில் இது அப்படியே தலைக்கீழாக பின்பற்றப்பட உள்ளது. ஏனெனில், தனியார் கார் உரிமையாளர்கள் பற்றிய விபரங்களை பாதுகாப்பதை கருத்தில் கொண்டு இவ்வாறு மத்திய அரசு செயல்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








