ஒரு மாசத்துக்கு டோல்கேட்ல இத்தனை கோடி வசூலாகுதா? கேட்டாலே தலை சுத்துதே!
இந்தியாவில் சுங்கசாவடி மூலம் ஏகப்பட்ட பணம் மத்திய அரசால் வசூலிக்கப்படுகிறது மக்கள் மத்தியில் அதிக தொகையை சுங்க கட்டணமாக செலுத்த வருவதாக நீண்ட நாட்களாக ஆதங்கம் இருக்கிறது. இப்படியாக ஒரு மாதத்திற்கு சுங்க சாவடி மூலம் எவ்வளவு தொகை வசூலாகிறது தெரியுமா? தொகையை கேட்டால் நிச்சயம் உங்களுக்கு மயக்கமே வந்துவிடும். விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தற்போது ஃபாஸ்டேக் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவர் தனது ஃபாஸ்ட்டேக் கார்டில் பணத்தை ஏற்றி வைத்துக்கொண்டால் போதும் அவர் ஒவ்வொரு முறை சுங்கசாவடியை கடக்கும் போது அதற்கான கட்டணம் கழித்துக்கொள்ளப்படும். இப்படியாக கழிக்கப்படும் பணம் நேரடியாக அரசுக்க வருவாயாக செல்கிறது.

இந்நிலையில் தேசிய எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் அமைப்பு கடந்த காலாண்டிற்கான சுங்க கட்டண வசூல் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் மொத்தமாக ரூ20,681.87 கோடி கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது மட்டுமல்ல இந்த காலகட்டத்தில் சுங்கசாவடியை பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மொத்தம் 117.3 கோடி வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தி சுங்கசாவடிகளை கடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வெறும் 100.987 கோடி வாகனங்கள் மட்டுமே சுங்கசாவடியை கடந்திருந்தது. தற்போது சுமார் 17 கோடி வாகனங்கள் அதிகமாக சுங்கசாவடியை பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் கடந்த ஏப்1ம் தேதி முதல் சில சுங்க சாவடிகளில் சுங்க கட்டணத்தை 4-5 சதவீதம் வரை உயர்த்தியது. ஒவ்வொரு ஆண்டும் சுங்க கட்டணத்தை இப்படியாக உயர்த்தப்படுகிறது. ஏப்1 ம் தேதி முதல் சில சுங்கசாவடிகளிலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் மற்ற சுங்க சாவடிகளிலும் கட்டண உயர்வு ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதலில் தனி நபர் வாகனங்களுக்கான சுங்கசாவடி வருடாந்திர பாஸ் முறையை அமலுக்கு கொண்டு வருகிறது.அதன்படி வாகன உரிமையாளர்கள் வருடம் ரூ3000 செலுத்தி வருடாந்திர பாஸை பெற்றுக்கொள்ளலாம். இந்த பாஸை பயன்படுத்தி 200 சுங்கசாவடிகளை கடந்து செல்ல முடியும்.
200 சுங்கசாவடிகளை 1 ஆண்டிற்குள்ளாகவே பயன்படுத்திவிட்டால் அந்த வாகன உரிமையாளர் மீண்டும் ரூ3000 செலுத்தி பாஸை புதுப்பித்துக்கொள்ள முடியும். பாஸ் புதுப்பிக்கப்பட்ட நாளில் இருந்து அடுத்த 1 ஆண்டிற்கு அந்த பாஸ் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கசாவடிகள் மூலம் அரசு அதிக வருமானத்தை ஈட்டி வருகிறது. தற்போது உள்ள தகவலின்படி பார்த்தால் மாதம் ரூ10 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலாகிறது என்பது தெளிவாக தெரிகிறது. வருடாந்திர பாஸ் முறை அமலுக்கு வந்தால் இந்த வருமானம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









