பாஸ்டேக் மூலமாக நேற்று ஒரே நாளில் வசூலான தொகை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க...
பாஸ்டேக் மூலமான டோல்கேட் கட்டண வசூலில் மிகப்பெரிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் (டிசம்பர் 24), பாஸ்டேக் மூலமாக மட்டும் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமான டோல்கேட் கட்டணம் பாஸ்டேக் மூலமாக வசூல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

50 லட்சத்திற்கும் மேற்பட்ட பாஸ்டேக் பரிவர்த்தனைகள் மூலமாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India - NHAI) இன்று (டிசம்பர் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாஸ்டேக் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வசூல் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், இதனை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாஸ்டேக்கிற்கு மாறுவதன் மூலமாக டோல்கேட்களில் தேசிய நெடுஞ்சாலை பயனர்களின் நேரமும், எரிபொருளும் சேமிக்கப்படும் எனவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஸ்டேக்கின் மிக முக்கியமான நன்மைகளில் இவை இரண்டும் முக்கியமானது. டோல்கேட் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி விட்டு செல்லும்போது சில சமயங்களில் அதிக நேரம் ஆகிறது.

ஒவ்வொரு வாகனமும் அதிக நேரம் எடுத்து கொள்வதால், டோல்கேட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது. இதுதவிர காத்திருக்கும் நேரத்தில் வாகனங்களில் எரிபொருளும் வீணாகிறது. ஆனால் பாஸ்டேக் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

டோல்கேட்களில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் வாகனத்தின் முன்னால் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக்கை உடனடியாக 'ரீட்' செய்து உங்கள் வருகையை பதிவு செய்து விடும். இதன்பின் உங்கள் கணக்கில் இருந்து டோல்கேட் கட்டணம் கழிக்கப்பட்டு விடும். தேவைப்படும் சமயங்களில் நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நெரிசல் ஏற்படாது என்பதால், நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை பாஸ்டேக் உறுதி செய்கிறது. இதுதவிர காகித பயன்பாட்டையும் பாஸ்டேக் குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கொரோனா வைரஸ் பரவி வரும் தற்போதைய காலகட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் பாஸ்டேக் உதவுகிறது.

கட்டணம் செலுத்துவதற்கு டோல்கேட் ஊழியர்களை தொடர்பு கொள்ள வேண்டியதில்லை என்பதால், தற்போது பாஸ்டேக்கை பலரும் விரும்புகின்றனர். இதுபோன்று பல்வேறு நன்மைகள் இருக்கிறது என்பதுடன், பாஸ்டேக் கட்டாயமாக இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால், அனைவரும் உடனடியாக பாஸ்டேக்கிற்கு மாறி விடுவது நல்லது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








