வாகன போக்குவரத்து அதிகரிப்பால் டோல்கேட் கலெக்ஸன் சும்மா அள்ளுது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?
கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்த நிலைக்கு சுங்க சாவடி வசூல் நெருங்கி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பிரச்னையால், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மட்டுமின்றி, அரசுக்கும் பல்வேறு வகைகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சுங்க சாவடிகளை உதாரணமாக கூறலாம். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

அன்றைய தினத்தில் இருந்து பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டதுடன், தனியார் கார், இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. எனவே வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடின.

இதன் எதிரொலியாக சுங்க சாவடிகள் மூலமாக கிடைக்க வேண்டிய வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவில் மத்திய, மாநில அரசுகள் தற்போது படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. எனவே இந்தியாவில் வாகன போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

அத்துடன் சுங்க சாவடி வசூலும், வர்த்தக வாகனங்களின் போக்குவரத்தும் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை போன்ற நிலைமைக்கு வந்து கொண்டுள்ளன. குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகளில் வர்த்தக வாகனங்களின் இயக்கம் ஊக்கம் அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது.

இதன் விளைவாக சுங்க சாவடி வசூலும் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன் இருந்த நிலையை நெருங்கி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட இடையூறுக்கு பின்னர் வணிக நடவடிக்கைகள் உத்வேகம் பெற்று வருவதற்கான அறிகுறி இது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், தேசிய நெடுஞ்சாலைகளில் வர்த்தக வாகனங்களின் போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்தாலும், பயணிகள் வாகனங்களின் இயக்கம் இன்னும் பெரிதாக உயரவில்லை. இது குறித்து சிஆர்ஐஎஸ்ஐஎல் ரிசர்ச் (CRISIL) நிறுவனத்தின் இயக்குனர் இஷா சௌத்ரி கூறுகையில், ''600க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடிகளின் டோல் தரவுகளை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம்.

இதில், ஜூன்-ஜூலை போக்குவரத்து தரவுகள், கடந்த பிப்ரவரி மாதத்தின் அளவிற்கு கிட்டத்தட்ட 80 சதவீதம் திரும்பி விட்டதை காட்டுகின்றன'' என்றார். அதே நேரத்தில் மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ (ICRA), கடந்த ஜூலை மாதத்தின் சுங்க சாவடி வசூல், கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முந்தைய அளவில் கிட்டத்தட்ட 85 சதவீதம் என கூறியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்து கொண்டே வந்தாலும், பொருளாதார நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் உத்தரவில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக பல்வேறு தளர்வுகளை வழங்கி கொண்டே வருகின்றன. எனவே கூடிய விரைவில் முழுமையான இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








