இந்தியாவில் இவங்களுக்கு மட்டும் டோல்கேட் கட்டணம் கிடையாது! ஏன் தெரியுமா?
இந்தியாவில் டோல்கேட்டுகளில் பணம் கட்டாமல் பயணிக்க 5விதமான வாகனங்களுக்கு மட்டுமே விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் டோல்கேட்டுகளில் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்கு ஏன் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது? எந்தெந்த வகை வாகனங்களுக்கு இந்த விதிவிலக்கு பொருந்தும்? என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைத்து சுங்க கட்டணத்தை மத்திய அரசு வசூல் செய்து வருகிறது. சாலை பராமரிப்பு மற்றும் கட்டுமானத்திற்காக இந்த சுங்க கட்டணம் என்பது வசூல் செய்யப்படுகிறது. இதனால் அந்த சுங்க சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும். தற்போது இந்த சுங்க கட்டணத்தை செலுத்துவதற்காக ஃபாஸ்ட் டேக் கார்டு பயன்படுத்தப்படுகிறது.

சுங்க சாவடி கட்டணம் மூலமே மத்திய அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் வருகிறது. இந்த சுங்கச்சாவடியை எந்தவித கட்டணமும் செலுத்தாமல் கடந்து செல்ல 5 விதமான வாகனங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் சுங்க சாவடியை கடந்து செல்லும் போது ஒரு ரூபாய் கூட கட்டணமாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்கு குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து விதமான வாகனங்கள் என்னவென்றால் ராணுவ வாகனங்கள்ல விஐபி வாகனங்கள், அரசு அதிகாரிகள் அல்லது உயர் பதவியில் இருப்பவர்களின் வாகனங்கள், அவசர உதவி வாகனங்கள், டூவீலர்கள் ஆகிய வாகனங்களுக்கு இந்த விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியா முழுவதும் எந்த சுங்கச்சாவடியை கடந்து சென்றாலும் அதற்கு பணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை.

இந்திய ராணுவத்தினர் தங்கள் வாகனங்களில் இந்தியாவிற்குள் பயணிக்கும் போது தேசிய நெடுஞ்சாலைகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் அவசர தேவைக்காக பயணிப்பார்கள் என்பதால் அவர்களுக்கு கட்டண வசூல் என்பது கிடையாது. அடுத்ததாக விஐபி கார்கள் இது சற்று குழப்பமான செக்மென்ட்தான்.
இந்தியாவில் விஐபிகள் என்றால் அரசியல்வாதிகள், அரசு நியமித்த பதவியில் இருக்கும் நபர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட நபர்களுக்கு இந்தியாவில் எந்த சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிக்ககூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு விஐபி பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாஸ் உள்ள வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது எந்தவிதமான கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை.

அடுத்ததாக உயர் பதவியில் இருக்கும் நபர்களுக்கான வாகனங்களுக்கும் கட்டணம் செலுத்த தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. அதன்படி கோர்ட் நீதிபதிகள், அரசின் தலைமைச் செயலகம் மற்றும் பாராளுமன்றத்தில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட நபர்கள் அவர்களது வாகனத்தில் பயணிக்கும் போது சுங்கசாவடியை கடந்தால் அவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.
அவசர உதவி வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட சைரன் வைத்த வாகனங்கள் சுங்கச்சாவடியை கிடக்கும் போது அந்த வாகனங்களும் சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டிய தேவையில்லை. இறுதியாக டூவீலர்கள், இந்தியாவில் உள்ள டூவீலர்கள் எல்லாம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்த தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க கட்டணம் என்பது ஒரு வாகனம் குறிப்பிட்ட சாலையில் பயணிப்பதால் அந்த சாலைக்கு ஏற்படும் சேதாரத்தை கணக்கிட்டு அதற்கான கட்டணம் தான் இந்த சுங்க கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டூவீலர்கள் சாலையில் சேதாரத்தை ஏற்படுத்துவதில்லை என்பதால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மற்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனத்தின் வகைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்.
இந்த சுங்க சாவடிகளில் இருக்கும் ஒரு முக்கியமான விஷயம் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. சுங்கச்சாவடியில் சுமார் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நின்றால் அப்பொழுது க்யூவில் நிற்கும் வாகனங்களை எந்தவித கட்டணமும் வாங்காமல் அனுப்பி விட வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. வாகனத்தின் கியூ நீளம் 100 மீட்டருக்கும் குறைவாக வரும் வரை வாகனங்களை இலவசமாக அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்காக சுங்க சாவடியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் மஞ்சள் நிற கோடு ஒன்று போடப்பட்டிருக்கும். அந்த கோட்டிற்கு பின்னால் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றால் கேட் பகுதியில் இருக்கும் வாகனத்தை எந்தவித கட்டணமும் இல்லாமல் அனுப்பி விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கு இந்த தகவல் தெரியாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்ட கட்டணம் வசூல் செய்வதன் மூலம் அரசு தேசிய நெடுஞ்சாலைகளை சிறப்பாக பராமரித்து வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் இந்த சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசு சுங்க கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications









