டோல்கேட்கள் இல்லாத நாடாக மாறப்போகிறது இந்தியா... முழுமையாக அகற்றப்படும் என மத்திய அமைச்சர் உறுதி...
அடுத்த ஓராண்டு காலத்திற்குள் டோல்கேட்கள் இல்லாத நாடாக இந்தியா மாறப்போகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அடுத்த ஓராண்டு காலத்திற்குள் டோல்கேட்கள் முழுமையாக அகற்றப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அதற்கு பதிலாக ஜிபிஎஸ் சார்ந்த கட்டண வசூல் முறை அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில், ''இந்த அவைக்கு வாக்குறுதி ஒன்றை நான் அளிக்கிறேன். அடுத்த ஓராண்டிற்குள் இந்தியாவில் அனைத்து டோல்கேட்களும் அகற்றப்படும். அதற்கு பதிலாக ஜிபிஎஸ் முறையின் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்'' என்றார்.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் மத்தியில் டோல்கேட்கள் மீது மிகப்பெரிய அதிருப்தி நிலவி வருகிறது. விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டு டோல்கேட்களில் கட்டண கொள்ளை நடைபெற்று வருவதாகவும், இதனால் டோல்கேட்களை அகற்ற வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மிக நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்றனர்.

இதில், நீங்களும் ஒருவர் என்றால், டோல்கேட்கள் அகற்றப்படுகிறது என மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடாதீர்கள். கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது என்பதுதான் உண்மை. ஆனால் இந்த புதிய திட்டத்தின் மூலமாக தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படும்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி விட்டு செல்ல வாகனங்கள் சில சமயங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே வாகனங்களின் தடை இல்லாத போக்குவரத்தை உறுதி செய்வதற்காக பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தும் முறை அமல் செய்யப்பட்டது.

கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் இந்தியாவில் டோல்கேட் கட்டணம் செலுத்த அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் இரு மடங்கு டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வந்த பின்னரும் கூட காத்திருக்கும் நேரம் பெரிய அளவில் குறையவில்லை என பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஒரு சில டோல்கேட்களில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக மிகவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், ஏராளமான குளறுபடிகள் நடைபெறுவதாகவும் வாகன ஓட்டிகள் பலர் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் புதிய ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் இந்த பிரச்னைகள் முழுமையாக களையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் கடந்த டிசம்பர் மாத இறுதியிலேயே வெளிவந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அடுத்த இரண்டு ஆண்டுகளில் டோல்கேட்கள் இல்லாத நாடாக இந்தியா உருவெடுக்கும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அடுத்த 1 ஆண்டு காலத்தில் டோல்கேட்கள் இல்லாத நாடாக இந்தியா உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








