விற்பனையில் கொடிகட்டி பறக்கும் உலகின் டாப்- 10 வாகன தயாரிப்பாளர்கள்!
கனவு வாகனமாக இருந்த கார் தற்போது அத்தியாவசிய பயன்பாட்டு பொருளாக மாறிவிட்டது. இதனால், உலக அளவில் கார் மார்க்கெட் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்தை சரியாக புரிந்து கொண்டு சரியான தயாரிப்புகளை வழங்கி தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வாகன நிறுவனங்கள் கடும் பிரயேத்னங்களை செய்து வருகின்றன.
அந்த வகையில், கடும் போட்டிக்கு மத்தியிலும் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களின் அபிமானத்தை பெற்று விற்பனையிலும், உற்பத்தியிலும் உலகமே வியந்து பார்க்கும் சாம்யராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ள சில கார் நிறுவனங்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் முதல் 10 இடத்தில் இருக்கும் கார் நிறுவனங்களை ஸ்லைடரில் காணலாலம்.

கூடுதல் விபரம்
கடந்த ஆண்டு விற்பனை புள்ளிவிபரங்களின்படி உலகின் டாப் 10 வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம். பல்வேறு ரக வாகனங்களை விற்பனை செய்தாலும், கார் விற்பனை மூலமாகவே கணிசமான விற்பனையை பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நிறுவனங்கள் பெற்று வருகின்றன.

10. பிஎம்டபிள்யூ
கடந்த ஆண்டு விற்பனையில் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ குழுமம் பத்தாவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் ரோல்ஸ்ராய்ஸ், மினி பிராண்டு மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய பிராண்டுகளில் சர்வதேச அளவில் மொத்தம் 1.9 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும், கடந்த ஆண்டில் 3.50 சீரிஸ் கார்களையும் பிஎம்டபிள்யூ விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

9. பீஜோ சிட்ரோயன்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ- சிட்ரோயன் குழுமம் உலக அளவில் 2.8 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டை காட்டிலும் அந்த நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டில் 4.9 சதவீதம் சரிவை கண்டது. அதேநேரத்தில், சீனாவில் பீஜோ சிட்ரோயன் கார்களின் விற்பனை 26 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

8. ஹோண்டா மோட்டார்ஸ்
ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் கார் விற்பனையில் 8வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் 4 மில்லியனுக்கும் அதிகமான கார்கள் உள்ளிட்ட வாகன மாடல்களை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா சிஆர்வி எஸ்யூவிதான் ஹோண்டாவின் மிகப்பெரிய விற்பனை பங்களிப்பை கொடுத்து வருகிறது. மேலும், அமெரிக்க மார்க்கெட் ஹோண்டாவின் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

7. ஃபியட்- கிறைஸ்லர்
இத்தாலியை சேர்ந்த ஃபியட் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கிறைஸ்லர் ஆகிய கூட்டு நிறுவனம் கடந்த ஆண்டில் 4.3 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளன. இதில், கார் மற்றும் பஸ் மாடல்களும் அடக்கம். மேலும், கடந்த ஆண்டு அமெரிக்காவில் கிறைஸ்லர் நிறுவனத்தின் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த கூட்டணியில் கிறைஸ்லர் பிராண்டில் 2.6 மில்லியன் வாகனங்களும், ஃபியட் பிராண்டில் 1.7 மில்லியன் வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

6.ஃபோர்டு மோட்டார்
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு மோட்டார் நிறுவனம் வாகன விற்பனையில் உலகின் 6வது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. கடந்த ஆண்டில் உலக அளவில் 6.3 மில்லியன் வாகனங்களை ஃபோர்டு மோட்டார் விற்பனை செய்துள்ளது. இதில், கார்கள் மற்றும் டிரக்குகளும் அடங்கும். அமெரிக்கா மற்றும் கனடாவில் அதிகம் விற்பனையாகும் ஃபோர்டு தயாரிப்பு என்ற பெருமையை எஃப் பிக்கப் டிரக் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

5. ஹூண்டாய்- கியா
கடந்த ஆண்டு விற்பனையில் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமம் 5வது பெரிய நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ஹூண்டாய் மற்றும் கியா பிராண்டுகளில் கடந்த ஆண்டில் மட்டும் 7.5 மில்லியன் வாகனங்களை இந்த குழுமம் விற்பனை செய்துள்ளது. நடப்பு ஆண்டில் 8 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்ய ஹூண்டாய் குழுமம் திட்டமிட்டுள்ளது.

4. நிசான்- ரெனோ குழுமம்
ஜப்பானை சேர்ந்த நிசான் மற்றும் பிரான்சை சேர்ந்த ரெனோ கூட்டணி உலக அளவில் 8.2 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளன. இதில், நிசான் பிராண்டில் 5.1 மில்லியன் வாகனங்களும் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சீனாவில் மட்டும் 1.2 மில்லியன் வாகனங்களை நிசான் விற்பனை செய்துள்ளது.

3. ஃபோக்ஸ்வேகன்
வரும் 2017ம் ஆண்டில் உலகின் நம்பர்-1 கார் தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற வேண்டும் என்ற தீரா வேட்கையுடன் ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பெரும் முதலீட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. மேலும், ஃபோக்ஸ்வேகன் கீழ் செயல்படும் பல்வேறு கார் பிராண்டுகளுக்கும் அதிக முதலீடுகளை தருவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, ஃபோக்ஸ்வேகன் குழுமம் உலக அளவில் 9.7 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆடி, பென்ட்லீ, போர்ஷே போன்ற பிராண்டுகளின் விற்பனையும் இதில் அடங்கும். ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மிகப்பெரிய விற்பனை பங்களிப்பை சீனா வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு சீனாவில் மட்டும் 3.2 மில்லியன் வாகனங்களை ஃபோக்ஸ்வேகன் குழுமம் விற்பனை செய்துள்ளது.

2. ஜெனரல் மோட்டார்ஸ்
70 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் நம்பர்- 1 வாகன தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2008ல் உலக பொருளாதார சரிவு காரணமாக தனது இடத்தை டொயோட்டாவிடம் இழந்தது. 2011ல் ஜப்பானை தாக்கிய சுனாமி புண்ணியத்தில் டொயோட்டாவை பின்னுக்குத் தள்ளி ஒருவழியாக நம்பர்-1 ஆசனத்தில் மீண்டும் அமர்ந்தது. ஆனால், கடும் முயற்சிகளுக்கு பின் டொயோட்டாவிடம் திரும்பவும் தனது இடத்தை இழந்து கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் 9.71 மில்லியன் வாகனங்களை ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்தது. இதில், 7.29 லட்சம் என்ற மிகப்பெரிய பங்களிப்பை செவர்லே க்ரூஸ் கார்கள் அளித்தன.

1. டொயோட்டா மோட்டார்ஸ்
கடந்த ஆண்டு 9.98 மில்லியன் வாகனங்களை உலக அளவில் விற்பனை செய்து உலகின் நம்பர்- 1 வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை ஜப்பானை சேர்ந்த டொயோட்டா பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல் டொயோட்டா கரொல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்த பிரச்னைகள் கொண்ட தரமான தயாரிப்புகளை வழங்குவதில் டொயோட்டா வாடிக்கையாளர் மத்தியில் தனி மதிப்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








