பீதியில் ஆழ்த்தும் இந்தியாவின் பேய் நடமாட்ட சாலைகள்!

Written By:

சில சாலைகளில் பயணிக்கும்போதே அந்த சாலையின் இயற்கை வனப்பும், சாலையின் தரமும் மனதுக்கு உற்சாகமூட்டும். ஆனால், சில சாலைகள் பயணிகளுக்கும், ஓட்டுனருக்கும் அச்சமூட்டுவதாக அமைந்துவிடும்.

சாலையின் நில அமைப்பு விபத்துக்களுக்கு ஒரு காரணமாக பார்க்கப்படும் நிலையில், அதற்கு பேய்கள்தான் காரணம் என்று அப்பகுதியின் உள்ளூர்வாசிகளால் கூறப்படுகிறது. அவ்வாறு, பேய் நடமாட்டம் உள்ளதாக அல்லது, அதிக உயிர்களை காவு வாங்கும் சாலைகள் குறித்த செய்திகளை பார்க்கலாம்.

 01. ராஞ்சி- ஜாம்ஷெட்பூர் நெடுஞ்சாலை

01. ராஞ்சி- ஜாம்ஷெட்பூர் நெடுஞ்சாலை

இந்தியாவிலேயே அதிக விபத்துக்கள் நடக்கும் நெடுஞ்சாலைகளில் ஒன்றாக கூறப்படும் ராஞ்சி - ஜாம்ஷெட்பூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 33 இந்த பட்டியலில் முக்கிய இடத்தை பெறுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்த நெடுஞ்சாலையின் 40 கிமீ தூரம் கொண்ட குறிப்பிட்ட இடத்தில் மட்டும் 243 பேர் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். மேலும், இரவு நேரத்தில் இந்த சாலையை கடக்கும் பெண் உருவத்தை கண்டுதான் பல டிரைவர்கள் கட்டுப்பாட்டை இழந்து பல விபத்துக்கள் நடப்பதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். அதேநேரத்தில், இந்த குறிப்பிட்ட தூரத்தில் சாலை மிக குறுகலாகவும், வளைவுகள் அதிகம் இருப்பதும் காரணமாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Picture credit: panoramio

02. மும்பை- நாசிக் நெடுஞ்சாலை

02. மும்பை- நாசிக் நெடுஞ்சாலை

மும்பை- நாசிக் நெடுஞ்சாலையின் இடையில் உள்ள கசரா மலை சாலையும் வாகன ஓட்டிகளை அரட்டி எடுத்து விடுகிறது. ஆம், இந்த கசரா காட் பகுதியில் பேய் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, அந்த சாலையின் இருமருங்கிலும் புதர்களும், மரங்களுமே வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை வரவழைப்பாதாக உள்ளது. மேலும், அங்குள்ள மரங்களில் தலையில்லா பெண் உடல் அமர்ந்திருப்பதை பார்த்ததாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதுதான் வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழக்க காரணமாக கூறப்படுகிறது.

Picture credit: stockpicturesforeveryone

03. சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை எண் 209

03. சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை எண் 209

சத்தியமங்கலம் வன விலங்கு சரணாலய பகுதியின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும் பேய் நடமாட்ட கதை உலவுகிறது. பிக் பாக்கெட் திருடனாக இருந்து மரணமடைந்த முனிசாமி வீரப்பன் என்பவரின் ஆவி நடமாட்டம் இந்த சாலையில் இருப்பதாக அப்பகுதியினரால் நம்பப்படுகிறது. அதேநேரத்தில், அந்த சாலையில் நால் ரோடு திருடர்கள்தான் சாலையின் குறுக்கே இரும்பு கம்பியை கட்டி, டிரக்குகளை விபத்தில் சிக்க வைத்து திருடுவதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Picture credit: Suniltg/Wiki Commons

04. மும்பை- கோவா நெடுஞ்சாலை

04. மும்பை- கோவா நெடுஞ்சாலை

மும்பை- நாசிக் கசரா காட் பகுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுவது போன்றே, மும்பை- கோவா இடையில் கசேதி காட் சாலையிலும் மிரள வைக்கும் பேய்க் கதை உள்ளது. அதாவது, இந்த சாலையில் செல்லும் பல கார்களும், பஸ்களும் உருண்டு விபத்தில் சிக்குகின்றன. இதற்கு முக்கிய காரணம், அந்த பகுதியில் நிற்கும் பெண் ஒருவர் சாலையில் சைகை காட்டி வாகனங்களை நிறுத்த சொல்வார். நிறுத்தாமல் செல்பவர்களை அந்த பெண் விபத்தில் சிக்க வைப்பதாக கூறப்படுகிறது.

Picture credit: bcmtouring

05. டெல்லி கன்டோன்மென்ட் சாலை

05. டெல்லி கன்டோன்மென்ட் சாலை

டெல்லி கன்டோன்ட்மென்ட் சாலையில் இரவில் பெண் ஆவி ஒன்று வெள்ளை சேலையுடன் சுற்றி திரிவதாக பல வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அந்த உருவத்தை பார்த்து, வாகனத்தை வேகமாக செலுத்தினாலும், அதேவேகத்தில் அந்த பெண் உருவமும் அதிவேகத்தில் பின்தொடர்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

Photo Credit:i0.wp.com

06. மார்வ் அண்ட் மத் தீவு சாலை

06. மார்வ் அண்ட் மத் தீவு சாலை

மும்பை அருகேயுள்ள இந்த மார்வ் பீச்சிற்கு செல்லும் 9 கிமீ தூரமுடைய சாலை இயற்கை எழில் கொஞ்சும் சாலைகளில் ஒன்று. ஆனால், இந்த சாலையில் திருமண கோலத்தில் நிற்கும் ஒரு பெண் உரத்த குரலில் அழுவதாக தெரிவிக்கின்றனர். இதனால், இந்த சாலையில் செல்லும் பலர் பீதியடைந்து விபத்தில் சிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனராம்.

Picture credit: polkacafe

 07. கிழக்கு கடற்கரை சாலை

07. கிழக்கு கடற்கரை சாலை

ஈசிஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த கிழக்கு கடற்கரை சாலையில் பயணிப்பது ஒரு சுகானுபவத்தை தர வல்லது. கடற்கரை ஓர அழகை ரசித்துக் கொண்டே பாண்டிச்சேரியை சில மணிநேரத்தில் பிடித்து விடக்கூடிய சென்னை- பாண்டிச்சேரி இடையிலான ஈசிஆர் ரோடு விபத்துக்களுக்கு பெயர் பெற்றது. இந்த சாலையிலும் இரவு நேரத்தில் ஆவி நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும், அதிவேகத்தில் வாகனத்தை செலுத்துவதே விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

Picture credit: hourdose

08. தி பரோக் குகை

08. தி பரோக் குகை

கல்கா- சிம்லா இடையிலான ரயில் தடத்தில் அமைந்திருக்கும் குகை எண் 33ல் ஆவி நடமாட்டம் இருப்பதாக ஒரு பேச்சு அப்பகுதியினர் மத்தியில் நிலவுகிறது. அதாவது, அந்த குகையை அமைப்பதற்காக கலோனல் பரோக் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரது கணக்கின்படி, மலையின் இரு பக்கங்களிலிருந்தும் குகையை குடைய உத்தரவிட்டார். ஆனால், தவறான கணக்கால், இருபக்கங்களிலிருந்தும் குடையப்பட்ட குகை, ஒன்றிணைக்க முடியாமல் போனது. இதையடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், அந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் வசை பாடினர். இதனால், மனம் உடைந்த அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை அந்த பணி முடிக்கப்படாத குகை அருகிலேயே புதைத்துள்ளனர். இதனால், அவரது ஆவி அந்த குகையில் இருப்பதாக நம்புகின்றனர்.

Picture credit: DailyMotion

09. பழைய மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலை

09. பழைய மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலை

இந்த சாலையில் பேய் நடமாட்டம் இருப்பது பற்றிய தகவலை இளைஞர் ஒருவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த சாலையில் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த தனது மாமாவிடம், வழியில் நின்றிருந்த பெண் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். எனது மாமாவும் பாவப்பட்டு, அந்த பெண்ணை வண்டியில் ஏற்றிக்கொண்டுள்ளார். சில கிமீ தூரத்தில் இறங்கிவிடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், சில கிலோமீட்டர் தூரத்தில் அந்த பெண் வழியில் நின்று மீண்டும் லிப்ட் கேட்டிருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது மாமா பின்னால் திரும்பி பார்த்தபோது, அந்த பெண் இல்லாதது கண்டு திடுக்கிட்டார். இதையடுத்து, ஸ்கூட்டரை படு ஸ்பீடாக செலுத்தியிருக்கிறார். ஆனாலும், அவரை விடாத அந்த பெண் ஸ்கூட்டர் வேகத்துக்கு ஈடுகொடுத்து பின்தொடர்ந்துள்ளார். இந்தநிலையில், எனது மாமா படுகாயங்களுடன் மறுநாள் காலையில் ஒரு தாபா ஓட்டல் அருகே மீட்கப்பட்டார் என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

Picture credit: ixigo

 10. பெசன்ட் அவென்யூ ரோடு

10. பெசன்ட் அவென்யூ ரோடு

சென்னையிலுள்ள பெசன்ட் அவென்யூ சாலையும் ஆவி நடமாட்டம் இருப்பதாக நம்பப்படும் சாலைகளில் ஒன்று. இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்வோர் விசித்திரமான சப்தங்களை கேட்பதாகவும், மர்ம சக்தி, தங்களை அறைவது போன்றும் உணர்வதாக தெரிவிக்கின்றனர்.

Picture credit: Sankar Pandian/Wiki Commons

உங்க அனுபவம்

உங்க அனுபவம்

சாலைகளில் குறிப்பிட்ட இடத்தின் நில அமைப்பு அல்லது சாலையின் இருக்கும் வளைவு காரணமாக அடிக்கடி விபத்து நிகழ்வது சகஜம். ஆனாலும், பேய் நடமாட்டம், ஆவி நடமாட்டம் என்று அப்பகுதியினரால் நம்பப்படுவது இன்றும் தொடர்கிறது. இதேபோன்று, உங்களுக்கு ஏதாவது 'பேய்' அனுபவம் இருந்தால், கமென்ட் பாக்ஸில் எழுதலாம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top 10 Haunted Road Routes In India.
Story first published: Friday, March 11, 2016, 13:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark