ஏறி உட்காந்தா வரிசையா 8 படம் பாத்துடலாம்! உலகில் நீண்ட நேரம் பறக்கும் விமானங்கள் இது தான்!
ஓஏஜி என்ற விமானங்களின் தரவுகளை கையாளும் நிறுவனம் தற்போது உலகின் நீண்ட தூர பயணம் செய்யும் விமானங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி விமானங்கள் எந்த நாட்டில் இருந்து எந்த நாட்டிற்கு இடைநிலாமல் அதிக நேரம் மற்றும் தூரம் பயணிக்கின்றன என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஓஏஜி என்ற நிறுவனம் தற்போது உலக அளவில் உள்ள விமானங்களின் தரவுகளை கையாண்டு வருகிறது. இந்நிறுவனம் விமானங்கள் செயல்படும் நேரம் பறக்கும் நேரம் விமானங்களுக்கு உள்ளே உள்ள தரவுகள் என பல்வேறு விஷயங்களை கையாண்டு விமான நிறுவனங்களுக்கு அவர்கள் தொழிலை விரிவுபடுத்தவும், செலவுகளை குறைக்கவும், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தவும் உதவி செய்து வருகிறது.

இந்நிறுவனம் தற்போது விமானங்கள் குறித்த சில முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளன. அதன்படி சர்வதேச அளவில் ஒரு விமானம் சராசரியாக 1437 கிலோமீட்டர் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சராசரியாக விமான பயணம் என்பது 2 மணி நேரம் 29 நிமிடம் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலகிலேயே அதிக நேரம் மற்றும் அதிக தூரம் பறக்கும் டாப் 5 விமான ரூட்டுகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
மெல்போர்ன்- டாலஸ்: ஆஸ்திரேலியா தலைநகர் மெல்போனிலிருந்து அமெரிக்காவில் உள்ள டாலஸ் பகுதிக்கு விமான சேவையை குவாண்டோஸ் நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது. இந்த ரூட்டில் விமானம் சுமார் 14,440கி.மீ பயணிக்கிறது. வாரத்திற்கு மூன்று விமானங்கள் இந்த ரூட்டில் பயணித்து வருகின்றன. இதில் 236 பேர் பயணம் செய்யக்கூடிய போயிங் 787-9 ரக விமானம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரூட்டில் கடந்த 2022-ம் ஆண்டு தான் சேவையை துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ரூட்டில் சரியாக மதியம் 12:45 மணிக்கு மெல்போனிலிருந்து கிளம்பும் இந்த விமானம் 15 மணி நேரம் 45 நிமிடம் பயணம் செய்து டல்லாஸிற்கு செல்கிறது. இந்த விமானத்தில் பயணிக்க இந்திய மதிப்பில் ரூபாய் 1.71 லட்சம் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பெர்த்- லண்டன்: மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான பெர்த் முதல் லண்டன் ஹீத்ரு விமான நிலையம் வரை உள்ள ரூட்டில் கொண்டாஸ் நிறுவனம் தனது விமான சேவையை கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வழங்கி வருகிறது. இந்த ரூட்டில் விமானம் 14,499 கிலோமீட்டர் இடைநிலாமல் பயணம் செய்ய வேண்டும். இந்த பயணத்திற்காக போயிங் 787-9 ரக விமானத்தை பயன்படுத்தி வருகிறது.

இந்த பயணத்தை செய்வதற்காக இந்த விமானம் மொத்தம் 16 மணி நேரம் 45 நிமிடத்தை எடுத்துக் கொள்கிறது. இந்த விமானத்தை பயணிகள் பல விரும்புகின்றனர் பெரும்பாலும் இந்த விமானம் 76% சீட் நிரப்பப்பட்டே பயணிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் பயணிக்க ரூபாய் 1.27 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தோஹா-ஆக்லாந்து: தோஹாவிலிருந்து ஆக்கிலாந்து வரை பயணிக்கும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் தான் உலகின் நீண்ட தூரம் பயணிக்கும் மூன்றாவது விமானமாக இருக்கிறது. இந்த சேவை கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் துவங்கப்பட்டது. இந்த சேவை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவை தற்போது ஏ350-1000 ரக ஏர்பஸ் விமான மூலம் நடத்தப்படுகிறது.

இதில் 327 பயணிகள் பயணிக்க முடியும். இந்த விமானம் சுமார் 14 ஆயிரத்து 535 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியது உள்ளது. இதற்காக 17 மணி நேரம் 15 நிமிடத்தை பயண நேரமாக எடுத்துக் கொள்கிறது. இந்த விமானத்தில் பயணிக்க 1.87 லட்சம் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சிங்கப்பூர்-நியூயார்க்: கொரோனா காலத்திற்கு முன்பு வரை இந்த ரூட் தான் உலகிலேயே நீண்ட தூரம் இடைநில்லா விமானம் பயணிக்கும் ரூட்டாக இருந்தது. தற்போது இது 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ரூட்டில் சுமார் 15 ஆயிரத்து 344 கிலோமீட்டர் விமானம் பறந்து செல்ல வேண்டும்.

இந்த ரூட்டில் விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் செய்து வருகிறது. இதற்காக ஏர்பஸ் 350 900 யூஎல்ஆர்எஸ் ரக விமானத்தை பயன்படுத்துகிறது. இதில் 67 பிசினஸ் சீட்டுகளும் 94 பிரிமியம் எக்கானமி சீட்டுகளும் இருக்கின்றன. இதில் எக்கனாமி கிளாஸ் சீட் கிடையாது.
இந்த விமானம் அதிகபட்சமாக 19 மணி நேரம் 10 நிமிடம் வரை பயண நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இந்த விமானத்தின் பெரும்பாலான சீட்டுகள் புக் ஆகிவிடுகின்றன. இதுவரை 83 சதவீதமான சீட்டுகள் புக் செய்யப்பட்டு விமானம் பறந்து உள்ளது. நியூயார்க் முதல் சிங்கப்பூர் வரை பறக்கும் இடைநிற்றலுடன் பறக்கும் மற்ற விமானங்களை விட இந்த விமானங்களில் தான் நான்கு மடங்கு அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர்.
நியூயார்க் ஜேஎஃப்கே - சிங்கப்பூர்: உலகின் நீண்ட தூர விமான பயணமாக இருப்பது சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் ஜேஎஃப்கே ரூட்டில் பயணிக்கும் விமானம்தான். இந்த விமானம் சுமார் 15 ஆயிரத்து 348 கிலோமீட்டரை கடந்து செல்ல வேண்டியது உள்ளது. இந்த விமான சேவை கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் துவங்கப்பட்டது.
இந்த சேவைக்காக ஏர்பஸ் ஏ 350 விமானம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானம் அதிகபட்சமாக 19 மணி நேரம் 10 நிமிடம் தனது பயண நேரத்தை எடுத்துக் கொள்கிறது. உலகிலேயே அதிக நேரம் இடைநிற்றல் இல்லாமல் பயணிக்கும் விமானம் இதுதான். இந்த விமானத்தில் நீங்கள் பயணித்தால் உங்களுக்கு உலகிலேயே வெகுசில நபர்களுக்கு கிடைக்கும் விமான பயண அனுபவம் கிடைக்கும்.
டிரைஸ்பார்க் கருத்து: என்னதான் விமான பயணம் சொகுசாக இருந்தாலும் 19 மணி நேரம் தொடர்ந்து விமானத்திற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலான விஷயம்தான். இருந்தாலும் நீண்ட தூர பயணத்தை எளிமையாக கடக்க இதுவே ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. அதனால் மக்கள் பலர் இடைநிலா விமானங்களை தான் அதிகம் விரும்புகின்றனர்


Click it and Unblock the Notifications
