2014ம் ஆண்டின் உலகின் அதிக விலை கொண்ட டாப்- 10 கார்கள்!
சக்திவாய்ந்த எஞ்சின், நவீன தொழில்நுட்பம், அதிக பாதுகாப்பு வசதிகள், பிரத்யேக டிசைனுடன் கட்டமைக்கப்படும் கார்கள் வாடிக்கையாளர்கள், ஆட்டோமொபைல் துறையினர் மட்டுமின்றி, உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.
அந்த வகையில், தற்போது விற்பனையில் இருக்கும் உலகின் விலையுயர்ந்த டாப்-10 புதிய கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் உலகின் விலையுயர்ந்த டாப்-10 கார்களை காணலாம்.

10. போர்ஷே 918 ஸ்பைடர் ($845,000)
ஜெர்மனி தயாரிப்பான இந்த கார் டாப்-10 பட்டியலில் 10வது இடத்தை பிடிக்கிறது. இந்த காரில் 4.6 லிட்டர் வி8 எஞ்சினுடன் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஹைபிரிட் மோடில் இந்த கார் அதிகபட்சமாக 887 எச்பி பவரை அளிக்கும். 0- 100 கிமீ வேகத்தை 2.5 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரின் குறிப்பிடத்தக்க புதுமையான அம்சங்களில் ஒன்று இதன் பின்புற வீல்களும் தேவைப்படும்போது குறிப்பிட்ட அளவு திரும்பும். பெட்ரோல் எஞ்சின் இல்லாமல் பேட்டரியில் இயங்கும்போது 30 கிமீ தூரம் வரை செல்ல முடியும். கார்பன் ஃபைபர் ரீஇன்ஃபோர்ஸ்டு பாலிமர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய மதிப்பில் ரூ.5.11 கோடி விலை கொண்டது. இதன் டிராக் வெர்ஷன் மாடல் ரூ.5.62 கோடி விலை கொண்டது.

9.மெக்லாரன் பி1($1.1 மில்லியன்)
மெக்லாரன் நிறுவனத்தின் பொறியியலுக்கு சான்றாக கூறப்படும் மாடல் இது. இந்த காரும் ஹைபிரிட் மாடல்தான். 3.8 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் கொண்டது. ஹைபிரிட் மோடில் இந்த கார் அதிகபட்சமாக 903 எச்பி பவரை வாரி வழங்கும். அதிக அளவில் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது. கார் பிரியர்களின் மனதை கவர்ந்த மாடல். இந்திய மதிப்பில் ரூ.6.66 கோடி விலை மதிப்பு கொண்டது.

8. ஹெனிஸி வெனோம் ஜிடி($1.2 மில்லியன்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஹெனிஸி பெர்ஃபார்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடல் என்ற பெருமைக்காக புகாட்டியுடன் மல்லுக்கட்டிய மாடல். லோட்டஸ் எலிஸ் ரோட்ஸ்டெர் மாடலை மனதில் வைத்து இந்த காரை டிசைன் செய்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த அதிவேக முயற்சியின்போது வெறும் 13.63 வினாடிகளில் 0-299 கிமீ வேகத்தை எட்டி கின்னஸ் சாதனை படைத்தது. இந்திய மதிப்பில் ரூ.7.26 கோடி விலை கொண்டது. மொத்தம் 29 கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

7. ஃபெராரி லாஃபெராரி($1.3 மில்லியன்)
ஃபெராரி நிறுவனம் தயாரித்த மாடல்களில் மிகவும் அழகானதாக குறிப்பிடப்படும் மாடல்தான் லாஃபெராரி. இதுவும் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த காரில் 789 எச்பி பவரை அளிக்கும் 6.3 லிட்டர் வி12 எஞ்சினும், 161 எச்பி பவரை அளிக்கும் மின் மோட்டார்களும் கொண்ட ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடல். 0- 100 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள் எட்டிவிடும் வல்லமை கொண்டது. மணிக்கு அதிகபட்சமாக 354 கிமீ வேகத்தில் பறக்கும். இந்திய மதிப்பில் ரூ.7.86 கோடி விலை கொண்டது.

6. பகானி ஹூவைரா( $1.5 மில்லியன்)
இத்தாலிய தயாரிப்பு மாடலான பகானி ஹூவைரா உலக அளவில் ஆட்டோமொபைல் பிரியர்களின் கனவு காராக விளங்குகிறது. இந்த கார் பல்வேறு தனித்துவமான டிசைன் அம்சங்களை கொண்டது. ஒவ்வொரு காரையும் ஆர்டரின் பேரில் மட்டுமே பிரத்யேக அம்சங்களுடன் பகானி தயாரித்து அளிக்கிறது. இந்த காரில் 720 எச்பி பவரை அளிக்கும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 0- 97 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும். இந்திய மதிப்பில் ரூ.9.07 கோடி விலை கொண்டது.

5.கோனிக்செக் அகெரா ஆர்($1.6 மில்லியன்)
சுவீடனை சேர்ந்த கோனிக்செக் நிறுவனத்தின் பிரத்யேக ஸ்போர்ட்ஸ் கார் மாடல். இந்த காரில் 1,140 எச்பி பவரை அளிக்கும் 5.0 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 439 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இந்திய மதிப்பில் ரூ.9.68 கோடி விலை கொண்டது.

4.அஸ்டன் மார்ட்டின் ஒன்-77($1.8 மில்லியன்)
அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் பிரத்யே லிமிடேட் எடிசன் மாடல். மொத்தம் 77 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட தீர்மானிக்கப்பட்ட மாடல். ஒன்-77 என்று அழைக்கப்படும் காரின் டிசைன் மிகவும் பிரத்யேகமானது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரில் 750 எச்பி பவரை அளிக்கும் 7.3 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 3354 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்திய மதிப்பில் ரூ.10.89 கோடி விலை கொண்டது.

3.புகாட்டி வேரான்($2.5 மில்லியன்)
உலகின் அதிவேக கார் என்ற பெருமையை பெற்ற மாடல். மொத்தம் 450 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. அதில், 400 கார்கள் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன. மீதமுள்ள 50 கார்களில் 30 கார்களுக்கு முன்பதிவு முடிந்துவிட்டது. இந்தநிலையில், புதிய வேரான் மாடலை அறிமுகம் செய்ய புகாட்டி முயற்சிகளை துவங்கிவிட்டது. புகாட்டி வேரான் என்ற பெயரை கேட்டாலே அதிரும் அளவுக்கு பெர்ஃபார்மென்ஸில் பின்னும். 0- 100 கிமீ வேகத்தை 2.6 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 411 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.15.13 கோடி விலை கொண்டது.

2.லைகன் ஹைப்பர்ஸ்போர்ட்($3.4 மில்லியன்)
துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. கடந்த ஜனவரியில் நடந்த கத்தால் மோட்டார் ஷோவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தம் 7 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.7 லிட்டர் ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.இந்த எஞ்சின் அதிகபட்சமாக 740 எச்பி பவரை அளிக்கும். 0- 100 கிமீ வேகத்தை 2.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 395 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இந்த காரில் ஹாலோகிராஃபிக் டிஸ்ப்ளே பொருத்தப்ட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.20.57 கோடி விலை கொண்டது. இந்த காருக்கு அடுத்ததாக லைகன் சூப்பர்ஸ்போர்ட் என்ற மாடலை டபிள்யூ மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது.

1. லம்போர்கினி வெனினோ ரோட்ஸ்டெர்($4.5 மில்லியன்)
உலகின் அதிக விலையில் விற்பனைக்கு இருக்கும் புதிய கார் மாடல் இது. இந்த காரில் 750 எச்பி பவரை அளிக்கும் 6.5 லிட்டர் 12 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 355 கிமீ வேகம் வரை டாப் ஸ்பீடு கொண்டது. மொத்தம் 9 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. இந்திய மதிப்பில் ரூ.27.23 கோடி விலை கொண்டது.


Click it and Unblock the Notifications








