ஆளை விடுங்கப்பா என்று சொல்ல வைக்கும் உலகின் அதிபயங்கர சாலைகள்!
ஊட்டி சாலையின் கொண்டை ஊசி வளைவுகளையும், போக்குவரத்து நெரிசலிலும் பார்த்து நாக்குத்தள்ளிய பலர், இனிமே இந்த பக்கமே வரக்கூடாது என்று கூறுவதை பார்த்திருப்பீர்கள்.
ஆனால், இங்கே காணப்போகும் சாலைகள் அனைத்தும், எந்த நேரத்தில் என்ன நடக்குமா என்ற பீதியை ஏற்படுத்தும் உலகின் அதிபயங்கர சாலைகளாக குறிப்பிடப்படுகின்றன. அவ்வாறு, ஓட்டுனர்களை ஆளைவிடுங்கப்பா என்று சொல்ல வைக்கும் உலகின் அதிபயங்கர சாலைகளை இப்போது பார்க்கலாம்.

01. லக்ஸர் அல் ஹர்காபா சாலை- எகிப்து
செங்கடலையும், பழமையான லக்ஸர் நகரையும் இணைக்கும் இந்த சாலையும் மிக அபாயகரமானது. ஆள் ஆரவமற்ற இந்த சாலையை தவிர்ப்பதற்கு பலர் பரிந்துரைக்கின்றனர். மேலும், இந்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம். எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் அபாயமும் இருக்கிறது. தீவிரவாதிகள் அச்சத்தில் சில கார் ஓட்டுனர்கள் முகப்பு விளக்குகளை எரிய விடாமல் செல்வதால், பயங்கர விபத்துக்களும் நடக்கிறதாம்.
Picture credit: Przemyslaw/Wiki Commons

02. டரோகோ கோர்ஜ் சாலை - தைவான்
தைவான் நாட்டின் தேசிய நெடுஞ்சாலை எண் 8ல் அமைந்திருக்கும் இந்த சாலை, உலகின் மிகவும் அபாயகரமான சாலையாக குறிப்பிடப்படுகிறது. மலைச்சரிவு அதிகம் ஏற்படும் மலைச் சாலை மட்டுமல்ல, மிகவும் மோசமான வளைவுகளையும், குகைகளையும் கொண்ட சாலையாகவும் இருக்கிறது. நிலநடுக்கம், கனமழை போன்றவற்றாலும் பாதிக்கப்படும் பகுதி. அத்துடன் மிக குறுகலான மலைச்சாலையாக இருப்பதும் விபத்துக்களுக்கு அடிகோலுகிறது.
Picture credit: Tom Cheng/Wiki Commons

03. பாடியோபாவ்லோ- பெர்டிகாக்கி சாலை- க்ரீஸ்
க்ரீஸ் நாட்டில் உள்ள இந்த சாலை 23.5 கிமீ நீளமுடையது. மிக குறுகலான மலைப் பாதையாகவும், அபாயகரமான வளைவுகளை கொண்ட இந்த சாலையில் இருக்கும் பள்ளங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றதாம். பக்கவாட்டில் தடுப்பு சுவர் இல்லாததும், எந்தநேரத்திலும் இந்த சாலையிலிருந்து பள்ளத்தாக்குகளில் வாகனங்கள் கவிழும் வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் பயணிப்பது, மரணத்தை நோக்கி செல்வதற்கு சமமாக கூறப்படுகிறது.
Picture credit: thenewswheel

04. ஹல்செம நெடுஞ்சாலை- பிலிப்பைன்ஸ்
கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த மலைச் சாலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டுமே செல்வது பாதுகாப்பானதாக குறிப்பிடப்படுகிறது. மீதமுள்ள 10 மாதங்களிலும் அதி கனமழை பெய்வதால், நிலச்சரிவும், விபத்து அபாயமும் அதிகம். இந்த சாலையில் பயணிக்கும்போது எந்த நேரத்திலும், எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலைதான் உள்ளது. அதேநேரத்தில், இந்த ஆபத்தையும் மீறி, இங்கே கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை காண பல சுற்றுலாப் பயணிகளும், ஓட்டுனர்களும் ரிஸ்க் எடுத்து வீழ்ந்த சம்பவங்களும் அதிகம்.
Picture credit: Leocadio Sebastian/Wiki Commons

05. பாசேஜ் டி கோயிஸ்- பிரான்ஸ்
அட்லாண்டிக் கடல்பகுதியில் பிரான்ஸ் நாட்டின் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் உள்ள நாயர்மோட்டியர் தீவுப் பகுதியையும், பிரான்ஸ் கடலோரத்தையும் இணைக்கும் இந்த சாலை உலகின் அதிபயங்கர சாலைகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. 4.3 கிமீ நீளமுடைய இந்த சாலையை கடந்து வரும் ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் உயிரை பணயம் வைத்தே வர வேண்டியிருக்கும். படத்தில் பார்க்கும்போது சாதாரணமாகவே காட்சியளிக்கும் இந்த சாலையில், எந்த நேரத்திலும் கடல் நீரால் மூழ்கும் அபாயம் உள்ளது. அப்போது இந்த சாலையை கடக்கும் கார் உள்ளிட்ட வாகனங்கள் கடலில் இழுத்துச் செல்லப்படும் நிகழ்வுகளும், வாய்ப்புகளும் அதிகமுண்டு. நாள் ஒன்றுக்கு இரண்டு முறை கடல்நீரால் இந்த சாலை மூழ்கடிக்கப்படும். சில சமயங்களில் ஐஸ் கட்டிகளால் மூடப்படும் ஆபத்தும் இருக்கிறது.
Picture credit: sylvia vue/Flickr

06. ஸ்கிப்பர்ஸ் கேன்யோன் சாலை- நியூசிலாந்து
இந்த சாலையில் செல்பவர்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் க்ளைம் கிடைக்காது என்றால், இதன் கோர முகத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். நியூசிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் இந்த மலைச்சாலையில் எப்போது நிலச்சரிவு ஏற்படும் என்பதே தெரியாது. சில வேளைகளில் திடீர் காட்டாற்று வெள்ளத்தால், சாலைகள் அறுந்தோடி விடும். கவனிக்கமால் செல்லும் வாகன ஓட்டிகள் ஜல சமாதியாகும் வாய்ப்புகள் அதிகமாம். இந்த சாலையில் எதிரெதிரே வாகனங்கள் மாறுவது என்பது மிகவும் கடினமாக காரியம். இந்த அபாயகராமன சாலை 26.5 கிமீ நீள்கிறது.
Picture credit: YSander/Wiki Commons

07. காரகோரம் ஹைவே- சீனா- பாகிஸ்தான்
சீனா- பாகிஸ்தான் நாடுகளை இணைக்கும் காரகோரம் நெடுஞ்சாலை, உலகின் அதி உயரத்தில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலை என்ற பெருமைக்குரியது. பெரும்பாலும் மலைச் சாலையாக அமைந்திருப்பதோடு, பனிப்பொழிவு, திடீர் வெள்ளம் போன்ற காரணங்களால் மிகவும் அபாயகரமானதாகவும் இருக்கிறது. இங்கு தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டமும் அதிகம். இவையெல்லாவற்றையும் சமாளித்து வந்தால், அதி உயரத்தில் இருப்பதால், சிலருக்கு மூச்சுத் திணறல் போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
Picture credit: Colegota/Wiki Commons

08. டியான்மென் மவுன்டெயின் ரோடு- சீனா
உலகின் மிக மோசமான சாலைகளில் இந்த சீன சாலையும் ஒன்று. 11 கிமீ தூரத்துக்கு நீளமும் இந்த அபாயகரமான மலைச்சாலையில், 99 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த சாலையில் எதிரில் வரும் வாகனங்களை கவனமாக கடந்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறதாம்.பக்கவாட்டில் தடுப்பு வைக்ப்பட்டிருந்தாலும், அதிவேகத்தில் வரும்போது அந்த தடுப்புகள் பலன் தராது. சற்றே தடுமாறினாலும், பல ஆயிரம் அடி கீழே உருண்டு விட வேண்டியிருக்கும். ஆனால், இந்த சாலையின் கட்டமைப்பு மிக அற்புதமாக இருப்பதை காண பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
Picture credit: Dennis Grice/Flickr

09. ஐர் ஹைவே- ஆஸ்திரேலியா
ஒரே நேரான சாலையை விரும்பாதார் யாரும் இருக்க முடியாது. ஆம், இந்த சாலை ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நேர் சாலை என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த சாலை 145.6 கிமீ தூரத்திற்கு நூல் பிடித்தது போன்ற நேராக அமைந்துள்ளது. அடடா, அப்போ ஏன் இந்த அதிபயங்கர லிஸ்ட்டில் வந்தது என்று ஐயம் எழுவது சகஜம். ஆம், நேராக இருப்பதே பல விபத்துக்கு காரணமாக அமைகிறதாம். அதாவது, அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தும்போதே அல்லது, எதிரில் வரும் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி பல உயிர்களை காவு வாங்கிவிடுகிறதாம். அத்துடன், இந்த சாலையில் ஆள் நடமாட்டம் குறைவு என்பதால், அவசர உதவி கிடைப்பதிலும் சிரமம் இருக்கிறது. அத்துடன், ஒட்டகம், கங்காரு போன்ற விலங்குகள் சாலையை கடக்கும்போதும் விபத்து ஏற்படுகிறதாம். இதனால், இந்த சாலையை 'கசாப்பு' சாலை என்றும் குறிப்பிடுகின்றனர்.
Picture credit: Dennis Grice/Flickr

10. ஸோஜி லா பாஸ்- இந்தியா
காஷ்மீரில் அமைந்திருக்கும் இந்த ஸோஜி லா கணவாய் கடல் மட்டத்திலிருந்து 3.5 கிமீ உயரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ- நகர்- லே இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 1-டி என்ற பெருமைக்குரிய இந்த சாலையின் 9 கிமீ தூரமுடைய பகுதி மிகவும் ஆபத்தானதாக குறிப்பிடப்படுகிறது. ஆண்டின் பெரும்பாலான நாட்களில் சூறாவளி, கடும் பனிப்பொழிவு, நிலச்சரிவு போன்றவற்றால் இந்த சாலை அதிகம் பாதிக்கப்படுகிறது. இந்த சாலையில் பெரும்பாலும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களே சிறந்தது. நல்ல சீதோஷ்ண நிலையில் கூட, பெரும் பள்ளத்தாக்குகள் நிறைந்த இந்த மலைச்சாலையில் செல்வது மிகவும் அபாயகரமானதாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications








