டொயோட்டா பெருசா குறி வெச்சிடுச்சு... 2025க்குள்ள முடிக்குறது தான் டார்க்கெட்! பல ஆயிரம் கோடிகளை வாரி இறைக்குது
டொயோட்டா (Toyota), பிரபல ஜப்பானிய கார் நிறுவனம் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். கார்களை உற்பத்தி செய்வதுடன், ஆட்டோமொபைல் தொடர்பான பல்வேறு வணிகங்களில் டொயோட்டா ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்க ஏர் டாக்ஸி வாகனங்களை வடிவமைக்கும் நிறுவனத்துடன் டொயோட்டா பல வருடங்களாக கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணியில் அடுத்ததாக நடைபெற உள்ளது என்ன? அமெரிக்க ஏர் டாக்ஸி நிறுவனத்தில் டொயோட்டா புதியதாக எவ்வளவு தொகையை முதலீடு செய்யவுள்ளது? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திரைப்படங்களில் எதிர்காலத்தில் நடப்பதுபோல் காட்டினாலே சாலையில் செல்வதுபோல் வானத்தில் பறக்கும் பைக் & கார்களை காட்டுவதை பார்த்திருப்பீர்கள். அவ்வாறான திரைப்படங்களை பார்க்கும் போதெல்லாம், இதுபோன்று நடப்பதற்கு வாய்ப்புள்ளதா என்கிற கேள்வி நம் மனதினுள் எழும். ஆனால், அந்த எதிர்கால உலகினுள் மெதுவாக நுழைந்துக் கொண்டிருக்கிறோம் என சொன்னால் நம்ப முடிகிறது.

ஆம், வானில் பறக்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏர் டாக்ஸி சேவைக்கான வாகனங்களை உருவாக்கும் பணிகளில் பல நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஒரு அமெரிக்க ஏர் டாக்ஸி நிறுவனம் தான் ஜோபி ஆவியேஷன் (Joby Aviation) ஆகும்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஒரு ஏர் டாக்ஸி ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் இந்த ஜோபி ஆவியேஷன் ஆகும். அதாவது, இந்த நிறுவனம் துவங்கப்பட்டு சில வருடங்கள் மட்டுமே ஆகிறது. இந்த அமெரிக்க நிறுவனத்தில்தான் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா சுமார் 50 கோடி டாலர்களை முதலீடு செய்கிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.4,202 கோடிக்கும் அதிகமாகும்.

ஜோபி ஆவியேஷன் நிறுவனம் 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் கமர்ஷியல் பயன்பாட்டிற்கான ஏர் டாக்ஸிகளை உருவாக்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்கு நிதியுதவி அளித்து ஜோபி ஆவியேஷனின் வேலைகளை டொயோட்டா மேலும் வேகப்படுத்தி உள்ளது. ஜோபி ஆவியேஷனில் டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துள்ளது. தற்போதைய முதலீட்டின் மூலமாக ஜோபி ஆவியேஷனில் டொயோட்டாவின் மொத்த முதலீட்டு தொகை 89.4 கோடி டாலர்களாக அதிகரித்துள்ளது.
புதிய 50 கோடி டாலர்கள் முதலீட்டு தொகையை இரு பிரிவுகளாக வழங்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இதில் முதல் தொகை இந்த 2024ஆம் ஆண்டிற்குள் கலிஃபோர்னியாவின் சாண்டா க்ரூஸில் வைத்து வழங்கப்பட உள்ளது. மீதி முதலீட்டு தொகையை அடுத்த 2025ஆம் ஆண்டில் ஜோபி ஆவியேஷன் நிறுவனத்தின் திட்டங்களுக்கு ஏற்ப வழங்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

ஏர் டாக்ஸி சேவையில் ஜோபி ஆவியேஷன் நிறுவனம் பயன்படுத்த இருப்பது அனைத்தும் எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய ஏர் வாகனங்கள் ஆகும். முதற்கட்டமாக துபாயில் 2025ஆம் ஆண்டின் இறுதியில் கமர்ஷியல் ஏர் டாக்ஸி சேவையை துவங்க உள்ளதாக ஏற்கனவே ஜோபி ஆவியேஷன்ஸ் அறிவித்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டங்கள் 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் துவங்கப்பட உள்ளன.
ஜோபி ஆவியேஷன் தற்போதுவரையில் 3 விதமான ஏர் டாக்ஸி வாகனங்களை வடிவமைத்து வைத்துள்ளது. இத்தகைய நிறுவனத்தில் புதிய 50 கோடி டாலர் முதலீடு குறித்து வட அமெரிக்காவுக்கான டொயோட்டா மோட்டாரின் சிஇஓ டெட்சூ ஒகாவா கூறுகையில், "இந்த கூடுதல் முதலீட்டின் மூலம், ஜோபி அவர்களின் விமானங்களுக்கு சான்றிதழை பெற்று, வணிக ரீதியான உற்பத்திக்கு மாறுவதை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜோபி ஆவியேஷன் உடன் டொயோட்டா நிறுவனம் 2020இல் இருந்து கூட்டணியில் உள்ளது. ஆனால், இதற்கு சில வருடங்களுக்கு முன்பு இருந்தே ஜோபி ஆவியேஷன் உடன் டொயோட்டா நெருங்கிய பிணைப்பில் இருந்து வருகிறது. ஆதலால், ஜோபி ஆவியேஷன் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு டொயோட்டாவின் பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும்.


Click it and Unblock the Notifications









