டொயோட்டா கம்பெனிக்காரன் பார்த்தான்னா மெர்சலாகிடுவான்! காரின் விலையை கேட்டால் தூக்கி வாரி போடுது!
உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது என்பதை மனம் ஏற்க மறுத்தாலும், அதுதான் உண்மை. இதற்கு பல காரணங்களை சொல்லலாம். அதிவேகமான பயணம், மது போதையில் வாகனம் ஓட்டுவது என இந்த காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இந்த காரணங்களுக்கு எல்லாம் அடிப்படையானது என்றால் அது போக்குவரத்து விதிமுறைகளை நம்மில் நிறைய முறையாக மதிக்காதது ஆகும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாததுடன், நம்மில் சிலர் சாலையில் ஓட்டும் வாகனங்களை ஏடாக்கூடமாக வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
அதாவது, பைக்கின் சைலன்சரில் இருந்து அதிக இரைச்சல் ஏற்படுவது போன்றும், காரில் பெரிய அளவிலான பம்பர் உடன் சாலையில் செல்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் சிலர் தங்களது வாகனங்களை மாற்றி பயன்படுத்துவதை சாலையில் பரவலாக பார்க்க முடிகிறது. இவை எல்லாம், மற்றவர்களிடம் இருந்து தங்களது கார் அல்லது பைக் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக செய்யப்படுவது ஆகும்.

அதேபோல் சிலர், நல்ல தரத்தில் இல்லாத வாகனங்களை சாலையில் பயன்படுத்துவதையும் பார்க்க முடியும். அதாவது, நீண்ட காலமாக சர்வீஸ் செய்யாத, இயங்கும்போது இரைச்சலை ஏற்படுத்தக்கூடிய வாகனங்கள் சாலையில் இயங்கப்படுவதை பார்த்திருப்பீர்கள். அத்தகைய வாகனங்களின் சைலன்சரில் இருந்து அதிக புகை வெளிவருவதும் கூட சாலையில் செல்லும் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
பெரிய பிரச்சனைகள் என்று மட்டுமின்றி, சில நேரங்களில் சிறிய பிரச்சனைகள் கூட பெரிய விபத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படித்தான், இங்கு ஒருவர் தனது டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரில் வெளிப்பக்கத்தில் பொருத்தப்படும் சைடு மிரருக்கு பதிலாக, முகம் பார்க்க உதவும் வழக்கமான கண்ணாடியை பொருத்தி பயன்படுத்தி உள்ளார்.

காரின் இடது பக்க சைடு மிரர் உடைந்த காரணத்தினால், அதன் இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை டேப் (Tape) மூலம் கட்டி பயன்படுத்தி உள்ளார். ஒடிசா (Odisha) மாநில நம்பர் பிளேட் இந்த ஃபார்ச்சூனர் கார் உள்ளதால், இந்த வீடியோ ஒடிசா மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான காரில் இத்தகைய கண்ணாடியை பார்க்கும்போது சிரிப்பு வருவதுடன், காரின் உரிமையாளரின் அஜாக்கிரதையை கண்டு கோபமும் வருகிறது. இவ்வாறான கண்ணாடியை காரில் பயன்படுத்துவதினால் என்ன பிரச்சனை ஏற்பட்டுவிட போகிறது? என உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இதில் நிறைய மோசமான பின் விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
நாம் முகம் பார்க்க பயன்படுத்தும் கண்ணாடிக்கும், கார் உள்ளிட்ட வாகனங்களில் பயன்படுத்தும் கண்ணாடிகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. இரண்டுமே ஒரே மாதிரியாக இருப்பது இல்லை என்பது தினந்தோறும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தெரிந்திருக்கும். சாதாரணமான முகம் பார்க்கும் கண்ணாடியில் எந்தவொரு இரசாயன மாற்றமும் இருக்காது. எதிரில் இருப்பவற்றை அப்படியே காட்டக்கூடியதாக முகம் பார்க்கும் கண்ணாடிகள் உள்ளன.
ஆனால், காரில் வழங்கப்படும் கண்ணாடிகள் அதிக பிம்பங்களை குறுகிய இடத்திற்குள் குவிக்கக்கூடியவைகளாக வழங்கப்படுகின்றன. அதனால்தான், பின்னால் முழு சாலையும் சிறிய சைடு மிரர்களில் பார்க்க முடிகிறது. காருக்குள் முன் இருக்கையில் அமர்பவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய கண்ணாடி (IRVM) ஆனது பின்னால் வரும் வாகனங்களின் ஹை பீம் வெளிச்சத்தை குறைத்து காட்டக்கூடிய அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக இன்றைய கால கார்களில் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பயணத்தின் போது எதிர்பாராத விதமாக சிறு மோதலினால் சைடு மிரர் உடைந்துவிட்டது என்றால் இவ்வாறு தற்காலிக தீர்வுகளை பயன்படுத்தலாம். ஏனெனில், சைடு மிரர் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சிரமம். ஆனால், இதனை தற்காலிகமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். முடிந்தவரையில் விரைவாக காருக்கான சைடு மிரர்ரை வாங்கி பொருத்துவது பாதுகாப்பானது.


Click it and Unblock the Notifications








