லட்ச ரூபாய்களில் காரை வாங்கிட்டு, நாசம் பண்றாங்க!! போலீஸ் பார்த்தால் கொத்தா தூக்கிட்டு போயிடுவாங்க!
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் ஒருவர் காரில் வழக்கமான சக்கரங்களுக்கு பதிலாக 26-இன்ச்சில் அலாய் சக்கரங்களை பொருத்தி அழகு பார்த்துள்ளனர். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், ஒருபக்கம் கார்கள் மாடிஃபை செய்யப்படுவது நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக, கார்களில் வழக்கமான சக்கரங்களை நீக்கி, பெரிய அளவிலான அலாய் சக்கரங்களை பொருத்தி பயன்படுத்துவது நம் இந்தியர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

எந்தவொரு காரிலும் சக்கரங்கள் மிக முக்கியமான பாகம் ஆகும். கார்களில் பொருத்தப்படும் சக்கரங்களின் அளவானது பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கும், சோதனைகளுக்கும் பின்பே நிர்ணயிக்கப்படுகிறது. காரின் எடையில் இருந்து பிரேக் வரையில் நிறைய விஷயங்களை பொறுத்தே சக்கரங்களின் அளவுகள் வேறுப்படுகின்றன. ஆனால், நிறைய மெக்கானிக்குகள் கார் ஓனர்களின் விருப்பத்தின்பேரில் பெரிய அளவிலான சக்கரங்களை பொருத்துகின்றனர்.
அந்த வரிசையில், இங்கு ஒரு டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஓனர் ஒருவர் தனது வெள்ளை நிற ஃபார்ச்சூனர் காரில் சுமார் 26-இன்ச்சில் அலாய் சக்கரங்களை பொருத்தி திடுகிட செய்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இவ்வளவு பெரிய அலாய் சக்கரங்களை காரில் பொருத்தியது மட்டுமில்லாமல், சக்கரங்களுக்கு உள்ளே பளிச்சிடும் எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட்டு உள்ளதை காணலாம்.

இதற்காக, இந்த ஃபார்ச்சூனர் காரை அதிகாரிகளால் பறிமுதல் செய்ய முடியும். அதுமட்டுமின்றி, வேறொரு காரணத்திற்காகவும் இந்த வீடியோவின் அடிப்படையில் இந்த கார் உரிமையாளர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஏனெனில், வீடியோவில் காரை அதே சாலையில் யு-டர்ன் அடித்து கொண்டு சென்றுள்ளனர். அதாவது, சாலையின் எதிர்திசையில் கார் ஓட்டப்பட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் காரின் விலை குறைவான வேரியண்ட்களில் 17 இன்ச்சிலும், டாப் வேரியண்ட்களில் 18 இன்ச்சிலும் அலாய் சக்கரங்களை வழங்குகிறது. ஆக, எவ்வளவு பெரிய சக்கரங்களை இந்த குறிப்பிட்ட ஃபார்ச்சூனர் கார் ஓனர் பொருத்தியுள்ளார் என்பதை பாருங்கள். இந்த 26-இன்ச் சக்கரங்களை பொருத்துவதற்கு முன்பு, 22-இன்ச்சிலும் சக்கரங்களை இதே ஃபார்ச்சூனர் கார் ஓனர் தனது காரில் பொருத்தி பயன்படுத்தி வந்துள்ளார்.

அதாவது, 22 இன்ச் சக்கரங்களும் போதாத காரணத்தினால், 26 இன்ச்சில் சக்கரங்களை இந்த நபர் பொருத்தியுள்ளார். பெரிய அளவிலான சக்கரங்கள் காரின் செயல்படுதிறனை நிச்சயமாக அதிகரிக்காது. ஏனெனில், ஏற்கனவே கூறியதுபோல் எந்தவொரு காரிலும் முடிந்த வரையில் அதிக செயல்படுதிறனை பெறும் வகையில் பல்வேறு கணக்கீடுகளுக்கு பிறகே சக்கரங்களின் அளவுகளும், வடிவமும் தீர்மானிக்கப்படுகிறது.
பெரிய சக்கரங்கள் காரின் பெர்ஃபார்மன்ஸை அதிகரிக்கும் என்றால் காரை உற்பத்தி செய்யும் நிறுவனமே தொழிற்சாலையில் வைத்து பொருத்தியிருக்கும் அல்லவா... பெரிய அளவிலான சக்கரங்கள் காரை ஹேண்டில் செய்வதை கடினமாக்குகின்றன. ஏனெனில், பெரிய அலாய் சக்கரங்கள் பொதுவாகவே எடைமிக்கவை ஆக இருக்கும். இதன் காரணமாக, கூடுதல் ஆக்ஸலரேஷன் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், காரின் மைலேஜ் குறையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மிகவும் சில டொயோட்டா கார்களுள் ஃபார்ச்சூனரும் ஒன்றாகும். இதற்கு முக்கிய காரணம், வலிமையான செயல்படுதிறனை இந்த கார் வழங்குகிறது என்பது மட்டுமில்லாமல், ஃபார்ச்சூனரை மாடிஃபிகேஷன் செய்வதும் எளியதாக உள்ளது. இருப்பினும், இவ்வாறான மாடிஃபிகேஷன்கள் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.


Click it and Unblock the Notifications









