கார்களில் சீன் காட்டியவர்களுக்கு நேர்ந்த கதி! பாவம்... இப்படி ஆகும்னு கனவுல கூட நெனச்சிருக்க மாட்டாங்க!
பொது சாலைகளில் வாகனங்களில் ஸ்டண்ட் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. சமூக வலை தளங்களில் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த ஆபத்தான செயல்களில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய நபர்கள் மீது போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனாலும் கூட வாகன ஸ்டண்ட் விதிமுறை மீறல்கள் குறைந்தபாடில்லை. சண்டிகரில் சமீபத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் இதற்கு உதாரணம். சண்டிகரில் வெகு சமீபத்தில் நிறைய டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார்கள் மற்றும் மஹிந்திரா தார் (Mahindra Thar) கார்கள் பேரணியாக அணிவகுத்து வந்தன.

அப்போது ஒரு சில கார்களில் ஒரு சிலர் ஜன்னல் வழியாக வெளியே தொங்கி கொண்டு வந்தனர். இன்னும் ஒரு சிலரோ, கார் மேற்கூரையின் மீது அமர்ந்து பயணம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் (Viral Video) ஆனது. இதையடுத்து சண்டிகர் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து, விதிமுறை மீறப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு சண்டிகர் காவல் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அத்துடன் வட்டார போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் (Regional Transport Office - RTO), இந்த வீடியோவை அவர்கள் அனுப்பி வைத்தனர்.
சம்பந்தப்பட்ட கார்களின் உரிமையாளர்களுடைய டிரைவிங் லைசென்ஸை (Driving Licence) ரத்து செய்யும்படியும் அவர்கள் பரிந்துரை செய்தனர். இதன் பேரில் விதிமுறைகளை மீறி ஸ்டண்ட் செய்த டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மஹிந்திரா தார் ஆகிய கார்களின் உரிமையாளர்களுடைய டிரைவிங் லைசென்ஸ் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 3 பேரின் டிரைவிங் லைசென்ஸ் தற்போது ரத்தாகியுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது சாலைகளில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்வது தவறான விஷயம் என்பதை இனிமேலாவது அனைவரும் உணர வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை பொறுத்தவரையில், பொது சாலைகளில் வாகனங்களில் ஸ்டண்ட் செய்வது விதிமுறை மீறல் ஆகும். இத்தகைய நிகழ்வுகள், ஸ்டண்ட் செய்பவர்களுக்கு மட்டுமல்லாது, சாலைகளில் பயணம் செய்யும் மற்றவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் அனாவசியமாக உயிரிழப்புகள் ஏற்படுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலை தளங்களில் லைக்குகள் கிடைக்கிறது என்பதற்காக, விதிமுறைகளை மீறக்கூடாது. அத்துடன் சாலையில்தான் காவல் துறை அதிகாரிகள் யாரும் இல்லையே என யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். தற்போதெல்லாம் தொழில்நுட்பம் நன்றாக வளர்ந்து விட்டது. ஆங்காங்கே கேமராக்களை வைத்து காவல் துறை அதிகாரிகள் அனைத்தையும் கண்காணித்து கொண்டுள்ளனர் என்பதை அனைவரும் மனதில் வைத்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications