போலீசாரிடம் தப்பிக்க மேஜிக் நம்பர் பிளேட்டுடன் வலம் வரும் ஃபார்ச்சூனர்... வைரல் வீடியோ!
மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. MH14 LN 4888 என்ற பதிவு எண்ணைக் கொண்ட இந்த வெள்ளை நிற ஃபார்ச்சூனர், வெவ்வேறு பதிவு எண்கள் கொண்டதாக வலம் வருகிறது. தேவைப்படும்போது பட்டனை அழுத்தினால் நம்பர் பிளேட் மாறிக் கொள்ளும் வகையில் ஒரு மெக்கானிக்கல் அமைப்பை இந்த காரில் பயன்படுத்துவதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகியுள்ளது.
இந்த விவகாரத்தை நச்சிகேத் தேஷ்பாண்டே என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு சுட்டிக்காட்டியுள்ளார். அந்த சமூக வலைத்தள பதிவில், இந்த வாகனத்தின் மீது 55க்கும் மேற்பட்ட முறை விதிமீறல்களுக்காக போக்குவரத்து போலீசார் அபாரதங்களை விதித்துள்ளனர்.

இதுவரை ரூ.1 லட்சத்திற்கும் மேல் அபாரதத் தொகை நிலுவையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிவேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், முறையற்ற நம்பர் பிளேட் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வாகனம் சாலையில் செல்லும்போது அதன் நம்பர் பிளேட் ஒரு பதிவு எண்ணிலிருந்து மற்றொரு பதிவு எண்ணுக்கு மாறும் வகையிலும், நம்பரே இல்லாத வகையிலும் மாற்றும் ஒரு மெக்கானிக்கல் அமைப்பை இந்த காரில் வைத்துள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் இது பயன்படுத்தப்படுவது தெளிவாக தெரிகிறது.
தற்போது கிடைத்துள்ள ஆன்லைன் அபராதத் தகவல்களிலும் MH14LN4888 என்ற பதிவு எண்ணுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அதிவேகம், தவறான பாதையில் வாகனம் இயக்குதல், சீட் பெல்ட் அணியாதது மற்றும் முறையாக நம்பர் பிளேட் காட்டாதது போன்ற பல்வேறு விதிமீறல்கள் பதிவாகியுள்ளன.
இதனால், இத்தனை விதிமீறல்கள் மற்றும் அபராதங்கள் நிலுவையில் இருந்தும் வாகனம் தொடர்ந்து சாலையில் இயங்குவது குறித்து சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. ஏன் இந்த வாகனம் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம், நம்பர் பிளேட்டை மறைக்கும் சாதனம் உண்மையில் எதற்காகவும், அது எவ்வாறு பொருத்தப்பட்டது என்பதையும் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இந்த ஃபார்ச்சூனர் விவகாரம், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எவ்வளவு தீவிரமாக இருக்க வேண்டும் என்பதையும் மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அண்மைச் செய்தி: சம்பந்தப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை பிம்ரி-சிந்த்வாட் பகுதியில் பிடித்து நம்பர் பிளேட்டை மாற்றிய விவகாரத்திற்காக ரூ.4,500 அபராதம் விதித்துள்ளதாகவும், இந்த கார் மற்றும் உரிமையாளருக்கு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
This article has been updated with the latest information. The Fortuner was caught with a switch-operated number-plate cover in Pimpri-Chinchwad, and police are investigating the matter.


Click it and Unblock the Notifications
