நடுநடுங்க வைக்கும் வீடியோ... நெடுஞ்சாலையில் பந்தயத்தில் ஈடுபட்ட கார்-பைக்... எவ்வளவு வேகம் தெரியுமா?
டொயோட்டா பார்ச்சூனர் காரும், ஹோண்டா பைக்கும் நெடுஞ்சாலையில் பந்தயத்தில் ஈடுபட்ட நடுநடுங்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பொது சாலைகளில் ரேஸில் ஈடுபடுவதை இந்திய சாலைகளில் அடிக்கடி பார்க்க முடியும். பைக்குகளும், கார்களும் ரேஸில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்பான செய்தி மற்றும் வீடியோக்களை நாங்களே பல முறை வெளியிட்டிருக்கிறோம். இந்த வரிசையில் இன்று ஒரு வீடியோவை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.

இதில், டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி (Toyota Fortuner SUV) காருடன், ஹோண்டா சிபிஆர் 250ஆர் (Honda CBR 250R) பைக் ஒன்று நெடுஞ்சாலையில் ரேஸில் ஈடுபட்டுள்ளது. இவ்விரு வாகனங்களும் அதிவேகத்தில் இயக்கப்பட்டன. இதில், வெற்றி பெற்றது யார்? என்ன நடந்தது? என்பது தொடர்பான முழுமையான தகவல்களை இனி பார்க்கலாம்.

TBC motovlog என்ற யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ரைடர் ஒருவர் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கில், மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணித்து கொண்டிருப்பதுடன் இந்த வீடியோ தொடங்குகிறது. அப்போது திடீரென டொயோட்டா பார்ச்சூனர் கார் ஒன்று வலது பக்கத்தில், ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கை முந்தி செல்கிறது.

'பந்தயத்திற்கு வா' என அழைப்பது போல் அந்த டொயோட்டா பார்ச்சூனர் முன்னோக்கி செல்கிறது. அடுத்து என்ன நடந்திருக்கும்? என்பதை உங்களால் மிக எளிதாக யூகிக்க முடியும். ஆம், இரண்டு வாகனங்களும் சீறி பாய தொடங்கி விட்டன. ஆரம்பத்தில் டொயோட்டா பார்ச்சூனர்தான் லீடிங்கில் இருந்தது. அத்துடன் அந்த முன்னிலையை சிறிது நேரத்திற்கு தக்க வைத்தும் கொண்டது.

இருந்தபோதும் டொயோட்டா பார்ச்சூனரை விரட்டி பிடிக்க ஹோண்டா சிபிஆர் 250ஆர் ரைடர் முயற்சித்து கொண்டே இருந்தார். இந்த ரேஸ் நடந்தபோது நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதிகள் காலியாகவே இருந்தன. இதனால் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கின் முழு பவரையும் அந்த ரைடரால் பயன்படுத்தி கொள்ள முடிந்தது.

இதன்மூலமாக டொயோட்டா பார்ச்சூனர் கார் மற்றும் ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக்கிற்கு இடையேயான இடைவெளி குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் டொயோட்டா பார்ச்சூனர் காரை ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக், ஓவர்டேக் செய்தே விட்டது. அப்போது பைக்கின் ஸ்பீடோமீட்டர் காட்டி கொண்டிருந்த வேகம் எவ்வளவு தெரியுமா? மணிக்கு 158 கிலோ மீட்டர்கள்!!

இதன்பின் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்தான் முன்னிலை வகித்தது. அத்துடன் டொயோட்டா பார்ச்சூனர் பின்னால் சென்று விட்டது. அதே சமயம் டொயோட்டா பார்ச்சூனர் காரின் டிரைவரும் வேகத்தை குறைத்து விட்டார். வீடியோவை வைத்து பார்க்கையில் அவர் மீண்டும் ரேஸில் இறங்க முயற்சிக்கவில்லை என்பது போல் தெரிகிறது.

அதற்காக டொயோட்டா பார்ச்சூனர் காரை சக்தி குறைவான வாகனம் என கருத வேண்டாம். டொயோட்டா பார்ச்சூனர் காரின் வேகம் குறைக்கப்பட்டதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பார்ச்சூனர் காரின் டிரைவருக்கு ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது உள்ளே இருந்த பயணிகள் வேகத்தை குறைக்க சொல்லியிருக்கலாம். இப்படி எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் மேற்கண்ட சம்பவத்தில், டொயோட்டா பார்ச்சூனரின் டிரைவர் தனது காரின் பவரை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது போலதான் தெரிகிறது. டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி காரானது, 174 பிஎச்பி பவரை உருவாக்கும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 164 பிஎச்பி பவரை உருவாக்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது.

ஹோண்டா சிபிஆர் 250ஆர் மோட்டார்சைக்கிளும் பவர்ஃபுல்லானதுதான். இது டூர் செல்வதற்கு ஏற்ற மாடலாக திகழ்கிறது. இந்த பைக்கில், 249 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 25.7 பிஎச்பி பவரையும், 22.9 என்எம் டார்க் திறனையும் உருவாக்கி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது.

ஆனால் இவ்வாறான ஸ்ட்ரீட் ரேஸ்களை நாங்கள் ஊக்குவிப்பது கிடையாது. ஏனெனில் பொது சாலைகளில் பந்தயத்தில் ஈடுபடுவது மிகவும் அபாயகரமானது. இந்திய சாலைகளை பொறுத்தவரை ஏதேனும் ஒரு விலங்கோ அல்லது மனிதர்களோ திடீரென உங்கள் வாகனத்தின் முன்னால் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. வேறு வாகனங்களும் கூட திடீரென வந்து விடலாம்.

இவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது அவ்வாறு நடந்தால், வாகனத்தை உடனே கண்ட்ரோல் செய்ய முடியாமல் போய் விடும். இதனால் விபத்து நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே பொது சாலைகளில் இவ்வாறு பந்தயம் மேற்கொள்வதையும், அதிவேகத்தில் பயணம் செய்வதையும் தவிர்த்து விடுங்கள்.
அதிவேகத்தில் பயணிக்கும் த்ரில்-லை அனுபவிக்க வேண்டுமென்றால், ரேஸ் டிராக்கிற்கு சென்று விடுங்கள். அங்கு பாதுகாப்பாக உங்கள் வாகனத்தின் பெர்ஃபார்மென்ஸை அனுபவிக்கலாம். அதை விடுத்து, பொது சாலைகளில் இவ்வாறு அதிவேகத்தில் வாகனம் ஓட்டி, மற்றவர்களுக்கு சேர்த்து பாதிப்பை உண்டாக்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications








