கார் வைத்திருப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த கொள்ளையர்கள்! வெறும் ரெண்டே நிமிஷத்தில் இதை செய்ய முடியுமா!
முந்தைய காலங்களை போல் அல்லாமல், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் தற்போது மிகவும் பாதுகாப்பானவையாக உள்ளன. ஆனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் என்னதான் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை வாரி வழங்கினாலும், கொள்ளையர்கள் புதுப்புது வழிகளை கண்டறிந்து, அவற்றை திருடி சென்று விடுகின்றனர்.
இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் ஒன்று, இரண்டே நிமிடங்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், நிகழ்விடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

காரை திருடி சென்ற கொள்ளையன், ஸ்கூட்டர் ஒன்றின் பின் பகுதியில் அமர்ந்து வருவதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. ஸ்கூட்டரில் இருந்து கீழே இறங்கிய ஒரு சில வினாடிகளில், அவர் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் கதவுகளை திறந்து விடுகிறார். இந்த வீடியோவில், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஹசார்டு விளக்குகள் ஒளிர்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
எனவே காரின் அலாரம் ஒலித்திருக்கலாம். ஆனால் வீடியோவில், நிகழ்விடத்தின் ஆடியோ இல்லாத காரணத்தால் நம்மால் இதை உறுதி செய்ய முடியவில்லை. இதற்கிடையே கொள்ளையன் எந்த பிரச்னையும் இல்லாமல், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை ஓட்டி சென்று விடுகிறார். உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கான்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களால் இன்னும் கொள்ளையர்களை கண்டறிய முடியவில்லை. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கார்களில் திருட்டை தடுப்பதற்காக தற்போது பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் கீலெஸ் ஃபாப்ஸ் (Keyless Fobs) உடன் வரும் நவீன கால கார்கள்தான், திருட்டு அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன என்பது நாம் மறுக்கவே முடியாத மிகவும் கசப்பான உண்மையாக இருக்கிறது. உண்மையான கீ இல்லாமல், டூப்ளிகேட் கீ மூலமே இந்த கார்களை கொள்ளையர்கள் திருடி செல்கின்றனர்.
இந்த டூப்ளிகேட் கீ-யை உருவாக்க தேவைப்படுவதெல்லாம் வெறும் விஐஎன் (Vehicle Identification Number - VIN) எண்ணும், செக்யூரிட் பின்-னும் மட்டும்தான். இதனை டீலர்ஷிப்களிலேயே பெற முடியும். இந்த தகவல்களை வைத்து கொண்டு, கொள்ளையர்களால் டூப்ளிகேட் கீ-ஃபாப்களை தாராளமாக உருவாக்க முடியும். இதன் மூலம் எந்த பிரச்னையும் இல்லாமல் காரை கொள்ளையடித்தும் செல்ல முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கான்பூரில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்வு, நாங்கள் மேலே கூறியுள்ள வழிமுறையின்படிதான் நடைபெற்றிருக்கும் என கருதப்படுகிறது. காலம் மாறி கொண்டே வருவதால், இது போன்ற திருட்டு நிகழ்வுகளை தடுக்க, கார் உரிமையாளர்கள்தான் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








