தேர்தல் பணிக்கு தனியார் காரை நள்ளிரவில் பறிமுதல் செய்ய முயற்சி? ஜெய்ப்பூரில் பரபரப்பு
இந்தியாவில் தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிக்காக, சட்டப்பூர்வ நடைமுறைகளின் கீழ் தனியார் வாகனங்களை அரசு நிர்வாகம் தற்காலிகமாக கையகப்படுத்தி பயன்படுத்திக் கொள்வது நடைமுறையில் உள்ளது. ஆனால், தேர்தல் பணிக்காக நள்ளிரவில் குடும்பத்துடன் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரின் சொந்த பயன்பாட்டு வாகனத்தை அங்குள்ள வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்ய முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி தனது குடும்பத்தினர், பெண்கள் மற்றும் செல்லப் பிராணியுடன் நள்ளிரவில் ஒருவர் தனது சொந்த பயன்பாட்டிற்கான டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux) பிக்கப் டிரக்கில் பயணித்துள்ளார். ஜெய்ப்பூர் வி.கே.ஐ பகுதியில் உள்ள கேதான் மருத்துவமனை அருகே அவர்களின் வாகனம் வந்தபோது, வித்யாதர் நகர் ஆர்டிஓ வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அனில் பாஸ்வால் தலைமையிலான குழுவினர் வாகனத்தை மறித்துள்ளனர்.

அப்போது ஜெய்ப்பூர் ஆட்சியரின் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகளின் தேர்தல் பணிக்காக நகரில் உள்ள 18 ஹைலக்ஸ் ரக கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும், எனவே உங்களது வாகனத்தையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த குடும்பத்தினரிடம் அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது.
நள்ளிரவு வேளையில், பெண்கள் மற்றும் வளர்ப்புப் பிராணியுடன் சாலையில் இறக்கிவிடப்பட்டால் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த அந்த குடும்பத்தினர், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். மாற்று ஏற்பாடு செய்யும் வரை சில நிமிடங்கள் அவகாசம் தருமாறு கோரியபோதிலும், அதிகாரிகள் அதைக் கண்டுகொள்ளாமல் அவர்களை வாகனத்தில் இருந்து கட்டாயப்படுத்தி இறக்கியதாகக் கூறப்படுகிறது.
அங்கு இருந்த பெண்களிடம் அதிகாரிகள் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை சம்பவத்தின் ஆடியோ பதிவு மூலம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.. இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அவரது தம்பிக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சிறையில் அடைப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், லண்டனுக்குச் சென்று புகார் அளித்துக் கொள்ளுங்கள், என அலட்சியமாகப் பதிலளித்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் முழுவதையும் தங்களது மொபைல்போனில் ஒலிப்பதிவு (Audio Recording) செய்து வைத்துள்ளதாகவும், அங்கு இருந்த பொதுமக்கள் பலரும் இந்தச் சம்பவத்திற்குச் சாட்சியாக உள்ளனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தேர்தல் பணிக்காக வாகனங்களை எடுப்பதற்குச் சில சட்ட விதிகளும், முன்னறிவிப்பு நடைமுறைகளும் இருக்கும்போது, குடும்பத்துடன் செல்லும் ஒரு தனியார் வாகனத்தை நடுரோட்டில் இப்படிப் பறிமுதல் செய்ய முயன்றதும், பெண்களிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகாரும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவுகளை ஆய்வு செய்து, தவறு இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்த உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications


