பஸ், டாக்ஸிகளுக்கு அதிரடி உத்தரவு! அக். 30க்குள் இதை செய்யவிட்டால் பெர்மிட் ரத்தாகும்!
பஸ்கள் மற்றும் டாக்ஸிகளில் வரும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் பேனிக் பட்டன் உடன் கூடிய டிராக்கிங் கருவியைப் பொருத்தவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மீறினால் அந்த வாகனத்திற்கான பெர்மிட் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பொதுமக்களால் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் ஒரு இடம் விட்டு ஒரு இடம் செல்ல இது போன்ற வாகனங்கள் மிக அவசியமான தேவையாக இருக்கிறது. அதே நேரம் பொது போக்குவரத்து என்பது பாதுகாப்பு குறைந்த போக்குவரத்து வசதியாகவும் உள்ளது. பொதுப் போக்குவரத்தால் பல குற்றச் சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநில அரசு அம்மாநிலத்தில் இயங்கும் பொது போக்குவரத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பாதுகாப்பு கருவிகளைப் பொருத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் இயங்கும் பொது போக்குவரத்து வாகனங்களில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் பேனிக் பட்டன் உடன் கூடிய டிராக்கிங் கருவியைப் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதற்குள் இதைச் செய்யாவிட்டால் அவர்களது பெர்மிட் மற்றும் ஃபிட்னஸ் சான்றிதழ் புதுப்பிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செனாசிஸ் சக்ரவர்த்தி போட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது:" முன்பு இந்த பேனிக் பட்டனுடன் கூடிய டிராக்கிங் கருவி ரூபாய் 8000 முதல் 10 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது இதன் விலை ரூபாய் 5000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி பொருத்தப்பட்டால் எங்களுக்கு வாகனங்களை டிராக் செய்வது சுலபமாக இருக்கும். அது மட்டுமல்ல வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இது நிச்சயம் பாதுகாப்பான விஷயமாக இருக்கும். இதில் உள்ள பேனிக் பட்டன் வாகனங்களில் பயணிகளுக்கு முக்கியமாகப் பெண்களுக்குப் மிகப்பெரிய பாதுகாப்பை வழங்கும்.
வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக இந்த பேனிக் பட்டனை அழுத்தி அலாரத்தை ஒலிக்கச் செய்யலாம். ஏற்கனவே 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பஸ்கள் வரை இந்த பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்களும் விரைவில் பொருத்துவார்கள் எனக் கூறினார்.

பஸ் இயக்குபவர்கள் கூறும்போது: " இந்த கருவியை வாங்கி பொருத்துவது பெரிய பெரிய பஸ் நிறுவனங்களுக்குச் சாதாரண விஷயம் தான். ஆனால் சிறிய சிறிய பஸ் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் சுமையாக இருக்கிறது. பல பஸ் நிறுவனங்கள் ஒரு நாளுக்கு இரண்டு முதல் நான்கு டிரிப்கள் தான் எடுத்து வருகின்றனர்.
அது போன்று பஸ்களிலும் இதுபோன்ற கருவியை ரூபாய் 5000 கொடுத்து வாங்கிப் பொருத்துவது பெரும் சுமையாக இருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதால் அந்த சுமையைத் தாங்க முடியாமல் பஸ் ஆப்பரேட்டர்கள் தவிர்த்துவருகின்றனர். பலர் இந்த தொழிலை விட்டே வெளியே போய்விடலாம் என்ற மன நிலையில் இருக்கின்றனர.
தற்போது இந்த கருவியையும் வாங்கிப் பார்க்க வேண்டும் என்பது அவர்களுக்கு மேலும் சுமையைக் கூட்டும். இதனால் சிறிய சிறிய பஸ் ஆபரேட்டர்களுக்கு தற்போது அரசாங்கமே இது போன்ற கருவியை வாங்கி பொருத்தும் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும்" எனக் கூறுகின்றனர். மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தா பகுதியில் மட்டும் மொத்தம் 16 ஆயிரத்து நானூறு தனியார் பஸ்களும் 35 ஆயிரம் டாக்ஸிகளும் தற்போது இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பொதுபோக்குவரத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பது முக்கியமான தேவையாக இருக்கிறது. இரவு நேரங்களில் பொது போக்குவரத்து வாகனங்களில் பல குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதைத் தடுக்க வாகனங்களில் டிராக்கிங் கருவியைப் பொருத்த வேண்டியது அவசியம். இதற்காக மேற்குவங்க மாநில அரசு எடுத்துள்ள முடிவு நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. இதுபோல மற்ற மாநிலங்களும் குறிப்பாகத் தமிழகமும் பொது போக்குவரத்தில் டிராக்கிங் கருவியை கட்டாயம் ஆக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









